Thursday, 8 December 2016

திங்கிங் ஆன் மை ஃபீட் (சாருஹாசன்)

கமல்ஹாசனை இப்போது எனக்கு ரொம்ப பிடிக்கிறது. அவரது திரைப்படங்களுக்காக என்றால் மறுபடியும் ஏமாந்து போவீர்கள்.

நேற்று படித்து முடித்த புத்தகம்!

அவர் ஒரு வழக்குரைஞர் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அவரிருந்த ஊரை வைத்து ஏதோஸ்மால் டைம்வக்கீலாக இருந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரோ அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமான வக்கீலாக இருந்திருக்கிறார். அதை விட அப்போதைய ஆளும் கட்சியில் மாவட்ட அளவில் நிர்வாகிகளை தீர்மானிக்கக் கூடிய அபரிதமான அதிகாரம் அவரிடமிருந்திருக்கிறது.

வைணவர். ஆனால் அவர் தனது குருவாக கருதியது அவருடன் அரசியல் கைதியாக சிறையில் இருந்த யாகூப் ஹாசன் என்ற இஸ்லாமியர்.  அந்த அபிமானத்தில் தனது மகன்களுக்கு அவர் வைத்த பெயர்கள் சந்திரஹாசன், சாருஹாசன் மற்றும் கமலஹாசன்.

ஸ்ரீனிவாசன் ஐயங்கார்!

சொல்லிக் கொள்வதற்கு எவ்வளவோ இருப்பினும், கமல்ஹாசன் தனது தந்தையைப் பற்றி பேட்டிகளில் அதிகம் பெருமையடித்துப் பார்த்ததில்லை. நான் கமலஹாசன் பள்ளிக்கே செல்லாததை வைத்து ஏதோ ஏழ்மை அல்லது அசாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்று நினைத்து வந்தேன்.

நண்பர் ஒருவர் கொடுத்தனுப்பிய சாருஹாசனின்திங்கிங் ஆன் மை ஃபீட்என்ற ஆங்கில புத்தகத்தை படிக்காமலிருந்தால், சாருஹாசன் கூட ஏதோ தம்பியின் அடைக்கலத்தில் காலத்தை ஓட்டிய மோசமான நடிகர் என்றே கருதிக் கொண்டிருந்திருப்பேன்.

சாருஹாசன் ஐம்பதுகளிலிருந்து முப்பது வருடங்களாக சிறந்த ஒரு குற்றவியல் அதுவும் ராமநாதபுரம் மதுரையில் டிரையல் வழக்குரைஞராக இருந்திருக்கிறார் என்பது நான் அறியாதது.

டிரையல் கோர்ட் வக்கீல் தொழிலில் உள்ள சுவராசியம் ஹைகோர்ட்டில் இருக்காதுஎன்று எனது அனுபவக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டேன். சாருஹாசனின் இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அது எவ்வளவு உண்மை என்று புரியும்.

சாருஹாசனின் வக்கீல் தொழில் அனுபவங்களில்தாம் எவ்வளவு சுவராசியங்கள். இம்மானுவேல் சேகரனுக்கும் வழக்கு நடத்தியிருக்கிறார். அவரைக் கொலை செய்த வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கும் பெயில் தாக்கல் செய்திருக்கிறார். அதுவும் நக்கலான தனது பதில்களால் குறுக்கு விசாரணை செய்த வக்கீலையும் அவரோடு சேர்த்து கோர்ட்டையும் முட்டாளாக்கியதற்காக இம்மானுவேல் சேகரன் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிக்கை கொடுக்கப்பட்டதும் அதை சாருஹாசன் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ததும் படித்து அனுபவிக்க வேண்டும்.

மதுரை இராமநாதபுர மாவட்ட வழக்குரைஞர்கள் எப்படி இந்தப் புத்தகத்தை தவற விட்டார்கள் என்று தெரியவில்லை. டிரையல் வழக்குகளில் உள்ள நுணுக்கங்கள், சூழ்ச்சிகள். ஏமாற்றங்கள், களிப்புகள் என்று சாருஹாசனின் அனுபவங்களில் ஒவ்வொரு டிரையல் வழக்குரைஞர்களும் தங்களது கதைகளை உணர்வார்கள்.

உண்மையில் புத்தகத்துக்கு தலைப்புஆர்ட் ஆஃப் கிராஸ் எக்ஸாமினேஷன்என்று வைத்திருக்க வேண்டும். பல்வேறு சட்டக் கருத்துகளோடு ஒவ்வொரு வழக்கிலும் தனது குறுக்கு விசாரணை பற்றி போகிற போக்கில் சொல்வது போல பேசுமொழியில் சாருஹாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் அனைத்து இளம் வழக்குரைஞர்களும் ஜாலியான பாடமாக இருக்கும். ஆங்கில நடைதான் கொஞ்சம் தட்டையாக இருக்கிறது.

வழக்குரைஞர்கள் எழுதியது என்றால் பொதுவாக உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பற்றி மேட்டிமைத் தனத்தோடு இருக்கும் சூழலில் கீழமை நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய தனித்தன்மையோடு இருக்கும் இந்தப் புத்தகம் எழுத்தாளர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு தமிழில் எழுதப்பட்டிருந்தால் பெருவாரியான வழக்குரைஞர்களையும் வாசகர்களையும் சென்றடைந்திருக்கும்.


ஆயினும் இப்போதைய வடிவிலேயே இப்புத்தகத்தைப் படிப்பதான அனுபவம் வக்கீல்களுக்கு உற்சாகமாயிருக்கும். மற்றவர்களுக்கு பொறாமையாயிருக்கும்….

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...