Saturday 3 December 2016

கீரி பாம்பு வித்தைக்காரன்

கல்லூரி முதலாமாண்டிலிருந்து அவர் நண்பர்தான். ஆனால் அவர் வீட்டு விசேஷங்கள் எதற்கும் போக சந்தர்ப்பம் அமைய வில்லை. அவரது திருமணத்திற்கும் நான் போகாததற்கு இப்போதும் வருத்தப்படுவார்.

மதுரைக்கு குடி வந்த பின்னர் அவரது அக்கா மகள் திருமணம். ஏதேதோ எதிர்பார்ப்புடன் சென்றால், அப்படி ஏதும் இல்லை. மேடையில் மணமக்களுடன் மற்றும் சிலர் இருந்தனர். ஒரு தட்டில் வைத்து தாலி எங்களிடையே ஒரு சுற்று வந்த பின்னர், மேடையிலிருந்த பெரியவர் ஒருவர் தாலியை மணமகனிடம் கொடுத்தார். நாதஸ்வரமும் தவிலும் முழங்கியது.

சுற்றியிருந்த நாங்கள் அட்சதை தூவ மணமகன் தாலியை கட்டவும் ஒரு நிமிட நேரத்தில் திருமணம் முடிந்து விட்டது.

அட இவ்வளவுதானா? என்னடா இது இத்தனை வருடம் மதுரையில் இருந்திருக்கிறோம். இவ்வளவு எளிமையாக இந்து திருமணங்கள் நடந்து முடிந்து விடுமாஎன்றிருந்தது.

ஐயர், வேள்வி, மாங்கல்யம் தந்துனானேஎல்லாம் சினிமாவில்தானா?

இல்லையே ராஜாத்திக்கும் செல்லையாவுக்கும் பெரியார் நடத்தி வைத்த திருமணத்தில்சப்தபதிஉட்பட சடங்குகள் இல்லை என்பதால், ‘நோக்கம் எல்லாம் உயர்வானது என்றாலும் இந்து திருமண சட்டப்படி செல்லாதுஎன்று 1966ல் நமது உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதே?

ஆக, தமிழகத்தில் பிராமணர்கள் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சில சாதியினரைத் தவிர பெருவாரியான சாதியினருக்கு திருமணத்தில் பொதுவாக சினிமாவில் நாம் காணும் சடங்குகள் கட்டாயமில்லை.


-oOo-


ஒரு வேளை பொது சிவில் சட்டம் இயற்றப்படுமாயின் மற்றவர்களுக்கு சப்தபதி போன்ற சடங்குகளை கட்டாயப்படுத்த முடியாது. நடைபாதையிலும், நகர சேரிகளிலும் வசிப்பவர்களையும், விளிம்பு நிலை மனிதர்களையும் இந்த சடங்கு எல்லாம் செய்தால்தான் திருமணம் செல்லும் என்று எப்படி கட்டாயப்படுத்த முடியும்.

அப்படியே அவர்களை கட்டாயப்படுத்தினாலும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

பொது சிவில் சட்டத்தில்சிறப்பு திருமண சட்டத்தில்உள்ளபடி தம்பதிகள் இருவரும் பதிவாளர் முன்பு உறுதி மொழி எடுத்துக் கொள்வதோடு திருமணம் நடத்தப்பட வேண்டும் என்றுதான் இருக்க முடியும்.

அவ்வகை திருமணம் பெரியாரின் விருப்பப்படி திமுக அரசு இந்து திருமண சட்டத்திலேயே அறிமுகப்படுத்தியசுயமரியாதை திருமண முறைஎன்ற ஒரு காரணத்தோடு மற்ற பல மதரீதியிலான காரணங்களால், பொது சிவில் சட்டத்தினை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வது இருக்கட்டும். ‘சங் பரிவாரஅமைப்புகள் ஏற்றுக் கொள்ளுமா என்பது பெரிய கேள்விக் குறி.


-oOo-


வரைவு பொது சிவில் சட்டம்ஏதாவது தயாரிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

உச்ச நீதிமன்றத்திலிருந்து கடைக்கோடி அரசியல்வாதி வரைபொது சிவில் சட்டம்என்று முழங்குகிறார்களே தவிர அது எப்படிப்பட்ட சட்டமாக இருக்கும் என்று எவரும் கூற முற்ப்பட்டதாக நான் அறியேன்.

பொது சிவில் சட்டம் என்பது அனைத்து மதத்தை பின்பற்றுபவர்களும், அவரவர் மத கட்டுப்பாடுகளை மீறாத வகையில் அதே சமயம்பொதுக்காரணி’ (common denominator) அடிப்படையில் இயற்றப்பட வேண்டும்.

உதாரணமாக, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மனைவியை கண்டிப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்பது கிடையாது. எனவே சட்டத்தின் மூலம் இருதார மணத்தை தடை செய்தால், அந்தச் சட்டமானது இஸ்லாமியர்களை நரகத்திற்கு செல்லத்தக்க பாவம் செய்ய வைக்கிறது என்று கூற முடியாது.

ஆனால், திருமணம் முடிக்க அருந்ததியை பார்க்க வேண்டும் என்று கூறினால் அதுஇணை வைக்கும்பாவகாரியமாகும்.

அனைத்து மதத்தினருக்குமான பொதுக்காரணி போலவே மதமற்றவர்களுமான பொதுக்காரணியாகவும் இருக்க வேண்டும்.

தடுக்கப்பட்ட உறவின் முறையிருக்கும் இருவர் திருமணம் செய்ய முடிவெடுத்தால் சிறப்பு திருமண சட்டம் போலவே, பொது சிவில் சட்டமும் அதை அனுமதிக்கும். சங் பரிவாரங்களும், காப் பஞ்சாயத்து என்ற பெயரில் இப்படிப்பட்ட மணமக்களை வட மாநிலங்களில் தூக்கிலிடுபவர்களும் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் சந்தேகமே.

பொது சிவில் சட்டத்தில் திருமணம் என்பது ஆணோ பெண்ணோ அல்லது மூன்றாம் பாலினத்தவரோ இரு நபர்கள் இணைந்து குடும்பம் என்ற ஒன்றை உருவாக்கும் வாழ்க்கை முறை என்ற கோரிக்கையை எல்ஜிபிடி சமூகத்தினர் முன் வைக்கலாம். அந்த கோரிக்கையை புறந்தள்ளுவது பொது சிவில் சட்டத்திற்கான தார்மீக அடிப்படையை குலைத்து விடும்.

ஆனால் ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய அமைப்புகளைப் போலவே சங்பரிவாரங்களுக்கும் உகந்ததாக இருக்காது.


-oOo-


விவாகரத்தை எடுத்துக் கொண்டால் கூட சட்டத்தின் வளர்ச்சி என்பது எளிதான் வேண்டும் பொழுது கிடைக்கும் விவாகரத்துதான். ஆனால் பராமரிப்புத் தொகை (maintenance) என்பதை தவிர்த்து திருமணத்தை முறித்துக் கொள்ளும் நபர் மற்றவருக்கு அளிக்க வேண்டிய நஷ்ட ஈடு நியாயமான ஒன்றாக இருக்க வேண்டுமாயின் திருமண செலவிலிருந்து மற்ற அனைத்து தேவைகளையும் ஈடுகட்டும் ஒன்றாக இருக்க வேண்டியிருக்கும்.

வாரிசுரிமையில் உள்ள பிரச்னை, இந்து மதத்தில் உள்ள பூர்வீக சொத்து (ancestral property) என்பதை அனைவருக்குமான பொதுவான ஒன்றாக மாற்றினால், தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். எனவே பொது சட்டமென்பது இந்திய வாரிசுரிமை சட்டத்திலிருப்பது (Indian Succession Act) போலவே பூர்வீக சொத்து என்ற கோட்பாட்டை கை விட வேண்டியிருக்கும்.

இந்து கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு, அதன் சட்ட அங்கீகாரத்தை இழப்பதால் பல இந்துக் குடும்பங்கள் அனுபவிக்கும் வருமானவரி சலுகை இல்லாது போகலாம். அதை வலிமை மிக்க அக்குடும்பங்கள் எவ்வாறு அனுமதிக்கப் போகிறார்கள் எனபதும் சுவராசியமான ஒன்று.

பொது சிவில் சட்டம் என்ற நிலையில் இயற்றப்படக்கூடிய சட்டத்தில் இஸ்லாமிய சட்ட முறையை விட அழிந்து போகப் போவது இந்து சட்டமே என்பதை அதை வரவேற்கும் பலர் அறிந்திருக்கிறார்களா என்பது தெரியாது.

என்னுடைய அனுமானத்தில், பொது சிவில் சட்டம் என்பது அதை வலியுறுத்தும் பிஜேபி கட்சியின் அடிநாதமாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் சங் பரிவார அமைப்புகளுக்கு உகந்ததாக இருக்கப் போவதில்லை.

பொது சிவில் சட்டம் என்றால் ஏதோஇந்து சட்டத்தைஅனைத்து மதத்தினருக்கும் பொதுவாக்குவது, அது இதோ வந்து கொண்டிருக்கிறது' என்று பெருங்கூட்டம் ஒன்று இங்கு நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.


வித்தை காட்டுபவனுக்குத் தெரியும், ‘கீரிக்கும் பாம்புக்கும் சண்டைவந்தால் நஷ்டம் அவனுக்குத்தான் என்பது

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....