Monday 12 December 2016

தேசியக் கொடி...

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதோடு, திரையிலும் தேசியக் கொடியின் படம் காண்பிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் வேண்டுமானால் திரையில் தேசியக் கொடி என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எழுபதுகளின் சிறுவர்களாகிய எனக்கும் எனது நண்பனுக்கும் மூவர்ணக் கொடி படம் ஏற்படுத்திய உள்ளக் கிளர்ச்சியை சொல்லிப் புரிய வைக்க இயலாது.

பின்ன, தேசியக் கொடி பிலிம் அவ்வளவு ஈஸியா கிடைக்காது.

பிலிம்?

ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்னால்ஹோம் தியேட்டர்என்றால் வீட்டு ஜன்னலை எல்லாம் மூடி அறையை இருட்டாக்கி, கதவை மட்டும் கொஞ்சமாக திறந்து அந்த இடுக்கு வழியாக வெளியே வெயிலில் நிறுத்தி வைத்த கண்ணாடியிலிருந்து வரும் ஒளியை சுவற்றில் அடிப்பதுதான்.

ஓளிக்கீற்றில் இரண்டு ஒளிப்பெருக்கிகளை வைத்து இடையில் ஒரு பிலிம்மை பிடித்தால் திரையில் தோன்றும் பிம்பங்கள் அன்று தந்த மகிழ்ச்சியும் வியப்பும் இன்று எந்த ஒரு ஐமேக்ஸ் திரையும் தரும் உணர்வுகளுக்கு நிகரானது.

அதற்கான சிரமங்கள் அப்படிப் பட்டது.

வெளியே நிறுத்தி வைத்த கண்ணாடி விழுந்து விடும். அல்லது வெயில் போய் விடும். சில சமயம் மூடிய ஜன்னலை யாராவது சேட்டைக்கார பையன்கள் திறந்து விடுவார்கள். அவர்களைக் கூட சமாளித்து விடலாம். இந்த லென்ஸுகளையும் பிலிமையும் சீராகப் பிடிப்பதற்குள், சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஏற்ப்படும் சண்டைகள்தாம் பல சமயங்களில் வசனங்களாக இருக்கும்.

பிலிம் என்பது தியேட்டர்களில் அறுந்து போன பிலிம் ரோலில் இருந்து ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு மூன்று மூன்றாக வைத்துக் கட்டி கடைகளில் விற்கப்படுவது. துரதிஷ்டமாக வந்த படமே திரும்பவும் கிடைக்கும். அதை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

எழுத்து பிலிம் என்றால் டைட்டில் கார்ட். அது சில சமயம் கிடைக்கும் என்றாலும் அரிதிலும் அரிதாகவணக்கம்ஒற்றைச் சொல் சிலரிடம் மட்டுமே இருக்கும். வெயிலுக்கு பதில் மின்சார பல்ப், சுவற்றுக்கு பதிலாக வெள்ளை வேட்டி என்று டெக்காக சில புத்திசாலிகள் மற்ற சிறுவர்களிடம் காசு வசூலித்து அறைக்குள் அனுமதிப்பார்கள்.

நானும் ஒரு முறை காசு கொடுத்துப் பார்த்து இருக்கிறேன். காரணம், அவனிடம் தேசியக் கொடி பிலிம் இருப்பதாகவும் கடைசியில் அது காட்டப்படும் என்று சொன்னதாலும்தான். ஏனெனில் கடைகளில் திரைப்பட பெயர்களில்தாம் பிலிம்கள் கிடைக்கும். தேசியக் கொடி பிலிம் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. நானும் என்னைக் கூட்டிப் போன நண்பனும் முதலிலேயே பிலிமை வாங்கி ஆச்சரியமாகப் பார்த்த பின்னர்தாம் காசு கொடுத்தோம்.

வழக்கமாக சினிமா தியேட்டர்களில்ஜன கன மனஎன்ற பாடலோடு தேசியக் கொடி பறக்கும் போது அது ஏதோ படம் முடிந்து விட்டது, கிளம்புங்கள் என்ற சமிக்ஞை என்பது போல தட்டுத் தடுமாறி வெளியேறுவது போல அல்லாமல் அன்று திரையில் தோன்றிய மூவர்ண தேசியக் கொடியைப் பார்த்தவுடன் உணர்ச்சி வெள்ளத்தில் கைகளைத் தட்டினோம்.


-oOo-


என் பர்த் டேவுக்கு என்ன கிஃப்ட்?’

ஏன் எதுனாலும் வாங்கித் தாரேன்

ம்ம்ம்ம்ஒரு புரஜெக்டர்

புரஜெக்டரா? அது எதுக்கு?’

சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை. அதான்

வாங்கிக்கோங்க, சரி எவ்ளோ விலை?’

நான் சொன்ன விலையை கேட்டு எனக்கு மட்டும் அதிர்ச்சியாயிருந்தது.

அதுக்கென்ன என்று லேசாக வீட்டில் சொல்லி விட்டாலும் எனக்கு வாங்கும் வரை பயம்தான், இது தேவையா என்று. ஆனால், கண்ணாடி வெளிச்சத்தில் காட்டிய படம் தொடங்கி நான் அண்ணன் எல்லாம் சேர்ந்து மொத்தமாக பணம் போட்டு சேவியர்ஸ் ஸ்கூல் டிராயிங் வாத்தியாரிடம் பத்து ரூபாய்க்கு வாங்கிய அந்த லைட் வச்ச கார்ட் போர்ட் பாக்ஸ் புரஜக்டரில் பாத்த பிலிம் படங்கள், பின்னர் எப்போதும்பேசும் படம்புத்தக விளம்பத்தில் பார்த்து மட்டுமே ஏங்கிய அந்தக் குட்டி புரஜக்டர், அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர் தனது தோளில் தாங்கிக் கொண்டிருந்த 8 எம் எம் மூவி கேமரா எல்லாம் மனதில் வேகமாக ஓடி மறைய கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விட்டேன்.


இப்ப கேமரா, புரெஜக்டர், ஸ்க்ரீன், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கு. தேசியக் கொடியும் பாடலும்தான் இல்லை…

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....