Friday 1 July 2016

அந்நியமாகிப் போன நட்புகள்...

தூத்துக்குடிக்கு மாறுதலான பின்னர் தான் வேலை செய்யும் இடம் குறித்து அம்மாவுக்கு ஏகப் பெருமை.

டர்பைன், ஸ்டீம், ஃபர்னஸ், பாய்லர், கன்வேயர் என்று புதுப்புது வார்த்தைகளில் அங்கு என்ன உருவாகப் போகிறது என்பதைப் பற்றி அடிக்கடி பாடமெடுப்பார்கள். ‘ஸ்டீம்னா இட்லி சட்டில வற்ர ஸ்டீம் இல்ல. அது சூப்பர் ஹீட்டட் ஸ்டீம்!’

அதுதான் கோலியாத் கிரேன். எவ்ளோ உயரம் பாரு. கட்ட கட்ட இன்னும் உயரமா போகும்னு சொன்னப்பதான் அந்த மாதிரி கிரேனை முதன்முதலாகப் பார்த்தேன்.

பாபநாசமெல்லாம் மொத்தமே இருபத்தியோரு மெகாவாட்தான். இங்க வரப்போற மூணு யூனிட் ஒவ்வொன்னும் இருநூத்திப் பத்து மெகாவாட்என்று கூறிய போது ஏதோ டிடிபிபிக்கே அவர்தான் சேர்மன் போன்ற பெருமிதம் அம்மா முகத்திலிருந்தது.

அம்மாதான் என்றில்லை. டிடிபிஎஸ் டிடிபிபியா இருந்த காலத்தில் அங்கு வேலையிருந்தவர்களுக்கும் சரி, அவர்கள் பிள்ளைகளான எங்களுக்கும் சரி அந்த மெகா பிராஜக்ட் ஏதோ அவரவர் சொந்த வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்த நினைப்புதான். திருச்சியிலிருந்து இன்ச் இன்ச்சாக ஊர்ந்து வந்து கொண்டிருந்த பி எச் எல் பாய்லருக்கு வழியிலுள்ள பிரச்னைகள் பற்றி சலூனில் முடி வெட்டுபவரிடம் கவலையுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.

பள்ளி விடுமுறை நாட்களில் அம்மா ஆபீஸ் செல்வது என்று எப்போதாவது நிகழும் சடங்கு பின்னர் அடிக்கடி நிகழ்ந்தது. பழைய ஆபீஸ் மாதிரி அன்று முழுவதும் ஓவ்வொருத்தர் மேஜையாகப் போய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்ச நேரத்திலேயே யாருடனாவது கேண்டீனுக்குப் போய் வடை, ஜாங்கிரி சாப்பிட்ட கையோடு அப்படியே நழுவி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் ஆங்காங்கே பெரிய பெரிய ஷெட் போட்டு ஏதேதோ மெஷின்களுடன் நடந்து கொண்டிருக்கும் வேலைகளை வேடிக்கைப் பார்க்க போய் விடலாம்.

அங்குமிங்கும் லாரிகளும், கிரேன்களும் பிற கனரக வாகனங்களும் போய் வந்தாலும் அந்தச் சூழலுக்கு சம்பந்தமில்லாத சிறுவனை யாரும் எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

சைட்’டிலிருந்தும் சரி தூத்துக்குடியிலிருந்தும் சரி குவார்ட்டஸுக்கோ அல்லது வேறு எங்குமோ செல்ல வேண்டுமானால், டிடிபிபி அல்லது டிஎன்இபி என்று எழுதியிருக்கும் எந்த வேன் அல்லது லாரியிலும் கைகாட்டி நிறுத்தி உரிமையாக ஏறிக் கொள்ளலாம்.

ஆனால் கடைசி வரை அங்கிருந்த ஒரே ஒரு ‘மேக்’ ரக லாரியில், அதன் டிரைவராக இருந்தவர் ஜேக்கப்’பின் அப்பாவாக இருந்தாலும் கூட பயணம் செய்யும் பாக்கியம் அமையவில்லை. ஒரு முறை ஏறி உட்கார்ந்ததோடு சரி.

திடீரென முதல் யூனிட் திறக்கிறார்கள் என்றார்கள். சைட்டிலேயே பெரிய பந்தல் போட்டு எம்ஜிஆர் யாரோ ஒரு மேஸ்திரியை வைத்து திறந்தார். எம்ஜிஆரை விட கூட வந்த நாஞ்சிலார்தான் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தார். தலைமைச் செயலாளர் முராரிஎம்ஜிஆரின் சத்துணவு திட்டம் உலகமே போற்றும் திட்டம்என்று பேசினார். மத்தியானமும் இரவும் பெரிய பந்தியில் எங்களுக்கெல்லாம் அங்கேயே விருந்துச் சாப்பாடு. நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தது.

திமுக கட்சியினர், கலைஞர் தொடங்கி வைத்த திட்டத்தை வரவேற்று குவார்ட்டர்ஸ் சுவற்றில் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள்.

அடுத்த யூனிட் திறக்கும் போதும் அதே கொண்டாட்டம்தான். ஆனால் இந்த முறை எம்ஜிஆரோடு நாஞ்சிலாருக்குப் பதிலாக நெடுஞ்செழியன்.

இரண்டு முறையும் அம்மா வரவேற்பில் இருந்தார்கள். ‘’பின்னால தெரியற முடி நிஜ முடியில்லை. சும்மா அப்படியே தொப்பியோட ஒட்டி வச்சிருக்குஎன்பதை கண்டுபிடித்ததில் அம்மாவுக்கு மெத்த திருப்தி. அப்போது இபி அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருக்கும் எம்ஜிஆர் கட்சிக்காரர்களை ஒரு கை விரல்களில் எண்ணி விடலாம்.

ஆனால் தொழிலாளர்களாக இருந்த மலையாளிகள், கம்யூனிஸ்ட் கட்சி திமுகவோடு கூட்டணி வைத்திருந்தாலும் எம்ஜிஆருக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.

கல்லூரிக்குப் போன பிறகு ஸ்டிரைக் என்றால் நானும் எனது நண்பனும் இன்னமும் உரிமையாக யூனிட்டிற்குள்ளேயே போய் மேலே கண்ட்ரோல் ரூம் வரை போவோம். ஃபர்னஸுக்குள் கண்ணாடி வழியாக, கூசினாலும் கண்கள் விரியப் பார்ப்போம். தரைத்தளத்திலிலுள்ள லிஃப்டில் மட்டும் காவலாளி இருப்பார். அவரை தவிர்ப்பதற்காக இரும்பு படி வழியாக முதல் தளம் போய் பின்னர் எங்கும் போகலாம்.

வெளியே மெயின் கேட்டில்? அப்போது சொல்வதற்கு பெயர்களா இல்லை

கடந்த முறை தூத்துக்குடி போன போது மெயின் கேட் அருகே வரை சென்று காரை நிறுத்தினேன். டிடிபிஎஸ் இன்னமும் வளர்ந்து பிரமாண்டமாக ஆனால் முழுக் கட்டுப்பாட்டோடு இருந்தது. அடையாள அட்டை இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது போலத் தெரிந்தது.

மூடப்பட்ட அந்த கேட்டையே வெறித்துப் பார்த்தபடியே ஒரு நிமிட நேரம் அமைதியாக இருந்தேன்.

டர்பைன் சுழற்சியால் யூனிட்டிலிர்ந்து எழும் அதே பழக்கமான ‘உய்’யென்ற சத்தம் மட்டும் இன்னமும் மாறாமல்…

என்ன உள்ளே போக வேண்டாமா?’

இல்லை. இப்போது யார் பெயரைச் சொல்வது? எங்க அம்மாவைப் பார்க்கணும்னு சொல்லலாம் அல்லது உள்ளே இருக்கிற யூனிட்களும் நானும் முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னே ஒன்னா வளர்ந்தோம். ஒன்னா விளையாடியிருக்கோம்னு கூடச் சொல்லலாம்…  லூஸுன்னு சிரிப்பான்

-oOo-

இனிமே அப்பா கூட நான் கோர்ட்டுக்குப் போக மாட்டேன்

ஏண்டா?’
.
அதான் உள்ளேயே சுவர கட்டி கேட்டெல்லாம் போட்டுட்டாங்களாமே. ராபர்ட் அங்கிள் சொன்னாங்க. அப்பா சீட்டு கொடுத்தாத்தான் உள்ளே விடுவாங்களாம். அப்படின்னா நான் வரமாட்டேன்


எப்படிச் சொல்வேன் அவளது ஃபிரண்ட் ரொம்ப பெரியாளா வளந்திட்டான். இப்போ முந்தி மாதிரி இல்லைன்னு….

1 comment:

  1. அருமையான எழுத்துநடை!

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....