Friday 22 July 2016

தீதும் நன்றும்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்என்று கையெழுத்திடாமலேயே நான்கு வருடங்களுக்கு முன்னர் இளவல் யாரோ ஒருவர் பரிசளித்தநாஞ்சில் நாடன்னின்தீதும் நன்றும்பிரியாணிக்குக் காத்திருந்த ரம்ஜான் நாளின் பகற்பொழுதின் உணவானது.

நாஞ்சில் நாடனின் கதைகளை வாசித்ததில்லை. ஆனால், முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தனது வேலை விஷயமாக மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியில் பயணம் செய்ததில் சந்தித்த நபர்கள், முக்கியமாக ஒரு தமிழ் தம்பதிகளைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்ததில் இருந்து எனக்கு இவரை மிகவும் பிடித்திருந்தது.

அதோடு நிறுத்தி விட்டு அவரது கதைகளை தேடிப் போய் படித்திருக்க வேண்டும் நான். விகடனின் வேண்டுகோளை ஏற்று வாராவாரம் அதன் இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை கையிலெடுத்திருக்கக் கூடாது.

மொக்கை என்பது எனக்கு மிகவும் அந்நியப்பட்ட வார்த்தை. ஆயினும் இணையத்தில் தொடர்ந்து புழங்கியதின் பழக்கத்தில் ஐம்பது பக்கங்களைத் தாண்டுவதற்குள்ளாகவே இவ்வார்த்தை எனையறியாமலேயே தோன்றி மனதில் நின்றது.

பின்ன, பெண்கள் பழகினாலே இளைஞர்கள் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்று சொல்ல விழைந்தவர் கிராமப்புறங்களில் இந்த சமர்த்துகள் கிடையாது. ஏன் தெரியுமா? வெட்டிப்போடுவான் என்ற பயம்தான். என்று தமிழ் சினிமா முடித்தால்?

பத்தி எழுதுவது ப்ரத்யோகமான கலை. ஆங்கிலத்தில் நான் ரசிக்கும் சிறந்த பத்தி எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் அல்லர். அவரவர் துறை சார்ந்து எழுதுகிறார்கள். பொதுவாகவும் சிலர் எழுதுகிறார்கள்.

அமெரிக்காவில் ப்ளாண்ட் என்று கேலிக்குள்ளாக்கப்படும் மொத்த வடிவத்தை தன்னகத்தே கொண்டுள்ளதாக நான் நினைத்திருந்த ராஜேஷ் கன்னாவின் மகளும் அக்ஷய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கன்னா சண்டே டைம்ஸில் பத்தி எழுதுகிறார்.

அதிலுள்ள நகைச்சுவையும், மறைந்திருக்கும் புத்திசாலித்தனமும்தமிழில் ஒருவர் தேற மாட்டார்கள். சுஜாதா நீங்கலாக.

கிராமத்தில் பெண்களைத் துரத்தினால் வெட்டிப் போடுவார்கள் என்பதைத் தொடர்ந்து சில அரசியல் மொக்கைகள். ஈழப் படுகொலை புலம்பல்கள். அறிவுறுத்தல்கள் என்று எப்போது முடியும் என்று ஆகிவிட்டது; அவ்வப்போது தலைகாட்டிய சில சுவராசியங்களைத் தவிர.

இங்கு யாரைப் பற்றி எதைச் சொன்னாலும், யாருக்காவது கோபம் வந்து விடும் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்ப்படுத்திய தயக்கமும் காரணமாக இருக்கலாம் என்பதால் நாஞ்சில் நாடன் போன்றவர்கள், நாவல்களோடு மட்டும் நின்று கொள்ளலாம். ஏதும் பிரச்னை என்றாலும் காப்பாற்றுவதற்கு நீதிமன்றங்கள் உள்ளன.

கடைசியாக, பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் நம் சமூக சூழ்நிலைப் பற்றி அவ்வளவு தூரம் மாய்ந்து மாய்ந்து எழு்திய மகளிர் தினம் என்ற கட்டுரையில் ஏதோ சினிமா ஸ்டிலிலிருந்து எடுத்துப் போடப்பட்டுள்ள புகைப்படம் நாஞ்சில் நாடன் பார்வைக்கு வந்ததா என்பது தெரியவில்லை.


எதையாவது வாசி என்பது எனது கொள்கை. கண்டது கற்றுப் பண்டிதனாகலாம் என்று புத்தகப் பரிசுகள் கட்டுரையில் நாஞ்சில் நாடன் சொல்வதால் படித்ததில் பிழையில்லை என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....