Sunday, 17 July 2016

அவருக்கு பிறந்தநாள்!

தூத்துக்குடிக்கு மாறுதலான பின்னர் ஒருநாள் எங்கள் ஐவரையும் அப்பா வீட்டிற்கு அருகிலேயே இருந்த பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ஆம். ஐவருக்கும் ஒரே பள்ளிதான்!

தங்கை சேர வேண்டிய தொடக்கப் பள்ளியும் அதே வளாகத்தில் இருந்தது என்பதை விடவும் அக்காவும் எங்களுடன் அதே பள்ளியில் படிக்கப் போகிறாள் என்பதுதான் மிகுந்த ஆச்சரியமாகவும், கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் கோ-எட் என்பது பாளையங்கோட்டையில் கேள்விப்படாதது.

பள்ளி தலைமை ஆசிரியரின் அறைக்கு வெளியே அப்பாவுடன் நின்ற அந்த தினம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனது பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் அந்த ஒரு நாள்தான், பள்ளியில் அப்பாவை நான் பார்த்த ஒரே தருணம்.

முதலில் அக்கா. அடுத்து அண்ணன்கள். இறுதியாக நான் என்று அரை மணி நேரத்திற்குள்ளாக அட்மிஷன் போடப்பட்டு ஒவ்வொருவராக எங்களது வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டோம். நான் ஏழாம் வகுப்பு.

பின்னர் அப்பா தங்கையை சேர்க்க தொடக்கப் பள்ளிக்கு சென்றதாக அறிந்தேன்.

வருடம் 1976.

-oOo-

ஏன் தாத்தா, அப்பா ஸ்கூல் முடிச்ச பிறகு காலேஜுக்கு போகல?’

அவன் படிக்கிறதுக்கு நாசரேத் தாத்தாதான் பீஸ் கட்டுவார். அத வாங்குறதுக்கு அவன் போற போது நிக்க வச்சு எப்படிப் படிக்கிற எவ்வளவு மார்க் வாங்கியிருக்கன்னு அவர் கேப்பாரு. அது அவனுக்கு பிடிக்கல போல

தனது இயலாமையை அந்தப் பதிலுக்குள் தாத்தா மறைத்துக் கொண்டாலும், ஸ்கூல் பீஸுக்காக தனது மாமாவின் முன் அப்பா நிற்கும் காட்சி என் மனதில் தோன்றுவதை தடுக்க என்னால் முடியவில்லை. தனது மதிப்பெண்களை அவர் கூறிய ஏதோ ஒரு நாளில் அங்கிருந்திருக்கும் மாமா பெண்கள் ஒருவேளை சிரித்திருக்கலாம்.

அப்பா தன் படிப்பை நிறுத்திக் கொண்ட ஆண்டு 1951

-oOo-

அதான், இலவசக் தொடக்கக் கல்வின்னு பிரிட்டிஷ்காரன் 1920ம் ஆண்டே சட்டம் போட்டிருக்கானே. பிறகும் பீஸ் வாங்குனா, புள்ளைங்களை எப்படி படிக்க வைப்பாங்க?’

ஐயா, அது நகரத்திலிருக்கும் பள்ளிகளுக்குத்தான். அதுலயும் அரசாங்கப் பணம் கொடுக்க முடியாம திரும்பவும் பீஸ் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க

சரி, அப்படின்னா அரசாங்கமே பள்ளிகளை ஆரம்பிச்சு நடத்த வேண்டியதுதானே

அதுக்கு தேவையான கட்டிடங்கள் இல்லை. இனி திட்டம் போட்டு இடம் பாத்து கட்டுறதும் உடனடியாக சாத்தியம் இல்லை.’

அப்ப ஒன்னு பண்ணுங்க. புதுசா கட்டிடம் கட்டித்தானே ஆரம்பிக்க முடியாது. இருக்குற தனியார் பள்ளிக்கூடத்துல உள்ள டீச்சர் சம்பளத்தை அப்படியே நாம கொடுத்துருவோம். மாணவர்களிடம் பீஸ் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க

பள்ளிக்கூடம் நடத்துறதுன்னா, க்ளார்க், ப்யூன்னு மத்தவங்களும் இருப்பாங்க

அதையும் கொடுப்போம்

அது மட்டும் போதுமா. பள்ளியை பராமரிக்கிற செலவுக்கு எங்க போறதுன்னு கேட்கிறாங்க

அதுவும்தான். பிரிட்டிஷ்காரன் எவ்வளவு கொடுக்குறதா சொன்னான்?’

டீச்சர் சம்பளத்துல 20 பர்சண்ட்

அதே கொடுப்போம்

வருடம் அப்பா பள்ளிப்படிப்பை முடித்து எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 1959.

-oOo-

எங்கள் அதிஷ்டம். அரை மணி நேரத்தில் எங்கள் ஐவரை அப்பா பள்ளியில் சேர்த்த ஆண்டிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பள்ளி பராமரிப்பு மான்யம் 6 சதவீதம்தான். இரண்டு வருடங்களில், 1979ல் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது.

2000ல் பராமரிப்பு மான்யம் 2 சதவீதமாக மேலும் குறைய, தாக்குப் பிடிக்க முடியாத பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால், ‘டீச்சர் சம்பளம் மிகவும் உயர்ந்து விட்டதால் இப்போதய 2 சதவீதம் என்பது முன்பு கொடுத்த 6 சதவீதத்தை விடக் கூடுதலாக வரும். அதுவும் கல்வி மான்யம் எல்லாம் அரசிடம் உள்ள நிதி ஆதாரத்தை பொறுத்தே அளிக்கப்படும்என்று தீர்ப்பும் கூறப்பட்டது 2007 (1) CTC 30.

தாத்தா சொன்ன போது கூட எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஏதோ வழக்கிற்காக இந்த தீர்ப்பைப் படித்த போதுதான்அப்பா ஏன் படிப்பை நிறுத்திக் கொண்டார். ஆனால் நாங்கள் ஐவரும் எப்படி ஒரே பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தோம் என்பதும் புரிந்தது

நமக்கே இப்படி இருக்கே, இரண்டு மூணு புள்ளைங்க வச்சுருக்கிறவங்க எல்லாம் எப்படி பீஸ் கட்டுறாங்க'. வருடம் 2016.

சக்கரம் முழுதாக ஒரு சுற்றுச் சுற்றி இங்கிலீஷ்காரன் சட்டம் போட்ட 1920க்கு மீண்டும் இப்போது வந்து விட்ட மாதிரி இருக்கிறது.


ஆமாம், அவருக்கு இன்று பிறந்த நாளாமே!

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...