Wednesday 22 April 2015

மெளனத்தின் அலறல்...

அவசர சட்டம் நிலுவையில் இருந்த காலத்தில் வசித்தவர்கள் அறிவார்கள். அரசு நடவடிக்கைகள் குறித்த எதிர்மறையான செய்திகள் மக்களைச் சென்று அடைந்து விடக்கூடாது என்பதில் இந்திராவின் ஆலோசகர்கள் குறிப்பாக இருந்தார்கள். கடுமையான பத்திரிக்கைத் தணிக்கை. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் முதல் முழுப்பக்கமும் கறுப்பாக வெளிவந்தது வரலாறு.

ஆனால், விளைவு அரசின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது. செய்திகளே இல்லாத நிலையில், மக்கள் விரைவில் வதந்திகளையே உண்மை என நம்பத் தொடங்கினர். ‘ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் அனைவரையும் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்கிறார்கள்’ என்று வட மாநிலம் முழுவதும் மக்கள் முழுமையாக நம்பிய வதந்திதான், 1979ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (17/04/15) அன்று நமது உயர்நீதிமன்றம் அதன் 150 ஆண்டு கால வரலாற்றில் சந்தித்திராத புதுமையானதும், ரசாபாசமானதுமான அரசியலமைப்பு சட்டச்சிக்கலைச் சந்திக்க நேரிட்டது. வெள்ளிக்கிழமை மதியம் வாட்ஸப் மூலம் சென்னை மதுரை வழக்குரைஞர்கள் அனைவரிடமும் பகரப்பட்டு விவாதிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவு உண்மையாக இருக்காது என்றுதான் கருதப்பட்டது. மாலையே இரு நீதிபதிகளின் உத்தரவும் வெளிவந்த நிலையிலும், நான் நம்பவில்லை.

மறுநாள் காலை தமிழ் ஆங்கிலம் என்று அனைத்து செய்தித்தாள்களை மேய்ந்தாலும், எங்கும் இது பற்றிச் செய்தியில்லை. உயர்நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானதும், முதல்முறையானதுமான இந்த நிகழ்வு பொது மக்கள் யாருக்கும் சென்று சேர்வதைத் தடுப்பதன்  விளைவு, இரு உத்தரவுகளையும் அதன் பின்னணிகளையும் பற்றிய வதந்திகள்தான் நாளை முதல் செய்தியாகப் போகின்றன.

சாதனைகளிலும், வெற்றிகளிலும் இருப்பதை விட வேதனைகளிலும், தோல்விகளிலும்தான் விவாதிப்பதற்கும் படிப்பதற்கும் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்ததால்தான், இன்று விஞ்ஞானமும், மருத்துவமும், தொழில்நுட்பமும் இத்தனை வளர்ச்சியடைந்துள்ளது. அந்த உண்மையை அறியாதலால் சட்டம் கடந்த நூற்றாண்டிலேயே இன்னமும் நின்று கொண்டிருக்கிறது.

(ஏப்ரல் 19 அன்று எனது முகநூலில் இந்த எனது ஆதங்கத்தை எழுதிய பின்னர் இந்து நிரூபர் தனது எதிர்வினையில், ‘சம்பந்தப்பட்ட வழக்கினைப் பற்றிய விபரங்களை  பத்திரிக்கைகளில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்பது அடுத்த பிரச்னை)

1 comment:

  1. http://barandbench.com/content/212/mother-all-gag-orders-madras-high-court-prohibits#.VTpZ1CGqqkp

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....