Wednesday 8 April 2015

சபாஷ், சைலேந்திரபாபு!

சைலேந்திரபாபுவிற்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. அவரது தியாகம் வியக்க வைக்கிறது. எனெனில், மோகன்ராஜ் என்கவுண்டர் முடிவு எடுத்ததும் (அவர் மறுத்தாலும், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து அதுதான் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணையத்திலும் கூட போலி என்கவுண்டர் என்ற ஒன்று இருக்கிறது என்பதே தெரியாமல், என்கவுண்டர் என்றால் வாழத்தகுதியில்லாத ஒருவனை காவலர்கள் போட்டுத்தள்ளுவது என்ற அர்த்ததில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவர் மனதில் ஒரு முறை கேரளாவின் லக்ஷ்மணா, குஜராத்தின் வன்சாரா, தில்லியின் ரஜ்பீர் சிங், மும்பையின் தயா நாயக் ஆகிய பெயர்கள் மனதில் ஓடியிருக்கும். அந்தப் பயத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர் (sic) செய்து விடலாம் என்ற முடிவினை அவர் எடுத்திருந்தால், அந்த தியாத்தை வியந்து ‘சபாஷ்’ போடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.

நேற்று ஆய்வாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். கோவை என்கவுண்டர் பற்றி பேச்சுத் திரும்பிய பொழுது, ‘அண்ணாத்துரை ரொம்ப அப்பாவி. எப்படித்தான் சுட்டாரோ தெரியவில்லை’ என்று கூறினார்.

வர்கீஸை சுட்ட ராமச்சந்திர நாயரும் அப்பாவிதான். இப்படித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரள காவலர்களால் கைது செய்யப்பட்ட நக்ஸல் வர்கீஸ், பின்னர் காவல்துறையோடு நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆலயம் கூட கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைக்க மறுத்தது.

வர்கீஸ் கொல்லப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்து, அவரை சுட்ட ராமச்சந்திரன் நாயர் என்ற காவலர், தனது மனச்சாட்சியின் குரலுக்கு பயந்து ‘நான் இருந்தேன் என்பதற்கு சாட்சியாக” என்று ஒரு புத்தகத்தை எழுதி அதில் வர்கீஸை மேலதிகாரியின் உத்தரவுக்கு பணிந்து தான் சுட்டதாக கூறியிருந்தார்.

அந்தப் புத்தகம் அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ராமச்சந்திரன் நாயர், முன்னாள் IG லக்ஷ்மணா மற்றும் முன்னாள் DGP விஜயன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெறுகையில் ராமச்சந்திரன் நாயர் இறந்து போக, கடந்த அக்டோபர்’ 2010ல் ஐஜி லக்ஷ்மணா குற்றவாளி என்று தீர்ப்புக் கூறப்பட்டு, 74 வயது லக்ஷ்மணா கடந்த ஒரு மாதமாக சிறையில்…

ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து அண்ணாதுரையும் தனது மனச்சாட்சிக்கு பணிந்தால்....சைலேந்திரபாபுவுக்கு துணையாக, எந்த ஊடகவியலாளரும் சிறைக்குச் செல்லப் போவதில்லை.

-oOo-

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த லக்ஷர் தோய்பா பயங்கரவாதி சொராபுதீனை தீரமாக குஜராத் காவலர்கள் சுட்டுக் கொன்ற பொழுது, DIG வன்சாரா மீது சூட்டப்பட்ட புகழாரங்கள் முன்பு இன்று சைலேந்திரபாபுவிற்கு கிடைக்கும் புகழாரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை!

இன்று வன்சாராவிற்காக கவலைப்பட எந்த ஊடகமும் தயாரில்லை. பாவம், ராஜ்குமார் பாண்டியன். ஐ பி எஸ் அதிகாரியாக குஜராத் செல்லும் தான், அங்கு ஒரு கைதியாக சிறையில் வாட வேண்டியிருக்கும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஐ பி எஸ் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சைலேந்திரபாபுவும் நினைத்திருக்க மாட்டார். ஒரு கொலையில் தனக்கும் பங்கிருப்பதாக, சந்தேகிக்கப்படுவோம் என்று…

எட்டு வருடங்களுக்கு முன்னர், தில்லி அன்சால் வணிக வளாகத்தில், இரு லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ACP ரஜ்பீர் சிங் கொண்டாடப்பட்டார். உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ரஜ்பீர் சிங் 13 வருடங்களில் உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். காரணம் அவர் பணி செய்த 24 ஆண்டுகளில் 56 என்கவுண்டர்களை நடத்தியுள்ளார். ஆனால், கொடூர பயங்கரவாதிகளை ஒரு தனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் சுட்டுத்தள்ளிய ரஜ்பீர் 2008ம் ஆண்டில் நிசமான ஒரு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். பல்வேறு நில கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்ட ரஜ்பீர், அதனால் ஏற்பட்ட ஒரு தகறாரில் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுமார் 50 நபர்களை என்கவுண்டரில் விண்ணுக்கு அனுப்பிய மும்பை ஆய்வாளர் விஜய் சலாஸ்கர் கூட இப்படித்தான். ஒரு சிராய்ப்பு கூட வாங்கியதில்லை. அனால் நிசமாகவே ஒரு துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதி அஜ்மல் கசாபுடன். சலாஸ்கரின் பெயர் எழுதிய ரவை அன்றுதான் துப்பாக்கியிலிருந்து கிளம்பியது.

ஆனால், 85 நபர்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய மும்பையின் தயா நாயக் அந்த சண்டையில் பங்கெடுக்க முடியவில்லை. எனெனில் 2006ல் மும்பை தாதா உலக நடவடிக்கைகளில் அவருக்கும் பங்கிருப்பதாக வழக்கு தொடரப்பட்டு அவரே சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.

பிரதீப் சர்மா…அவரது என்கவுண்டர்கள் 100ஐ தாண்டி வெகுகாலமாயிற்று. அவரும் தாவூது இப்ராகிமோடு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப் பட்டார். தற்பொழுது நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சைலேந்திரபாபுவுக்கு கூட இப்படித்தான். முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன். காலப்போக்கில் குற்ற உணர்வுகள் மரத்துப் போன பின், ‘இந்த லோக்கல் ரவுடியை கொஞ்சம் கவனியுங்கள். நான் உங்களைக் கவனிக்கிறேன்’ என்று ஒரு தொழிலதிபர் வந்தால் அதையும்தான் செய்து பார்ப்போமோ என்ற எண்ணம் வரலாம்.

தான் மறுத்தால் கூட, அண்ணாதுரை வந்து, ‘நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும்’ என்றால் முடியாது என்று கூற முடியுமா?

முடியாது என்று கூறினால், அண்ணாதுரை ராமச்சந்திரன் நாயர் போல ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதுவார் என்ற பயம் உருவாகுமல்லவா?

அதனால்தான் அவரது துணிவுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும் என்று தோன்றுகிறது.


மதுரை
13/11/10

1 comment:

  1. History teaches us vigilantism or encounters will work like only pain killers. They may help in relieving the pain; but the side effects in the long run may bring in more malady than what they actually cured…What happened in Andhra Pradesh brings into my mind what I wrote in 2010 on much acclaimed Coimbatore Encounter…

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....