Thursday, 2 April 2015

விப்லாஷ்

“முதல் எட்டு வருடங்களுக்கு எனக்கு எவ்வித ப்ராக்டிஸும் இருந்ததில்லை. கஷ்டமான சூழ்நிலை. ஆனால் அவர் ஒருமுறை கூட நான் எனது பொருளாதார தேவைகளை எப்படிச் சமாளிக்கிறேன், என்ன செய்கிறேன் என்று கேட்டதில்லை. அவரே ஜூனியராக இருக்கையில் வறுமையில் வாடியவர்தான். அப்படியிருந்தவர்கள் அதே நிலையிலிருப்பவர்கள் மீது கருணை கொண்டிருப்பார்கள் என்று நான் நினைத்ததற்கு மாறாக அவர் இருந்தார். அதோடு தனது ஜுனியருக்கு வழக்குகளை கொடுத்து உதவுமாறு யாரிடமும் ஒரு சீனியர் கேட்கக் கூடாது என்ற தொழில் தர்மத்திலும் அவர் உறுதியாக இருந்தார்”

“நீ என்னைப் பற்றியும், நான் உனக்கு எவ்விதமான உதவியும் செய்யவில்லை என்பதைப் பற்றியும் என்ன நினைக்கிறாய் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இதற்காக என்னை நன்றியுடன் நினைக்கும் காலம் ஒருநாள் வரும்” என்று பின்னாட்களில் அவர் கூறியதாக சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவராக அறியப்படுகிற எம்.சி.சாக்ளா தனது சீனியரான முகமது அலி ஜின்னாவை அவரது ரோஸஸ் இன் டிசம்பர் நூலில் நினைவு கூறுகிறார்.

நியூயார்க்கில் உள்ள இசைப்பள்ளியில் பயிலும் டிரம்ஸ் வாசிக்கும் மாணவனை தன்னுடைய குழுவில் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்கிறார் அதன் பயிற்சியாளர். தன்னிடம் பயிலும் மாணவர்களை உடல்ரீதியாகவும் மன ரீதியிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுத்தத்தைக் கொடுக்கிறார். பயிலரங்கத்தில் மாணவர்கள் மீது தொடுக்கும் கெட்ட வார்த்தைகளும் அவமானங்களும் பார்க்கும் நம்மையே சோர்வடையச் செய்கிறது. பெரும்புகழ் (Greatness) ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மாணவனுக்கும் பயிற்சியாளருக்குமான உளவியல் ரீதியான போராட்டமே விப்லாஷ் திரைப்படம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மாணவன் பொங்கி எழுந்து கல்லூரியிலிருந்தே விரட்டப்பட நமக்கே, ‘இதற்குப் பேசாமல் எங்காவது இசைக்குழுவில் சிவமணி போல டிரம்மராக சேர்ந்து பிழைத்துக் கொள்’ என்று நிம்மதியாக இருக்கிறது.


பி.டி.உஷாவைக் கண்டெடுத்து அவரை உலகளவில் உயர்த்திய ஓ.எம்.நம்பியாரை வைத்து, ஆசிய தடகளப் போட்டியின் பொழுது சுஜாதா ‘பத்து செகண்ட் முத்தம்’ என்ற அருமையான தொடர்கதையை எழுதினார். அதையெல்லாம் இங்கு யாராவது படமாக்க மாட்டார்களா என்று இருக்கிறது.

‘We can draw work by creating congenial atmosphere but greatness can be achieved only in adversarial circumstances’ என்பதை வலியுறுத்திச் சொல்கிறது விப்லாஷ்.

எவ்வளவு நாட்கள்தான் இசைவான சூழ்நிலையிலேயே நாமும் வேலை செய்து கொண்டிருப்பது?

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...