Friday 17 April 2015

மும்தாஜும் பத்ரிநாத் ஐஏஎஸ்ஸும்


'தமிழ் திரைப்பட நடிகை மும்தாஜ் சற்று ரசபாசமான பெயர்களைக் கொண்ட மூன்று பத்திரிக்கைகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 11 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டதாக' நாளிதழ்களில் வெளியான ஒரு செய்தியை எண்ணங்கள் பத்ரி நாராயணன் (கிழக்கு பதிப்பகம்) தனது வலைப்பதிவில் வெளியிட்டு, 'இத்தனை விரைவாக நமது நீதிமன்றங்களில் அவதூறு வழக்குக்கு நீதி கிடைத்ததை சற்று சந்தேகத்தோடு பாராட்டியுள்ளார்.

அவரது சந்தேகம் நியாயமானதே! பொதுவாக இவ்வாறான வழக்குகளில் வழக்கு நடைபெற்று இறுதி தீர்ப்பு கிடைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் ஆகலாம். சென்னையில் சுமார் பத்து ஆண்டுகளாவது ஆகலாம் என்பது எனது யூகம். அப்படி இருக்கையில் மும்தாஜுக்கு இது எங்ஙனம் சாத்தியமாயிற்று? ஒன்றும் பெரிதாக இருக்காது. பல சமயங்களில் பிரதிவாதியானவர்கள், அதுவும் இது போன்ற 'மஞ்சள் பத்திரிக்கை' மனிதர்கள் நீதிமன்ற அழைப்பினை ஏற்காமல் ஏமாற்ற முனைவர். 'நாம் போகாவிட்டால் என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற அலட்சியமும் காரணமாக இருக்கும். எனவே நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் 'வராதவர்கள்' என உத்தரவிடப்பட்டு மும்தாஜுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு கிடைத்திருக்கலாம்.

'எக்ஸ்பார்ட்டி தீர்ப்பாக' இருக்கப் போகிறது என பத்ரிக்கு மடல் எழுதினேன். மனிதர் உடனே, 'இந்தியாவில் இப்படி லட்சக்கணக்கான ரூபாய்கள் அவதூறு வழக்குக்கு நஷ்ட ஈடாக வழங்கியதாக' தீர்ப்புகள் இருக்கிறதா? என்று கேட்க, முன்பு எப்போதோ இல்ல்ஸ்டிரேட்டட் வீக்லி (ஞாபகம் இருக்கிறதா?) பத்திரிக்கை மீதான நஷ்ட ஈடு தீர்ப்பு ஞாபகம் வர.. .'ஏகப்பட்டது இருக்கே' என்று சொல்லி விட்டாலும்...பின்னர் வலையில் தேடினால், ஏறக்குறைய எல்லோரும் எல்லோர் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்த விபரம்தான் கிடைத்தது. தீர்ப்பான விபரம் எதுவும் இல்லை. ஆமாம், இதே மும்தாஜ் பத்து வருடம் கழித்து நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்லி....அவதூறு என வாதிட்டு அதை நீதிபதி தீர்க்கவா?

பத்ரிநாத் வழக்கில் கூட அப்படித்தான் ஆயிற்று.

திரு.சதுர்வேதி பத்ரிநாத் வரலாற்று அறிஞர். ஆனால் துரதிஷ்சவசமாக மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலரும் கூட. அவரது வரலாற்றுப் பிரியமோ அல்லது அரசுக்கு அவர் மீதான கோபமோ, சென்னையிலுள்ள ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான துறையின் ஆணையராக இருந்தார். 1973, செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியிலுள்ள வரலாற்றுக் குழுமத்தில் பேச அழைக்கப்பட்டவர், சிறிது காலத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தில் இருந்ததெல்லாம் வெறும் வரலாற்றுப் புரட்டு, அவை 'வரலாறுமல்ல புனைகதையுமல்ல' என்று ஒரே போடாக போட்டார்.

அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியே இப்படிப் பேசியது அரசுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி...விவகாரம் பாராளூமன்றத்திலும் வெடித்தது. புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தைப் பற்றிய இந்த சந்தேகம், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு அவமானம் எனக்கருதிய அரசு, பத்ரிநாத் மீது அரசு அலுவலர்கள் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்ந்தது.

காலச் சுழற்சியில் ஆட்சிகள் மாறின. ஆகஸ்ட்'1977ல் தமிழக அரசு பத்ரிநாத் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முதல்நாள் இந்தியன் எக்ஸ்பிரள் நிருபர் சாஸ்திரி ராமச்சந்திரன் காலப்பெட்டக பிரச்னை பற்றி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் 'பத்ரிநாத் அரசுப்பணியில் இருந்து கொண்டே அதனை சீர்குலைக்க முயன்றார்' என்று அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாக எழுதப்பட்டிருந்தது.

இதனால் மிகவும் மனவேதனையடைந்த பத்ரிநாத், எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்கு கடிதம் எழுத, அவரோ தனது பதிலில், தான் குறிப்பிட்ட செய்தித் தொடர்பாளர் தலைமைச் செயலாளரான கார்த்திகேயன்தான் என்று போட்டுடைத்ததோடு நில்லாமல், அவர் வேறு பல தகவல்களையும் தனது தொலைபேசி உரையாடலில் கூறியதாக' தெரிவிக்க பத்ரிநாத் வெகுண்டெழுந்தார். அடுத்த நாளே முதல்வரை நேரில் சந்தித்து தனது பிரச்னைகளை முறையிட வேண்டுமென்று கோரியும் எவ்வித பதிலும் இல்லை. எனவே 28ம் தேதி தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டுமென்றும் அதற்கு அரசு அனுமதி வேண்டுமென்றும் கூறி வேண்டுகோள் விடுத்தார். எதிர்பார்த்தபடியே அரசு 1978' பிப்ரவரியில் 'பொதுநலத்தை' சுட்டிக்காட்டி பத்ரிநாத்தின் வேண்டுகோளை நிராகரித்தது. அரசின் முடிவை எதிர்த்து பத்ரிநாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய, 1979' ஜனவரியில் அது தனி நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது. பத்ரிநாத் இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார். 1984' டிசம்பரில் டிவிஷன் பெஞ்ச் பத்ரிநாத்தின் மேல் முறையீடை அனுமதித்து, 'அரசினை அவருக்கு கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு வேண்டியது. அரசு விடவில்லை. உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அக்டோபர்' 1987ல் வழக்கை விசாரித்து, 'அடடா! கார்த்திகேயன் எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசியதும் தனது கருத்தைக் கூறியதும் அவரது பணியின் நிமித்தமான காரியமல்ல. அவரது தனிப்பட்ட செயல். இதற்கு எதற்கு அனுமதி?' என்று கூறி வழக்கை ஏற்றுக் கொண்டது.

ஆக, பிரிலிமினரி ரவுண்ட் முடியவே பத்ரிநாத் வழக்கில் பத்து ஆண்டுகள் ஓடிக் கடந்திருந்தது. எம்ஜியாரும் உலகை விட்டு பிரிந்து கொண்டிருந்தார்...கார்த்திகேயன், பத்ரிநாத் ஆகியோரெல்லாம் தத்தமது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்கள். அதற்குப் பிறகு பத்ரிநாத் தனது வழக்கினை தொடர்ந்தாரா என்பது தெரியவில்லை.

'காலப்பெட்டகத்தை தோண்டியெடுத்து மறுபரிசீலனை செய்யப் போகிறோம்' என்று ஜனதா ஆட்சியில் (1977-79) முழங்கினார்கள். அப்படியே அதுவும் என்னவாயிற்று என்று கூறினால் நலம்.

(பிரபலங்களால், நமது நாட்டில் தாக்கல் செய்யப்படும் அவதூறு வழக்குகள் இறுதி வரை தொடர்ந்து நடத்தப்படுகின்றன. சமீபத்தில் அரசியல்வாதி ஒருவருக்காக நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ரூ.50,000/- தீர்ப்பளிக்கப்பட்டாலும், பிரதிவாதிக்கு அதைக் கொடுப்பதற்கு வசதி ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்நேரத்தில் இன்று செய்தித்தாளில் நடிகை சுகன்யா சன் டிவி நிறுவனம் மீது தாக்கல் செய்த வழக்கில் 20 வருடங்கள் கழித்து ரூ.10,00,500/- நட்ட ஈடு என தீர்ப்பளிக்கப்பட்டதாக படிக்கையில் பத்து வருடங்களுக்கு முன்னர் நான் வேறு இரு அவதூறு வழக்குகள் குறித்து மேலே கண்ட கட்டுரை எழுதியது நினைவுக்கு வந்தது. எப்படியாயினும் 20 வருடங்கள் தொடர்ந்து வழக்கு நடத்தில் வெற்றி பெற்ற சுகன்யாவை பாராட்ட வேண்டும். ஆனால், சுகன்யாவுக்கு நேரிட்ட இழப்பையும், சன் டிவி நிறுவனத்தின் பணபலத்தையும் பார்க்கையில் இந்த இழப்பீடு மிகக் குறைவு என்றே எண்ணுகிறேன்.)

1 comment:

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....