Tuesday 29 December 2015

வேளாங்கன்னி 2015

சுனாமியின் சுவடுகளை வேளாங்கன்னி முற்றிலும் துடைத்து எறிந்துவிட்டது போல. கடந்த பத்தாண்டுகளில் பலமுறை டிசம்பர் கடைசியில் சென்றிருக்கிறேன். அநேக நினைவஞ்சலி போஸ்டர்கள் கண்ணில்படும். ‘காணவில்லை’ என்ற போஸ்டர் கூட பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்த முறை ஒரு போஸ்டர் கூட இல்லை. நான் பார்த்த ஒரே ஒரு சுவரொட்டியும் வேறு ஒரு நாள் நிகழ்ந்த இறப்பிற்கானது. The world has to move on, leaving the dead behind!

வேளாங்கன்னி பரிணாம வளர்ச்சியில் அடுத்த நூறு ஆண்டுகளில் இந்துக் கோவிலாக மாறிப் போகும் சாத்தியங்கள் இருக்கிறது. பூசைக்கான பொருட்கள் இந்துப் பழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்குவதை உணர முடிகிறது. கூட்டம் கூட்டமாக இந்துக்கள் மற்ற கோவில்களுக்கு யாத்திரை செல்கையில், வேளாங்கன்னியையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

முழுக்கவும் வியாபாரம். வருபவர்களுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ, வேளாங்கன்னி மாதா ஜாதி மத பேதமின்றி அங்கிருக்கும் அனைவருக்கும் வாழ்வளிக்கிறார்.

இரவு கடற்கரையோரம் பொரித்த மீன் ஆப்பம், கணவாய் என்று சாப்பிட்டுவிட்டு கடைத்தெரு வழியாக கோவிலை நோக்கி நடந்த பொழுது, ‘திடீரென சவுக்கைத் தூக்கிக் கொண்டு எருசலேம் தேவாலயத்துக்குள் போன மாதிரி இப்போது இயேசு வந்தால் எப்படியிருக்கும்’ என்று சம்பந்தமில்லாமல் தோன்றியது.

‘சேச்சே, அவர் இரக்கமானவர். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிடுவார்’ என்று நினைத்தவாறே மகள் மிகவும் ஆசைப்பட்டபடி சிறிய சங்கில் அவளுடைய பெயரைப் பொறித்து அதை கீ செயினாக மாற்றிக் கொடுத்த எளிய மனிதர் கேட்ட நாற்பது ரூபாயைக் கொடுத்தேன்

-oOo-

“இந்தப் பூட்டை எல்லாம் அப்புறம் எப்படி எடுப்பாங்க?” என் மகள், இரு நாட்களுக்கு முன்னர் வேளாங்கன்னி ஆலயத்தில் நேர்த்திக்காக பூட்டப்பட்டிருந்த பூட்டுகளைப் பார்த்து.

“ஒரு வேளை அறுத்து எடுப்பாங்களாக்கும்” நான்.

“ஐயோ வேஸ்டா போயிடுமே”

“பழைய இரும்புக்கு போடுவாங்க” சொல்லும் போது கஷ்டமாகத்தானிருந்தது.

“போங்கப்பா, இங்க உள்ள கடையிலதானே வாங்குறாங்க. பூட்டு நம்பரைப் பாத்து டூப்ளிகேட் கீ கடையில இருந்து வாங்கிட்டு வந்து திரும்பவும் வித்துறுவாங்க”

அட இப்படி ஒரு வழியிருப்பது எப்படி எனக்குத் தெரியாமல் போயிற்று. எந்தப் புதிருக்கும் எளிதான விடையிருப்பது எனக்கு எப்போதும் தோன்றுவதேயில்லை.

“என்ன இருந்தாலும் அவர் ஒரு அதிசயமானவர்தாம். மேடையில ஜெபம் செஞ்சுகிட்டு இருக்கும் போதே, கூட்டத்திலிருந்து யாரையாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடுறாரே’ தூத்துக்குடிக்கு சுவிசேஷ கூட்டம் நடத்த வந்திருந்த சகோதரர் டி ஜி எஸ் தினகரன் பற்றி அம்மா வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்ம சேகர், எலிசபெத்’துன்னு பொதுவா கூப்புடுறாரு. செளந்தரின்னுல்லாம் சொல்லக் கூடாது. ஞான செளந்தரி பொன்னம்மாள்’னு உங்க முழுப் பெயரையும் சொல்லிக் கூப்பிடட்டும். நான் நம்புறேன்”

‘”ஏன் கூப்பிடுவாறே” அம்மா முகத்தில் சிறு புன்னகை.

எனக்கு பயம் வந்து விட்டது, ஒரு வேளை அப்படியும் கூப்பிட்டு விடுவாரோ என்று. “தெர்மல் நகரில் குடியிருக்கும் ஞான செளந்தரி’ன்னு கூப்பிடுவாரா’ சோதனையை தீவிரப்படுதினேன்.

“அதுவும் முடியுமே”

பள்ளிக்கூடப் பையனைப் போல நான் முழித்ததைப் பார்த்து அம்மாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை “ஜெபம் பண்றதுக்கு நம்ம வீட்டு முழு ஹிஸ்டரியும் பத்தி ஜீஸஸ் கால்ஸுக்கு லெட்டர் எழுதியிருக்கேன்” என்று சொல்லியவாறே எழுந்து போய் விட்டார்கள்.

No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....