Wednesday 9 September 2015

சாய்பாபாவும் இராமரின் மோதிரமும்

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவைப் பற்றிய ஆவணபடம் ஒன்றினைப் பார்த்தேன். படத்தின் இறுதியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் சாய்பாபா, தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே இருந்த மேசையில் வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், ‘அது பின்னர் மறைந்துவிடும்’ என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரமும் மறைந்து போனது.

இவ்வாறாக சாய்பாபா புராண காலத்து நகைகளை நம் முன் கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் (Antique)  ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டத்தில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆயினும், மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட ஏதாவது பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது என்று அறிவித்து அந்த உத்தரவு மீறப்பட்டால் மட்டுமே குற்றமாகும்.

எனவே சாய் பாபா வெறுமே ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை என்றுதான் தோன்றுகிறது

1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் பற்றிய பல கட்டுப்பாடுகள் உண்டு. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும் என்ற கடமை.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

1976ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள GSR 280(E) என்ற அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வந்தாலும், 1980ம் வருடம் மத்திய அரசு வெளியிட்ட S.0. 397(E) என்ற திருத்தப்பட்ட பட்டியலில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே 1980ம் ஆண்டிலிருந்து பதிய வேண்டிய பிரச்னையும் இல்லை.

மதுரை
18.04.08

1 comment:

  1. http://www.saibabaofindia.com/materializationofjewels.htm#materialization%20of%20%20jewels%20belonging%20to%20the%20time%20of%20Rama

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....