Friday 25 March 2016

பாரத் மாதா கி ஜெய்!

இப்படி வைத்துக் கொள்வோம். ஒருவேளை நமது உச்சநீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை சுற்றறிக்கை ஒன்றை அனுப்புகிறது. அதாவதுஇனி நீதிமன்றங்களில் தினப்படி அலுவல்களை ஆரம்பிக்கும் முன்னர், நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக் கொள்வதற்குப் பதிலாகபாரத் மாதா கீ ஜெய்என்று முழங்க வேண்டும்என்பதாக.

இப்படியான சுற்றறிக்கையில், நம்மில் பலருக்கு முக்கியமாக செய்தித்தாள்களை படிப்பவர்களாயிருந்தால் எதுவும் பெரிய அதிர்ச்சியாயிருக்காது என்பதுதான் இன்று நம்மை அச்சமூட்டக்கூடிய உண்மை.

மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரை கட்சி வேறுபாடு இல்லாமல் மற்ற உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று முழக்கமிட வறுப்புறுத்துகிறார்கள். அவரோ மற்றவர்கள் அவ்வாறு முழக்கமிடுவதில் தனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்றும், தன்னைப் பொறுத்தவரைஜெய் ஹிந்த்என்றுதான் முழக்கமிட முடியும் என்று கூறுகிறார்.

பின்னர் அவை கூடிபாரத் மாதா கி ஜெய்என்று முழக்கமிட மறுத்ததால் அவர் தேசபக்தி அற்றவர் என்று தீர்மானம் இயற்றியதோடு அல்லாமல் அவையிலிருந்தும் தற்காலிகமாக அவரை  நீக்கம் செய்துள்ளது.

சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்து விட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்றால் நடைபெற்றது மிகப்பெரிய அரசியலமைப்புச் சட்ட மீறல், மக்களாட்சிப் படுகொலை என்று அவையின் இந்தச் செயல் வருணிக்கப்பட்டிருக்கும்.

அனைத்து ஊடகங்களிலும் கோபத்துடன் விவாதிக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றம் கூட ஒருவேளை தன்னிச்சையான பேராணை மனுவாக இச்செயலை விசாரணைக்கு எடுத்திருக்கலாம். எழுப்பியிருக்கலாம்.

ஆனால் இன்றோ வெறும் செய்தி என்ற அளவில் நமது சமூகம் கடந்து சென்று விட்டது. உண்மையில், எவ்வித எதிர்ப்புணர்வுமின்றி இப்படியான உரிமை மீறல்களை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக நாம் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

இஸ்லாமியர்கள் என்ன, கிறிஸ்தவர்களில் சிலருக்குக் கூட இவ்விதம் முழக்கமிடுவதில் சங்கடங்கள் இருக்கலாம். சீக்கியர்களுக்கும் இது உகந்ததல்ல என்று சீக்கிய தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இஸ்லாமிய நீதிபதிகளில் சிலர் கைகூப்பி வணங்குவதைத் தவிர்த்து லேசாக தலையை தாழ்த்துவதோடு நிறுத்திக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவர்களின் தேசபக்தியும், நாட்டுப்பணி செய்யும் தகுதியும் கேள்விக்குள்ளாக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

நீதிபதிகள் என்ன, தன்னை இந்தியன் என்று கூறிக் கொண்டு கடவுச்சீட்டுக்கு மனுச்செய்யும் யாரும் இவ்வாறு முழங்கினால்தான் ஆயிற்றுஎன்றால்?

அமெரிக்க மக்கள் தங்களது சுதந்திர தினத்தை இங்கு நாம் தீபாவளி கொண்டாடுவது போல அவ்வளவு உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். நம்மவர்கள் ஏன் அவ்வாறு இல்லைஎன்று சிவாஜி கணேசன் ஒரு பேட்டியில் ஆதங்கப்பட்டிருந்தார்.

கொடிகள் அசைப்பதிலும், முழக்கமிடுவதிலும், தேசிய தினங்களை உற்சாகமாக கொண்டாடுவதிலும் அமெரிக்கர்கள் காட்டும் உற்சாகத்தைப் பார்த்து ஆதங்கப்படும் நாம் அதை விட நூறு மடங்கு உற்சாகமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வடகொரிய மக்களைப் பார்த்து பரிதவிக்கிறோம்.

தம் மக்கள் நலன் பேணும் அமெரிக்க தலைமையும், மக்களாட்சியும் தேசபக்தியை மக்களுக்கு ஊட்டுகிறது; வட கொரியாவோ திணிக்கிறது என்பதை நாம் நன்றாக அறிந்தே வைத்திருக்கிறோம். எனவேதான் வட கொரியாவை நாம் உதாரணமாகக் கூறுவதில்லை.

தேசபக்தி என்பது பொருளாதார வளர்ச்சியாலும், மக்கள் நலத்திட்டங்களாலும் ஊட்டப்பட வேண்டியதேயொழிய வெற்று கோஷங்களால் திணிக்கப்படக் கூடியதில்லை. இந்த உண்மையை கற்றுக் கொள்வதற்கு முன் கிழக்கு ஐரோப்பிய மக்கள் கொடுத்த விலை அதிகம்.

நாமும் அப்படிப்பட்ட விலையைக் கொடுத்த பின்னர்தாம் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறோமா, என்பதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

வரலாறு நம் ஆசிரியர்என்பது எத்தனை சத்தியமான வாக்கியம்?



No comments:

Post a Comment

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....