Sunday, 12 June 2016

ஆர்டர்..! ஆர்டர்..!!

புத்தங்கள்தாம் எவ்வளவு சிறந்த நண்பன்.

ஒரு கோட்டோவியனாக அல்லது வயலின்? கலைஞனாகக் கூட இல்லை குறைந்தபட்சம் வாசிக்கத் தெரிந்தவனாக இருக்க முடியுமானால் போதுமே, எவ்வித தனிமையையும் எப்படிப்பட்ட புறக்கணிப்பையும் வென்று விடலாம் என்று நினைப்பேன்.

நுண் திறமைகளை வளர்த்துக் கொள்ள பொறுமையற்ற என்னைப் போன்றவர்களுக்கு இயற்கை அளித்த ஆறுதல் புத்தகங்கள் என்பதை சமீபகாலமாக அதிகமாக உணர்கிறேன்.

அதுவும் புத்தகக் காட்சியில் வாங்கி வந்த நீதிபதி சந்துருவின்ஆர்டர் ஆர்டர்என்ற புத்தகம் தனிமையில் எனக்குத் துணை நின்றது என்பதை விட இறுதியில் சுயசரிதையாக சுமார் நாற்பது பக்கங்களில் எழுதப்பட்டவை, அவரது வாழ்க்கையைப் பற்றியதான புரிதலில் ஒரு நல்ல நண்பனைப் போல எனது பார்வையை விலாசமாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்துரு சாரைப் பொறுத்தவரை, சக வழக்குரைஞர்களால் அவரளவுக்கு நேசிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது விமர்சிக்கப்பட்டவர்களும் இருக்க முடியாது.

ஆனால் இப்புத்தகம் பல புதிர்களை அவிழ்த்து, ‘மனுஷன், என்ன மாதிரியான வாழ்ந்திருக்கிறான்என்று படிப்பவர்களில் சிலருக்கேனும் அவரது வாழ்க்கையில் இருக்கும் முரணைப் பற்றிய சரியான புரிதலை ஏற்ப்படுத்தும். அவரது நியாயங்களும் புரியவரலாம்.

சந்துருவும் ஒரு கலகக்காரர்தானேஎன்று ஆதங்கப்படும் பலரிடமிருந்து அவர் வித்தியாசப்படுவதுகல்என்பதைகலகம் செய்என்பதற்கு முன்னதாக வைத்த அம்பேத்கர் அவர்களின் அறிவுரையை அதே வரிசையில் தன் போராட்ட வாழ்க்கையில் பின்பற்றியதுதான்.

மாணவனாக அவர் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக, சட்டக்கல்லூரி போராட்டங்கள் என்றாலும் சரி, பொதுவுடமைவாதியாக அவர் பங்கு கொண்ட பாடி டிவிஎஸ் தொழிற்சாலைப் போராட்டமென்றாலும் சரி இறுதியில் வழக்குரைஞராக அவர் முன்னின்ற போராட்டங்களிலும்கலகம்என்பதற்கு முன்னே அந்தப் போராட்டங்களயும், பிரச்னைகளையும் பற்றிய முழுமையான கல்வி அவரிடம் இருந்தது நாமறிந்த மற்ற பல கலகக்காரர்களிடம் இருந்து அவரை வித்தியாசப்படுத்துகிறது.

இப்புத்தகத்திலிலுள்ள கட்டுரைகள் ஜூனியர் விகடனில் எழுதப்பட்ட காலகட்டத்தில் மும்பையில் இருந்ததால் நான் அவற்றை அறிந்திருக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இணையத்தில் நானும் சட்டம் பற்றி எழுதி வந்தேன். தமிழில் அவ்வாறு எழுதப்படுவது நான் மட்டுமே என்று கூட நினைத்து வந்தேன்.

சந்துரு சாரின் இப்புத்தகத்தைப் படிக்கையில் எப்படி இக்கட்டுரைகளை தவற விட்டேன் என்று வெட்கமாக இருக்கிறது.

இப்போதும் சட்டம் சம்பந்தமாக எழுதி வருகிறார் என்றாலும், அவரை ஒரு நீதிபதியாக மட்டுமே தற்போது அறிந்த பலருக்கும் ஒரு வழக்குரைஞராக இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழக வழக்குரைஞர்கள் முன்னே இன்றும் பூதாகரமாக எழுந்து நிற்கும் பிரச்னைகளைப் பற்றி அவரது எண்ணம் எவ்வாறு வெளிப்பட்டது என்பது புரிபடும்.

வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தை விட தமிழில் சோர்வில்லாமல், மேலும் வேகமாக படிக்க இயலும் விரும்பும் வழக்குரைஞர்களின் பின்னணியைக் கருத்தில் கொண்டு இப்புத்தகத்தில் விலை 100ரூபாய்க்குள் இருந்திருக்கலாம். அல்லது அனைத்து வழக்குரைஞர் சங்க நூலகங்களில் மற்ற வறட்டு சட்ட சஞ்சிகைகளுடன் இப்புத்தகத்தையும் சுற்றுக்கு விடலாம்.

பாராளுமன்றத்தில் பொடா சட்டத்தை ஆதரித்துப் பேசிய வைகோ பின்னர் அதே சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதை கிண்டலடித்து வந்தோம். ஆனால் நெருக்கடி நிலையில் மிசா சட்டத்தின் கொடுமைகளுக்கு உள்ளான திமுக 1971ம் ஆண்டு இந்திரா காந்தி அரசு இச்சட்டத்தை இயற்றிய பொழுது அதற்கு துணை நின்ற வரலாறையும் பின்னர் இச்சட்டதைப் பயன்படுத்தி தமிழக அரசியல் தலைவர்கள் சிலரை உள்ளே தள்ளிய விபரத்தையும் இப்புத்தகத்தில் அறியலாம்.

தமிழக அரசியல் தலைவர்கள் பலரையும் அவர்களது குறிப்பிட்ட ஒரு செயலுக்காக பாராட்டும் அதே வேளையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உட்பட எவ்வித பாரபட்சமின்றி அவர்களது மற்ற செயல்களுக்காக விளாசியும் தள்ளுகிறார் சந்துரு.

ஜஸ்டிஸ்என்ற ஆங்கில வார்த்தையைநடுவர்என்று மொழியாக்கம் செய்யாமல்நீதியரசர்என்று மொழியாக்கம் செய்யப்பட்டதைபிரபுவே என்று விளிப்பதுஎன்ற ஒரு கட்டுரையில் வழக்குரைஞராக கிண்டலடித்தவர் இன்றுநீதிநாயகம் சந்துருவாக’ வளர்ந்து நிற்பதும் சமயங்களில்நீதியரசர்’ சந்துருவையும் பொறுத்துக் கொள்வது இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகளை நேர்மையாக அணுகும் எவருக்கும் அவரிடம் வெளிப்படுவது முரணில்லை மாறாக பரிணாமவளர்ச்சிஎன்பது தெரியவரும்.

நீதித்துறையில் கடந்த சில நாட்களாக, இல்லை மாதங்களாகவே நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையால் மனக்குழப்பத்தில் இருக்கும் இளம் வழக்குரைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை. இப்புத்தகத்தைப் படியுங்கள், தயவு செய்து; பின் சிந்தியுங்கள்.


தொடர்ந்து, ஒற்றைக் குரலாக இக்கட்டுரைகளிலிருந்து ஒலிக்கும் சந்துருவோடு நீங்கள் விவாதிக்கத் தொடங்குவதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

ஞாயிறு போற்றுதும் 04/02/18

மாநிலத்தில் மட்டுமல்ல , மத்தியிலும் பாஜக ஆளும் கட்சி . ஆயினும் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று ராஜஸ்தான் மாநில தொகுதிகளிலும் பாஜக...