Tuesday 28 July 2015

கேபிஎன் விபத்தில் நசுங்கிய பத்திரிக்கை தர்மம்

இரண்டு நாட்களாக காலையில் முதல் வேலை வீட்டிற்கு வரும் ஹிந்து, டைம்ஸ், தினகரன் ஆகிய மூன்றிலும் அந்த செய்தியை தேடுவதுதான். நேற்றும் இல்லை இன்றும் இல்லை. அதற்கு முன்னாள் தொலைக்காட்சிகளில் வரிச் செய்தியாக ஓடியது, பின்னர் அதுவும் நின்று போனது.

கேபிஎன் நிறுவன பலத்தில், பத்திரிக்கை தர்மங்கள் கூட விபத்து நடந்த பேருந்தின் அடியில் நசுங்கிப் போய்விட்டது போல.

அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லையோ என்று கூட ஒரு கணம் நினைத்தேன். ஆனால் முகம் நசுங்கி இறந்து போன ஒன்று விட்ட தம்பியை புதைத்து விட்டு வந்த கல்லறைத் தோட்ட மணம் அதை மறுக்கிறது.

இருபது பேர் சாவு, குழந்தை சாவு, புது மாப்பிள்ளை சாவு என்று தினந்தோறும் கண்ணில்படும் விபத்துச் செய்திகளை வெறுமே கடந்து சென்றாலும், இறப்பின் வலி நம் முகத்தின் மேலேயே அறைகையில் அவ்வளவு எளிதில் ஒதுக்க முடியவில்லை.

பத்து வருடம்! கல்யாணமாகியல்ல காதலித்து அதுவும் சொந்த அத்தை பொண்ணை. போன வாரம்தான் திருமணம் நிச்சயமாகியது. பெண் கொழும்பு. இங்கு நடந்த ஒரு திருமணத்தில் முதன் முதலில் பார்த்து பிடித்துப் போய் திருமணம் மதுரையிலா கொழும்புவிலா என்ற இழுபறியில் பத்து ஆண்டுகள் ஓடிப் போய் ஒரு வழியாக நிச்சயமானதை, சித்தப்பா ‘இந்தியா இலங்கை ஒப்பந்தம் 'மோடியால் அல்ல இந்த டாடி’யால்’ என்று தனது முகநூலில் பதிந்திருந்த நிலைத்தகவலைப் பார்த்து ரசித்த புன்னகை கூட இன்னும் மிச்சமிருக்கிறது.

இவ்வளவு நாட்களாக வாட்ஸப்பில் பார்த்ததோடு சரி. ‘டிசம்பரில்தானே கல்யாணம். நிச்சயமான அன்றும் கூட்டத்தில் பேச முடியவில்லை’ என்று வெள்ளிக்கிழமை கொழும்பு கிளம்பிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு மணி நேரமாவது பார்த்து தனிமையில் பேச விரும்பி வியாழன் ராத்திரி பெங்களூரில் இருந்து கிளம்பி வந்தவனை பயணிகளோடு சேர்ந்து தானும் தூங்கிப் போன கேபிஎன் டிரைவர் கரூர் தாண்டாமலேயே முடித்து வைத்து விட்டார்.

‘உன் கையை கூட நான் பிடிச்சுப் பாத்ததில்லையே’ என்று பத்து வருடங்களாக அவனை காதலித்து வந்தவள் அழுததாக சொன்னார்கள். இனி அந்த வார்த்தைகள் என்னைத் துரத்தும்...

தொடர்ந்து பெரிய விபத்துகளைப் பார்த்து விட்டாலும் விபத்து பற்றிய செய்திகளை பத்திரிக்கைகளில் வர விடாமல் செய்து விட்ட கேபிஎன்’ நிர்வாகத்தையும் துரத்தட்டும்.

3 comments:

  1. கொஞ்சநாட்களுக்கு முன் ஒரு ஓட்டுனர் குடித்துவிட்டு பயணிகளால் கண்டிக்கப்பட்டார் .பிரபலம்.ஆகிவிட்டாலே தவறுகள் அரஙகேற்றம்ஆரம்பமாகிவிடுகிறது.

    ReplyDelete
  2. பத்திரிக்கை செத்து பொய் ரொம்ப நாளாச்சுங்க... டிவி'ல செய்திகள பார்க்க முடியல. பெருமைக்காகவும் செல்வாக்குகாகவும் டிவி நடத்தினா பத்திரிக்கை எப்படி விளங்கும்?

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....