Tuesday, 3 March 2015
இயற்கை நீதியை மீறுகிறதா, இந்திய முத்திரைக் கட்டண சட்டம்?
ரவிகிரனுக்கு உரிமைப்பட்ட கட்டிடத்தில் அஷ்வின் வாடகைதாரர். வாடகை ஒப்பந்த பத்திரப்படி வாடகைதாரரை காலி செய்ய வேண்டுமென்றால், உரிமையாளர் வைப்பீடாகத் (Deposit) தரப்பட்ட ரூ.5 லட்சத்தை திருப்பித் தர வேண்டும். ஆனால் அவ்வாறு திருப்பித் தரமாலேயே அஷ்வின் கடையை காலி செய்ய வேண்டும் என்று ரவிகிரன் வழக்கு தாக்கல் செய்கிறார்.
துரதிஷ்டவசமாக அஷ்வின் வசம் இருந்த வாடகை ஒப்பந்தத்தின் அசல் திருடு போய் விட்டது. அவரிடம் இருப்பது ஒளிநகல் (Photo Copy) மட்டுமே. ‘அதனால் என்ன, அசல் திருடு போய் விட்டது என்று கூறி ஒளிநகலை தாக்கல் செய்ய சான்றுச் சட்டம் பிரிவு 65(c) வழி செய்கிறது’ என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆயினும் ஒளிநகல் தாக்கல் செய்வதில் கீழ்கண்ட பிரச்னைகள் எழலாம்.
(1) அந்த வாடகை ஒப்பந்தம் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணமாயிருந்து பதிவு செய்யப்படவில்லை என்றால் சான்றாவணமாக தாக்கல் செய்ய முடியாது. ஆனால் பதிவு செய்யப்படாத ஆவணத்தை வாடகை ஒப்பந்தமாக அல்லாமல் பிற நோக்கங்களுக்கான (Collateral purpose) சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளலாம். அஷ்வின் ரவிகிரன் வசம் ரூ.5 லட்சம் கொடுத்ததை நிரூபிப்பது பிற நோக்கம் என்ற வகையில் வரும். எனவே அதற்காக அந்த ஆவணத்தை சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளலாம்.
ஒளிநகல்? அதையும் பிற நோக்கத்திற்காக ஏற்றுக் கொள்வதில் தடை ஏதும் இல்லை.
(2) அடுத்து வாடகை ஒப்பந்தத்தில் அதற்குத் தேவையான முத்திரைக் கட்டணம் (Stamp Duty) ஒட்டப்படாவிட்டால் இந்திய முத்திரைக் கட்டண சட்டம் (The Indian Stamp Act ‘ 1899) பிரிவு 35ன் படி சான்றாவணமாக ‘எந்தக் நோக்கத்திற்கும்’ (for any purpose) ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதே சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மீதி முத்திரைக் கட்டணத்தோடு அதற்காக அபராதத்தை கட்டினால் அதனை சான்றாவணமாக குறியீடு (Mark as an Exhibit) செய்வதில் தடையில்லை. உரிமையியல் வழக்குகளில் இவ்வாறு அபராதம் கட்டி ஆவணங்களை குறியீடு செய்வது சாதாரணமாக தினப்படி நடக்கும் ஒரு விடயம்.
ஒளிநகல்? இங்குதான் அஷ்வினுக்கு பிரச்னை உள்ளது. அவர் முத்திரைக் கட்டணத்தையும் அபராதத்தையும் கட்ட தயாராக இருப்பினும், அவ்விதம் கட்டுவதற்கு அவரிடம் ஆவணம் இல்லையே. அவரிடம் இருப்பது ஒளிநகல். அது ஆவணம் இல்லை. எனவே அவரால் முத்திரைக் கட்டண அபராதத்தை செலுத்த முடியாது. விளைவாக, அவரால் ஒளிநகலை குறியீடு செய்யவே முடியாது.
பிற நோக்கத்திற்காக? அதுவும் இயலாது. ஏனெனில் முத்திரைக் கட்டண குறைபாடு இருந்தால் அந்த ஆவணத்தை எந்த நோக்கத்திற்கும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரிவு 35 கூறுகிறது.
இவ்விதம் முத்திரைக் கட்டண குறைபாடு உள்ள ஆவணமானது அதனை தாக்கல் செய்ய விரும்புவரது வசம் இல்லாது போனால் அதன் ஒளிநகல் அல்லது பிற நகலை அல்லது எந்தவிதமான இரண்டாம்தர சாட்சி (Secondary Evidence) மூலமும் நிரூபிக்க இயலாது என்ற கருத்தானது உச்ச நீதிமன்றத்தின் Jupudi Kesava Rao Vs Pulavarthi Venkata Subbarao AIR 1971 SC 1070 என்ற தீர்ப்பில் கூறப்பட்டு சமீபத்தில் Hariom Agarwal Vs Prakash Chand Malaviya 2007 (8) SCC 514 என்ற வழக்கில் அதன் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் ஆமோதிக்கப்பட்டுள்ளது.
எனக்கென்னவோ, முத்திரைக் கட்டண குறைபாட்டிற்காக இரண்டாம்தர சாட்சியை இவ்விதம் முழுமையாக தடை செய்வது, இயற்கை நீதிக்கு எதிரானதாகத் தோன்றுகிறது. முத்திரைக் கட்டண சட்டம் இயற்றப்படும் பொழுது இவ்விதமாக சிக்கலை எதிர்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், இந்தச் சட்டத்தின் நோக்கம் அரசுக்கு வரவேண்டிய முத்திரைக் கட்டணத்தை முறையாக வசூலிக்க வேண்டியதே தவிர வேறில்லை.
இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 35ல் தகுந்த உட்பிரிவை சேர்ப்பதன் மூலம் இக்குறைபாட்டை நீக்க இயலும் என்று நினைக்கிறேன்.
மதுரை
03/03/15
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....

-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
Luden was a fisherman. The Government has enrolled Luden under a Group Insurance Scheme through National Federation of Fishermen Co-ope...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
பதிவு செய்யப்படு இருந்தால் (சார்பதிவாளர்) பதிவு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் நகல் , மூல ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும் எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுமா?
ReplyDeleteசார்பதிவாளர் அலுவலக நகல் வழக்கு விசாரணையை பொறுத்தவரை இரண்டாம்தர சாட்சியே.// மூல ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும் எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுமா?// மூல ஆவணத்தைக் கொடுத்தால்தால் அடமானத்தின் பெயரில் கடன் வாங்க இயலும்
ReplyDelete