Showing posts with label Book Review. Show all posts
Showing posts with label Book Review. Show all posts

Thursday, 8 December 2016

திங்கிங் ஆன் மை ஃபீட் (சாருஹாசன்)

கமல்ஹாசனை இப்போது எனக்கு ரொம்ப பிடிக்கிறது. அவரது திரைப்படங்களுக்காக என்றால் மறுபடியும் ஏமாந்து போவீர்கள்.

நேற்று படித்து முடித்த புத்தகம்!

அவர் ஒரு வழக்குரைஞர் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அவரிருந்த ஊரை வைத்து ஏதோஸ்மால் டைம்வக்கீலாக இருந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரோ அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமான வக்கீலாக இருந்திருக்கிறார். அதை விட அப்போதைய ஆளும் கட்சியில் மாவட்ட அளவில் நிர்வாகிகளை தீர்மானிக்கக் கூடிய அபரிதமான அதிகாரம் அவரிடமிருந்திருக்கிறது.

வைணவர். ஆனால் அவர் தனது குருவாக கருதியது அவருடன் அரசியல் கைதியாக சிறையில் இருந்த யாகூப் ஹாசன் என்ற இஸ்லாமியர்.  அந்த அபிமானத்தில் தனது மகன்களுக்கு அவர் வைத்த பெயர்கள் சந்திரஹாசன், சாருஹாசன் மற்றும் கமலஹாசன்.

ஸ்ரீனிவாசன் ஐயங்கார்!

சொல்லிக் கொள்வதற்கு எவ்வளவோ இருப்பினும், கமல்ஹாசன் தனது தந்தையைப் பற்றி பேட்டிகளில் அதிகம் பெருமையடித்துப் பார்த்ததில்லை. நான் கமலஹாசன் பள்ளிக்கே செல்லாததை வைத்து ஏதோ ஏழ்மை அல்லது அசாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்று நினைத்து வந்தேன்.

நண்பர் ஒருவர் கொடுத்தனுப்பிய சாருஹாசனின்திங்கிங் ஆன் மை ஃபீட்என்ற ஆங்கில புத்தகத்தை படிக்காமலிருந்தால், சாருஹாசன் கூட ஏதோ தம்பியின் அடைக்கலத்தில் காலத்தை ஓட்டிய மோசமான நடிகர் என்றே கருதிக் கொண்டிருந்திருப்பேன்.

சாருஹாசன் ஐம்பதுகளிலிருந்து முப்பது வருடங்களாக சிறந்த ஒரு குற்றவியல் அதுவும் ராமநாதபுரம் மதுரையில் டிரையல் வழக்குரைஞராக இருந்திருக்கிறார் என்பது நான் அறியாதது.

டிரையல் கோர்ட் வக்கீல் தொழிலில் உள்ள சுவராசியம் ஹைகோர்ட்டில் இருக்காதுஎன்று எனது அனுபவக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டேன். சாருஹாசனின் இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அது எவ்வளவு உண்மை என்று புரியும்.

சாருஹாசனின் வக்கீல் தொழில் அனுபவங்களில்தாம் எவ்வளவு சுவராசியங்கள். இம்மானுவேல் சேகரனுக்கும் வழக்கு நடத்தியிருக்கிறார். அவரைக் கொலை செய்த வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கும் பெயில் தாக்கல் செய்திருக்கிறார். அதுவும் நக்கலான தனது பதில்களால் குறுக்கு விசாரணை செய்த வக்கீலையும் அவரோடு சேர்த்து கோர்ட்டையும் முட்டாளாக்கியதற்காக இம்மானுவேல் சேகரன் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிக்கை கொடுக்கப்பட்டதும் அதை சாருஹாசன் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ததும் படித்து அனுபவிக்க வேண்டும்.

மதுரை இராமநாதபுர மாவட்ட வழக்குரைஞர்கள் எப்படி இந்தப் புத்தகத்தை தவற விட்டார்கள் என்று தெரியவில்லை. டிரையல் வழக்குகளில் உள்ள நுணுக்கங்கள், சூழ்ச்சிகள். ஏமாற்றங்கள், களிப்புகள் என்று சாருஹாசனின் அனுபவங்களில் ஒவ்வொரு டிரையல் வழக்குரைஞர்களும் தங்களது கதைகளை உணர்வார்கள்.

உண்மையில் புத்தகத்துக்கு தலைப்புஆர்ட் ஆஃப் கிராஸ் எக்ஸாமினேஷன்என்று வைத்திருக்க வேண்டும். பல்வேறு சட்டக் கருத்துகளோடு ஒவ்வொரு வழக்கிலும் தனது குறுக்கு விசாரணை பற்றி போகிற போக்கில் சொல்வது போல பேசுமொழியில் சாருஹாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் அனைத்து இளம் வழக்குரைஞர்களும் ஜாலியான பாடமாக இருக்கும். ஆங்கில நடைதான் கொஞ்சம் தட்டையாக இருக்கிறது.

வழக்குரைஞர்கள் எழுதியது என்றால் பொதுவாக உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பற்றி மேட்டிமைத் தனத்தோடு இருக்கும் சூழலில் கீழமை நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய தனித்தன்மையோடு இருக்கும் இந்தப் புத்தகம் எழுத்தாளர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு தமிழில் எழுதப்பட்டிருந்தால் பெருவாரியான வழக்குரைஞர்களையும் வாசகர்களையும் சென்றடைந்திருக்கும்.


ஆயினும் இப்போதைய வடிவிலேயே இப்புத்தகத்தைப் படிப்பதான அனுபவம் வக்கீல்களுக்கு உற்சாகமாயிருக்கும். மற்றவர்களுக்கு பொறாமையாயிருக்கும்….

Friday, 22 April 2016

பயணம் ஒண்ணு போதாது?!..,

எண்பதுகளின் இறுதி அல்லது தொண்ணூறுகளின் தொடக்கம் வரை என்று கூட வைத்துக் கொள்ளலாம் கம்யூனிஸம், சே குவாரா, கூட்டுப்பண்ணை என்பவை கல்லூரி, முக்கியமாக தொழிற்கல்லூரி அல்லாத கலைக் கல்லூரி மாணவர்களால் கவர்ச்சிகரமான பதங்களாக பிரயோகிக்கப்பட்டன.

சோவியத் குடியரசின் வீழ்ச்சி, தாராளமயம் புதிய வாய்ப்புகள் தொடர்ந்த ஐ டி துறையின் வளர்ச்சியில் கம்யூனிஸம் அடித்துச் செல்லப்பட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் மந்த நிலையில் வேறு பல புதிய பிரயோகங்கள் முன்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இன அழிப்பு என்பது கூட அவற்றில் இருப்பினும் முக்கியமும் முதலுமானது இயற்கை வேளாண்மை!

மோட்டார் பைக்’கிலேயே இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வேளாண்மை பண்ணைகளைக் கண்டு விவசாயம் கற்று வரப் போகிறோம் என்று கோவையிலிருந்து கிளம்பிய இரு இளைஞர்களில் ஒருவரான தீபன் தங்களது அனுபவங்களை சுமார் 300 பக்கங்களில் எழுதியுள்ள புத்தகம்தான் ‘பயணம் ஒண்ணு போதாது?!..,’

பயணம் ஒண்ணு போலத் தெரியவில்லை. தொடங்கிய வேகத்திலேயே திரும்பி கோவை வந்து பின்னர் மீண்டும் கிளம்பி மீண்டும் வந்து கிளம்பி என்று எவ்வித திட்டமிடலும் இன்றி ‘ஏனோ தானோ’ என்று இருப்பதைப் போல அவரது மொழிநடையும் ஜாலியாக நண்பர்கள் பேசி கொண்டிருப்பதைப் போல ஆரம்பித்தாலும் அதிலும் ஏதோ ஒரு ‘மெத்தட் இன் மேட்னஸ்’ போல ஒழுங்கு இருப்பதை விரைவிலேயே உணரத் தொடங்குவோம்.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் பின்னர் தொடர்ந்து லே’ வை நோக்கிய பயணம் பாதியில் கார்கிலுக்கு முன்பாகவே  அதி உயர சுகவீனத்தால் முடிந்து போனதைப் படிக்கையில் கார்கிலையும் தாண்டி லே வரை நான் போயிருக்கிறேனே என்று கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் சென்ற பொழுது என்னுடன் வந்த நண்பருக்கும் கார்கிலில் இந்தப் பிரச்னை ஏற்ப்பட்டதால் சாலை வழியாக லே செல்பவர்கள் முன்பாகவே தகுந்த ஆலோசனை பெற்றுச் செல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

திருமணமாகியும் எவ்வித உறவுமின்றி வெறும் நட்பாகவே தீபன் மனைவியை நடத்தினாலும், இரண்டு மூன்று நான்கு என்று அடுத்தடுத்து பார்க்கும் பெண்களிடம் தொடரும் ‘ப்ளாட்டோனிக் காதல்’, தோல்வியடையும் சொந்த பண்ணை முயற்சி, கடன் சுமை என்று வர வர சவ்வு மிட்டாய் மாதிரி எப்படா படித்து முடிப்போம் என்று ஆகி விட்டது.

தமிழ் சினிமா அப்பாக்கள், ஏன் நிஜ அப்பாக்களும் எப்படிப்பட்ட செயல்பாடுடைய பிள்ளைகளை ‘உதவாக்கரை’ என்ற வார்த்தையில் அடக்குவார்களோ, அந்த செயல்பாடுகளை எவ்வித தயக்கமுமின்றி கூறிக் கொண்டே போய் அந்த வாழ்க்கை தந்த அனுபவத்தில் தற்போது இயற்கை வேளாண்மையை ஓரம் கட்டி வைத்து விட்டு ‘கிரியேட்டிவ் டைரக்டர் (வேகபாண்ட் மூவீஸ்) என்று ஒதுங்கி விட்டார் தீபன்…

வேலை வெட்டி ஏதும் இல்லை என்றால், அவ்வப்போது பளிச்சிடும் ப்ரில்லியன்ஸுக்குக்காக படிக்கலாம்.

Monday, 1 February 2016

சொல் வேட்டை

“நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஆரஞ்சு உறித்து ஒவ்வொரு சுளையாக தின்று கொண்டிருக்கிறேன்.

பளிச் பளிச்சென்று புளித்தினிக்கிறது”

விஜய் பாஸ்கர்விஜய் இளைஞர். ஆனாலும் நவீன தமிழ் இலக்கியங்களில் அதிகம் பரிச்சயமுள்ளவர் போல. தனது தினசரி குடும்ப வாழ்வில், நாம் யாவருக்கும் ஏற்ப்படும் அனுபவங்கள்தாம், தனது முகநூல் பக்கத்தில் சுவராசியமான கதைகளாக எழுதுகிறார். சில நிமிடங்களுக்கு முன்னர் அவரது மேற்கண்ட வரிகளைப் படித்ததும் ‘புளித்தினிக்கிறது’ என்ற வார்த்தை என்னைக் கட்டிப் போட்டு விட்டது.

தமிழில் புதிய வார்த்தைகளை உருவாக்குவதும், மறைந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடித்தலையும் பற்றி யோசித்துக் கொண்டே எழுந்தால் என்ன ஒரு தற்செயல்! (coincidence)

அவ்வாறு நினைத்துக் கொண்டே எழுந்ததற்குக் நேற்று வெளியிடப்பட்ட நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களின் புத்தகமான ‘சொல் வேட்டை’யை படித்துக் கொண்டே தூங்கியதுதான் காரணம்.

தினமணி படிக்காதலால் அவரது வாராந்திர ‘சொல்வேட்டை’ பற்றி அறிந்திலேன். அட்லாண்டிக் என்ற பத்திரிக்கையில் பார்பரா வால்ராஃப் என்ற பெண்மணி வாசகர்களுடன் இணைந்து கூட்டாக புதிய வார்த்தைகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய ஊக்கத்தில் (inspiration?) இத்தொடரில் நம்மிடம் புழங்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை வாசகர்களிடம் இருந்து கோரி, அவற்றில் பொருத்தமான ஒரு வார்த்தையை, ஏறக்குறைய ஒரு நீதிபதியின் பணியைப் போலவே ‘இதுதான் சரியான வார்த்தையாக இருக்கலாம்’ என்று முடித்து வைக்கிறார்.

தமிழில் வார்த்தைத் தேடலை முடித்து வைத்தால், குறைந்தது பத்து பேர் ‘அது எப்படி?’ என்று கிளம்பி வருவார்கள். இராமசுப்பிரமணியம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருப்பதால், இதுவரை ஏதும் பிரச்னையில்லை என்று நினைக்கிறேன்.

கம்பியூட்டருக்கு முன்பு சுஜாதா முன்னிலையில் கணிப்பொறி, கணிப்பி என்று ஆரம்பித்து இறுதியில் கணணி (அல்லது கணிணியா) என்று வந்து நிற்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இணையத்தில் நான் தமிழ் பழகிய பொழுது நமது பதிவுகளுக்கு மற்றவர்களின் கமெண்ட்ஸுக்கு என்ன சொல்வது என்று பல ஆலோசனைகளுக்குப் பிறகு எதிர்வினை என்று முடிவாயிற்று. இராமகி ஜெபி ஐயா அவர்களிடம் இருந்து பல வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். கமெண்ட்ஸுக்கு முன்னிகை, ஸீரியஸாக என்பதற்கு சேரியமாக என்பதெல்லாம் புதுமையாக இருந்தது.

முதன் முதலில் நான் மரத்தடி இணையகுழுவிற்கு எழுதிய தமிழ் மடல் என்னிடம் இன்றும் உள்ளது. பண்பலை வானொலி ஆர்ஜே பேசுவதை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதியது போல இருக்கும். இப்போது நான் எழுதுவதைக் காட்டினால், உறவினர்கள் சிலர் ‘இது என்ன புரியவே இல்லையே என்கிறார்கள்’. அவர்களது தமிழை நான் கொல்கிறேன் போல.

‘பண்ணித்தமிழை’ அழிப்பதென்றால் அது இணையத்தால்தான் முடியும் என்று நினைத்திருந்தேன். மருத்துவர் ப்ரூனோ’விலிருந்து பலரைக் குறிப்பிட வேண்டும். நேற்று நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி இராமசுப்பிரமணியம் மூலமாக தினமணி அந்தப் பணியை தன்னளவில் தொடக்கி வைத்தது என்பதை அதன் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் அழுத்தமான அறிமுக உரைவீச்சிலிருந்து அறிந்து கொண்டேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் தனது வழக்கமான பாணியில் சுவையான கதை சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் வாசகர்களின் பங்களிப்போடு ‘சரி இதுதான்’ என்று நிறுத்துவது சற்று ஏமாற்றமாக இருந்தது. பத்திரிக்கையின் இட நெருக்கடி. அவருக்குள்ள வேலை நெருக்கடி என்று நினைக்கிறேன்.

புதிய ஆங்கில வார்த்தை ஒன்றிற்கு தமிழில் வார்த்தை இல்லாத பொழுது, அந்த ஆங்கில வார்த்தை சரியாகக் குறிப்பிடும் விளக்கத்தை அப்படியே தமிழ் வார்த்தையாக தேர்ந்தெடுப்பது காஃபியை ‘கொட்டை வடிநீர்’ என்று தமிழ்ப்படுத்துவது போலாகாதா? ஃப்ளாம்பாயண்ட் கவர்திறன் சரி, பாராஃபெர்னேலியா அடையாளச் சின்னம் என்னமோ மாதிரியிருக்கிறது.

ஆங்கிலத்தில் நிச கற்பனை பாத்திரங்களின் குணநலன்களை ஒத்த செயலுக்கு அவர்களின் பெயரை வைத்தே வார்த்தைகள் உள்ளன. சேடிஸ்ட், லின்ச், ட்ராகோனியன் போன்ற வார்த்தைகள் நிச மனிதர்களின் பெயர்களிலிருந்து உருவானவை. க்விக்சாட்டிக் கற்பனைப் பாத்திரம். டான் க்விக்சாட் குணநலனை வைத்து அந்த வார்த்தையை ‘இலக்கியல் ஆர்வக்கோளாறு’ எனறு முடித்து வைத்த நீதிபதியின் தீர்ப்பு எனது சிற்றறிவுக்குப்பட்ட அளவில் சரியல்ல என்பதை சொல்ல நினைத்தாலும், யாராவது ‘ஐயா, கண்டெம்ட் அவனை விடாதீங்க’ என்று போட்டுக் கொடுக்கும் சாத்தியக்கூறு இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்.

கணிதத்தில் எண்களோடு விளையாடுவது போல மொழியியலில் வார்த்தைகளோடு விளையாடுவது சுகமான அனுபவம். பாரதி ஆரம்பித்து வைத்தவர் என்று வைத்தியநாதன் கூறினாலும் சுஜாதாதான் தமிழில் வார்த்தை விளையாட்டை ஜனரஞ்சகமாக்கினார். அவரது ‘க்ளிக்’கினானை யார் மறக்க முடியும்?

நீதிபதி ஐம்பது வாரங்களுக்கு சொற்களை வேட்டையாடியுள்ளார். அல்லது அவருக்காக மற்றவர்கள் வேட்டையாடியதை மேற்ப்பார்வை பார்த்துள்ளார். தற்பொழுது மற்றவர்கள் தொடர்வதாக தினமணி ஆசிரியர் கூறினார். இராமசுப்பிரமணியம் கடுமையான உழைப்பாளி. 24 மணி நேரம் என்பது அவரது அன்றாட பணிகளுக்கு போதுமானது இல்லை என்பதை வழக்குரைஞர்கள் அறிவார்கள். அவற்றிற்கிடையிலேயும் அவர் நேரம் ஒதுக்கி வேட்டையாடியுள்ள வார்த்தைகள் நிலைக்க வேண்டுமென்றால், இணையத்தில் இந்த தொகுதி பரவலாக்கப்பட வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, இணையம் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்வேட்டையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. வேட்டையாடுவதோடு இல்லாமல், வேட்டைப் பொருட்கள் மறை பொருட்களாக்கப்படாமல் பகிரப்படுவதால் நிலைத்தும் நிற்கின்றன. மற்ற ஊடகங்களுக்கெதிரான இணையத்தின் வெற்றி என்றே அதைக் கூறலாம்.

நீதிபதி இராமசுப்பிரமணியம் ஓய்வு பெற்றவுடன் நீதிமன்றத்தில் நடைபெறும் செயல்கள் புழங்கும் சொற்களுக்கான தமிழ் சொல் வேட்டையை இணையத்தில் ஆரம்பிக்க வேண்டுகோள் வைக்கலாம்.

சரி, இவ்வளவு அருமையான புத்தகம் ஏனோ அச்சிடப்பட்ட தன்மை திருப்தியளிக்கவில்லை. காகிதத்தின் தரமோ அதன் நிறமோ எழுத்துகளோ (ஃபோண்ட்) ஏதோ ஒன்று இலகுவாக வாசிக்க இடறலாக உள்ளது. ஆனால் அழகான கடின அட்டை. விலையும் 125 ரூபாய் என்பது மிக மலிவுதான்.

சொல்வேட்டை. நல்வேட்டை!

Wednesday, 21 October 2015

நானா சாகிப் - புதினம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை விடவும் மர்மம் பொருந்தியதும் தீரம் மிகுந்ததுமான வாழ்க்கை மராத்திய பேஷ்வா நானா சாகிப்’பினுடையது.


கங்கை நதியின் ‘சதிசெளரா’ கரையிலும் பின்னர் பீபிகரிலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கான ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்களுக்கான காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தியா முழுவதும் ஆங்கிலேய படைகளால் கொலை வெறியோடு பல ஆண்டுகளாக துரத்தப்பட்டாலும், இறுதியில் என்னவானார் என்பதற்கு இன்று வரை யூகங்களை மட்டுமே விட்டுச் சென்ற கலகத் தலைவரான நானா சாகிப்’பின் வரலாற்றில் உணர்ச்சி மிக்க திரைக்கதையொன்று ஒளிந்திருப்பதை நம் இயக்குஞர்கள் யாராவது புரிந்து கொண்டால் சரி.


எவ்விதமான விசாரணைக்கோ மன்னிப்புக்கோ இடமின்றி ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பார்ப்பவர்கள் ரத்தத்தை உறைய வைக்கும் முறையில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதோடு கலகம் ஆங்கிலேயர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கழிந்த சூழ்நிலையில் சில ஆங்கிலேயர்களோடு பிரஞ்சுக்காரர் ஒருவரும் இந்தியாவின் வடபகுதியை சுற்றிப் பார்க்க கிளம்புகின்றனர்.


அப்போதுதான் இயங்கத் தொடங்கியிருந்த ரயில் வண்டிகளை ‘அது ஒரு வண்டியா’ என்று கேலி செய்தபடி குடியிருக்கும் வீட்டையே வண்டி போல இயந்திரம் மூலம் இழுத்துச் சென்றால் எப்படியிக்கும் என்ற நினைப்பில் பெரிய யானை வடிவில் ஒரு நீராவி இயந்திரத்தினை வடிவமைத்து பயணப்படுகிறார்கள். எதிர்ப்படும் ஆறுகளைக் கடக்க, தரையில் மட்டுமல்லாது நீரிலும் கப்பல் போல செல்லும்.


‘இது என்ன காது குத்தல்?, ஜூல்ஸ் வேர்ன் கதையில்தான் இப்படிப் பட்ட கற்பனைகள் சாத்தியமாகும் என்றால், சாட்சாத், ஜுல்ஸ் வேர்ன் கதைதான்.


புத்தக கண்காட்சியில் ஏதோ நானா சாகிப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் என்ற நினைப்பில் வாங்கி வந்தால், வெறும் கதை என்றவுடன் சற்று ஏமாற்றமாகி விட்டது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா பற்றி இன்றைய வரலாற்றாசிரியர்கள் எழுதுவதை ‘இவர் வலதா இல்லை இடதா’ என்ற சந்தேகத்தோடேயே படிப்பதை விட எதிர்கால அரசியல் சூழல் குறித்த எவ்வித உணர்வுமின்றி ஜூல்ஸ் வேர்ன் எழுதியிருப்பதை படிப்பது நல்லதுதான் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.


நானா சாகிப்?


பயணம் செய்யும் ஆங்கிலேய கர்ணல் மன்றோ நானா சாகிப்’பின் கொடூரத்திற்கு காதல் மனைவியை பறி கொடுத்தவர். அதனாலேயே அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று காத்திருப்பவர்.


இடையிடையே அடுத்த புரட்சியை துவக்க வேண்டும் என்ற வேட்கையோடு நானா சாகிப்’பும் வருகிறார். இறுதியில் வீரப்பன் போலவும் ஓசாமா போலவும் பொசுக்’கென்று செத்துப் போகிறார். கதையும் அதோடு முடிந்து போகிறது.


கதை என்ற வகையில் மிகவும் சுமார். மொழி பெயர்ப்பு அதை விட சுமார். அந்தக் காலக் கதை. அதிகம் எதிர்பார்க்கக் கூடாது.


ஆனால் பயணக்குறிப்பு என்ற வகையில் பல தகவல்களை அறியலாம்...


முக்கியமாக வாரணாசியிலுள்ள அவுரங்கசீப் மசூதியைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அந்த இடத்தில் முன்னொரு காலத்தில் விஷ்ணு ஆலயம் இருந்த போது, ரோம் நகரில் பக்தர்கள் சென்றதைப் போல, முழந்தாளால் மண்டியிட்டபடி, படிகளில் ஏறிச் சென்றார்களாம். தற்பொழுது அந்த இடத்தில் மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மசூதி எழுப்பப்பட்டிருக்கிறது” என்றாலும்


பீகார் பற்றிய குறிப்புகளில் “ஆனாலும் பல நூற்றாண்டுகளாக பெளத்த துறவியருடைய மடாலயங்கள், பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்தன, பெளத்த விகாரைகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து தமது சமய நிறுவனங்களாக மாற்றி , சமயச் சடங்குகளை நிகழ்த்தி அதன் மூலம் கிடைத்த வருவாயில் பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர்” என்கிறார்.


ஆக ஆனைக்கும் பானைக்கும் சரிதான்...

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....