Showing posts with label World Film. Show all posts
Showing posts with label World Film. Show all posts

Wednesday, 11 May 2016

வாத்ஜா (சவூதி அரேபியா) 2012

பொருட்களை அரசாங்கம் இலவசமாக அளிப்பதற்கு எதிராக சமூக ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் இந்த தேர்தலில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினாலும், இதுவரை கொடுத்தவற்றில் ஒன்று, அதுவும் ஜெயலலிதா அரசு அளித்தது, சவூதி அரேபியாவில் அளிப்பதாக வாக்கு கொடுத்தால் பள்ளிச் சிறுமிகளின் வாக்குகளை எல்லாம் அப்படியே அள்ளி விடலாம்.

சைக்கிள்!

யார் ஓட்டுப் போடுகிறார்களோ இல்லையோ, ‘பூம்! இறந்து போனால் 70 கன்னியர்கள் காத்திருப்பார்கள்’ என்று சொல்லும் தோழன் அப்தல்லாவிடம் ‘பூம்! எழுபது சைக்கிள்கள்’ என்று மலர்ந்து சிரிக்கும் குட்டிப் பெண் வாத்ஜா கண்டிப்பாக ஓட்டுப் போடுவாள்.

‘வாத்ஜா கற்பனைப் பாத்திரம். அதனால் ஓட்டுப் போட முடியாதா?’

‘ஓ! சாரி, அதை மறந்தே விட்டேன். நாம் சந்தித்த நபர்களையும் அனுபவதித்த உணர்வுகளையும் நமக்கு நினைவுபடுத்துகிற மாதிரி சில இயக்குஞர்கள் படங்களை இயக்கித் தொலைக்கிறார்களா, அதனால் படம் பார்த்த பின்னரும் ஏதோ நிசத்தில் நாம் பார்த்தது மாதிரியே இருக்கிறது.

ஆண்கள் இருக்கும் இடத்தில் பெண்களைப் புழங்கவே அனுமதிக்காத சவூதி அரேபிய சூழலில், சிறுமி வாத்ஜா’வின் ஒரே கனவு பள்ளிக்குச் செல்லும் மற்ற சிறுவர்களைப் போல தானும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதுதான்.

பள்ளி செல்லும் வழியிலுள்ள கடையில் தான் பார்த்து வைத்திருந்த சைக்கிளை ‘வேறு யாருக்கும் குடுத்துடாதீங்க’ என்று சொல்லி விட்டு பெரிய மாணவியின் காதல் கடிதத்தை அவளது காதலனுக்கு கொடுப்பதில் கமிஷன் அடிப்பது உட்பட பல வழிகளிலும் பணம் சேர்க்கிறாள்.

புனித குரான் சம்பந்தப்பட்ட போட்டி அறிவிக்கப்பட பரிசுப் பணத்திற்காக அதில் சேர்ந்து இறுதியில் அதில் ஜெயித்தும் விட்ட பிறகு தலமை ஆசிரியை பரிசுப் பணத்தை என்ன செய்யப் போகிறாய் என்று மேடையில் கேட்க ‘சைக்கிள் வாங்கப் போகிறேன்’ என்று வாத்ஜா சொல்வதைக் கேட்ட அனைத்து மாணவிகளும் சிரிக்கிறார்கள். அதிர்ந்து போன தலைமை ஆசிரியை சுதாரித்துக் கொண்டு ‘பாலஸ்தீனத்தில் துயரப்படும் நமது சகோதரர்களுக்கு நன்கொடையாக பரிசினை அளித்த வாத்ஜா’வுக்கு நன்றி’ என்று சமாளிக்கிறார்.

உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக மனிதனின் முக்கியத் தேவை நகர்தல் (mobility). அந்த வகையில் பெண்களின் விடுதலைக்கான முதல் ஆயுதம் நகர்தலுக்கான சைக்கிள் அல்லது ஸ்கூட்டர்தான். ஆனாலும் முழுக்கவும் சவூதி அரேபியாவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரமான சைக்கிள் ஒரு குறியீடுதான். பெண்கள் மீதான கட்டுப்பாடு, உடை, ஆண்கள் எளிதில் மற்றொரு திருமணம் செய்து கொள்தல், திருமணத்திற்கு முந்தைய காதலை மறுத்தல் என்று பல விடயங்களை இயல்பான பாத்திரப் படைப்புகள் மூலம் இப்படம் பேசுகிறது.

சவூதி அரேபியாவில் இந்தப் படத்தை எப்படி எடுக்க விட்டார்கள் என்றால் இயக்குஞர் ஒரு பெண் என்பது மேலும் ஆச்சரியமளிக்கலாம். சவூதி சாலைகளில் நிகழ்த்தப்பட்ட படப்பிடிப்புகளில் எல்லாம் இயக்குஞர் தனியே ஒரு வேனில் மறைவாக இருந்து வாக்கி டாக்கி மூலம் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஆணைகள் கொடுத்து இயக்க வேண்டியிருந்ததாம்.

இவற்றை எல்லாம் தாண்டி சவூதி அரசு இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பியதில்தான் இயக்குஞரின் சாமர்த்தியம் இருக்கிறது. அழகான கதை, இயல்பான பாத்திரங்கள், மெல்லிய நகைச்சுவை உடாக பெண்களின் பிரச்னைகளைப் பேசுகிறதே அல்லாமல் உரத்த குரலில் எதையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

பள்ளியில் கொஞ்சம் ரிபலாக இருக்கும் இரு பெரிய மாணவிகளுக்கு இடையே இருக்கும் உறவைக் கூட ஒரே ஒரு வரி வசனத்தில் நம் யூகத்துக்கு விட்டு, ஆனால் ஸிஸ்டம் அவர்களை எப்படி அவர்களை பொதுவில் அவமானப்படுத்துவதில் திருப்தியடைகிறது என்பதை போகிற போக்கில் தொட்டுச் செல்வதால், ஆட்சேபம் எழுப்பக்கூடியவர்களின் கவனத்திலிருந்து இயக்குஞர் படத்தை தப்ப வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.


இறுதியாக ஈரானில்தான் குட்டிக் குழந்தைகளை இயல்பாக நடிக்க வைப்பார்கள் என்ற கருத்தை நான் மாற்றி கொண்டேன். சவூதி அரேபிய குழந்தைகள் ஈரானியர்களுக்கு சவால் விடுகிறார்கள். வாத்ஜா’வும் அவளது குட்டி நண்பன் அப்துல்லாவும் படம் முழுக்க ஆக்கிரமிப்பது போலவே நம் மனதையும் ஆக்கிரமிக்கிறார்கள்…

Friday, 5 February 2016

வயலட்டா வென்ட் டு ஹெவன் (சீலே) 2011

மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களால் கொண்டாடப்பட்ட முதல் பொங்கல் விழா என்று நினைக்கிறேன். லா சேம்பர் புல்வெளியில் கலை நிகழ்ச்சிளும் பரிசளிப்பு விழாவும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘தப்பாட்டம் இருக்கு. நல்ல பெரிய ட்ரூப்’ என்று நண்பர் சொல்லியிருந்தார். தப்பாட்டம் பார்த்தது எனக்கும் அதுதான் முதன்முறை. வழக்குரைஞர்கள் சிலரும் அவர்களது தாளத்திற்கு ஏற்ப ஆடினர்.

அதற்குள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த நீதிபதிகள் ஒவ்வொருவராக வர, நீதிமன்ற பதிவாளர் தனது அதீத உற்சாகத்தில் அந்தக் குழுவினரை லா சேம்பர் வாசலுக்கு கூட்டிச் சென்று நீதிபதிகளின் இருமருங்கிலும் இருந்தவாறு தப்பை அடித்தவாறு விழா நடந்த புல்வெளிக்கு அழைத்து வரச் செய்தார். நண்பருக்கு வந்ததே கோபம்...

பதிவாளராவது பரவாயில்லை. வரலாறு அறியாதவர். பிரபல தவில் வித்துவான் கூடவா, அவரது மூத்த கலைஞர்கள் கடந்து வந்த பாதையை மறந்து போவார்?

பல ஆண்டுகளுக்கு முன்னர் கானாடுகாத்தான் என்ற ஊரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நாதஸ்வரம் வாசிக்க அழைக்கப்பட்டிருந்த சிவக்கொழுந்து என்ற புகழ்வாய்ந்த கலைஞர், வியர்வையை துடைக்க வைத்திருந்த சிறு துணியானது தோளில் போடும் துண்டு என்று குற்றம்சாட்டப்பட்டு நாதஸ்வரம் வாசிக்க விடாமல் தடுக்கப்பட்டார். அந்தக் கச்சேரிக்கு சென்றிருந்த ‘உண்மையான’ அஞ்சா நெஞ்சன் அழகிரி(சாமி) மாப்பிள்ளை ஊர்வலத்தை அங்கேயே நிறுத்தி வைத்து ‘சிவக்கொழுந்து இங்கேயே உட்கார்ந்து வாசியுங்கள். நான் இருக்கிறேன்’ என்று சவால் விட பின்னர் சிவக்கொழுந்து 'துண்டு'டன் நாதஸ்வரம் வாசிக்க அனுமதிக்கப்பட்டார். கச்சேரி முடியும் வரை அழகிரிசாமி அவருக்கு விசிறிக் கொண்டே துணைக்கு நின்றாராம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. கடந்த மாதம் கலை இரவு ஒன்றில் கச்சேரி நடத்த அழைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற தவில் கலைஞர் ஒருவர், விளம்பரத்தில் அவரது படத்துடன் தப்புக்கலைஞர்களின் படத்தையும் பார்த்ததும், கோபத்தில் கச்சேரியை ரத்து செய்து விட்டாராம்.

இங்கு என்று இல்லை. உலகம் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் நிலை அதுதான் போல.

சீலே நாட்டின் இரண்டாவது தேசிய கீதம் என்று போற்றப்படும் ‘க்ராஸியஸ் எ லா விடா’ (வாழ்க்கைக்கு நன்றி) என்ற பாடலை இயற்றிப் பாடிய ‘வயலட்டா பரா’ என்ற பெண்மணியின் வாழ்க்கைச் சரிதப்படமான ‘விண்ணுக்குச் சென்ற வயலட்டா’ (Violeta se fue a los cielos 2011) பார்க்கையில் எனக்கு அப்படித்தான் தோன்றியது. இசைக்குடும்பத்தில் பிறந்தவர். சிறுமியாய் இருக்கையிலேயே தந்தையை இழந்து அவர் விட்டுச் சென்ற கிடாரை மற்றும் வைத்துக் கொண்டு குடும்பத்தை தாங்கியவர். ஆனாலும் சீலே நாடு முழுவதும் அலைந்து நாட்டுப்புற பாடல்களை சேகரித்து அவற்றை இசைவடிவமாக்கித் தந்ததால்தான் சீலேவின் புதிய பாடல்கள் என்ற பெயரில் அதன் நாட்டுப்புறப் பாடல்கள் அழியாமல் மறுவடிவம் பெற்றன என்று கூறப்படுகிறது.

அநேக பாடல்களையும் ஒன்றிரண்டு புத்தகங்களையும் தந்திருந்தாலும், ஓவியம், எம்ப்ராயிட்டரி அடுத்து மண்பாண்டக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். அவரது கலைப்படைப்புகள் ஐரோப்பா சென்றிந்த பொழுது பாரீஸில்ன் புகழ்பெற்ற கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இருந்த போதிலும் ஐரோப்பாவில் செல்வந்தர்கள் கூடிய கூட்டம் ஒன்றில் பாட அழைக்கப்படும் வயலட்டா, பாடி முடித்ததும் நிகழ்ச்சி நடத்துபவர் அங்கிருப்பவர்களை உணவுக்காக விருந்து அறைக்கு செல்லும்படி வேண்டிய பின்னர் வயலட்டாவிடம், அவளுக்கு தனியே சமயலறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறியதும் வெகுண்டு எழுந்து அவரை ஒன்று இல்லை என்று கேட்டு விட்டு கூடியிருக்கும் ஒவ்வோரு முகத்திற்கு முன்பும் ‘செவிடு’ ‘செவிடு’ என்று கோபத்தில் உறுமிக் கொண்டு செல்லும் காட்சியைத்தான் சொன்னேன்.

சீலேவில் சர்க்கஸ் கூடாரம் போன்று தனது இருப்பிடத்தைக் கட்டி அதை அனைத்து நாட்டுப்புற இசைக்கலைஞர்களும் இசைக்கும் கலைக்கூடமாக உருவாக்கினாலும் தொடர்ந்து வறுமையும் வெறுமையும் துரத்த ‘எனக்கு எவ்வளவோ அள்ளித்தந்த வாழ்க்கைக்கு நன்றி’ என்று பாடிய வயலட்டா 1967ம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் அதே கூடாரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

படத்தை இயக்கியவர் ஆந்த்ரே உட். சீலே நாட்டு சோஷலிஸ ஆட்சியாளரான அலெந்தே காலத்து நிகழ்வுகளின் பின்னணியில் ‘மச்சுக்கா 2004’ என்ற படத்தை இயக்கி நம்மில் பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தாம். இந்தப் படம் ஆஸ்கருக்கு சீலே நாட்டிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. பரிசு பெறவில்லை.

வயலட்டாவின் பாடல்கள் இன்றும் பல்வேறு வடிவங்களில், பல இசைக்கலைஞர்கள் மூலமாக புதுப்புது வடிவங்களில் உயிர்த்திருக்கின்றன...

Thursday, 24 December 2015

லே ஹேய்னி (பிரான்ஸ்) 1995

‘நாளைக்கு காலைல உன்னை தூக்குல போடப் போறாங்கன்னாக் கூட கவலப்படக் கூடாது’ன்னு சொல்லிட்டு அடுத்து அப்பா சொன்ன காரணம் வித்தியாசமானது. ‘ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து ஒருவேளை உன்னோடு மொத்தமா எல்லோரும் செத்துரலாம்’ என்றார்.

தூத்துக்குடியில் எழுபதுகளில் குடியேறிய தொழிலாளர்களை ‘புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார்கள்’ என்று அதை இடித்துத் தள்ளினால்தான் ஆயிற்று என்று கலெக்டர் கச்சை கட்டிக்கொண்டு இறங்கிய வழக்கில் வாதாடும் போது ஏனோ அப்பா சொன்னது நினைவுக்கு வந்து, ‘இன்று ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து இந்த வீடுகள் எல்லாம் இடிந்து போனால், நாம் பார்த்துக் கொண்டிருப்போமா. இடிக்கப் போறோம்னு சொல்ற இதே அரசு வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும். சுனாமியின் பொழுது அதுதானே நடந்தது’ என்றதை நீதிபதிகள் இறுக்கமான முகத்துடன் கேட்டுக் கொண்டனர்.

நேற்று ராத்திரி பார்த்த ‘லெ ஹெய்னி’ (Hate) என்ற பிரஞ்சுப் படத்தில் ஹுயூபர்ட் ‘Heard about the guy who fell off a skyscraper? On his way down past each floor, he kept saying to reassure himself: So far so good... so far so good... so far so good. How you fall doesn't matter. It's how you land! என்று தனது நண்பர்களிடம் பேசுவதைக் கேட்கையில் அப்பா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

வெறுப்பு வெறுப்பு வெறுப்பு என்று வெறுப்பு சூழ்ந்த உலகில் வசிப்பவர்களுக்கு ‘இது வரை ஏதும் இல்லை’ என்ற நம்பிக்கை மட்டுமே ஒரே ஆறுதல்.

பிரான்ஸ் தேசத்தில் குடியேறியவர்களுக்கான வசிப்பிடத்தில் வசிக்கும் யூத, கறுப்பு, அராபிய இனத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்களின் பரபரப்பான ஒரு நாள் வாழ்வுதான் படம். பரபரப்பு என்றதும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் என்பதல்ல. இங்கும் அங்கும் சுற்றுகிறார்கள். வேகவேகமாக பேசுகிறார்கள். நியோ நாஜிக்களிடம் சண்டையிடுகிறார்கள். போலீஸைப் பற்றி கோபத்தைக் கக்குகிறார்கள். திருடுகிறார்கள். தப்பியோடுகிறார்கள். போதாதற்கு போதை மருந்து வேறு.

முந்தைய நாள் நடந்த கலவரத்தில் அவர்களது மற்றொரு நண்பன் போலீஸாரால் தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறான். மூவரில் கொஞ்சம் அமைதியான ஹுபர்ட் ஆப்ரிகன். கலவரத்தின் அவனது உடர்பயிற்சியகம் எரிந்து போயிருக்கிறது. அமைதியானவன். எப்படியாவது அந்தச் சூழலிலிருந்து தப்பி வேறு எங்காவது சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும் எப்படி என்று தெரியாமலிருப்பவன்.

யூதன் கலவரத்தில் போலீஸ் தவற விட்ட துப்பாக்கியை வைத்துக் கொண்டு கோமாவில் இருக்கும் நண்பன் செத்தால், ஒரு போலீஸையாவது பழிக்கு கொல்ல வேண்டும் என்று எப்போதும் கோபத்தோடு திரிபவன்.

அராபியனாக நடித்துள்ள சையத் தக்மாய், படம் முழுக்க பேசுகிறான் பேசுகிறான் அவ்வளவு பேசுகிறான். கவிஞனாம். ‘மை கசின் வின்னி’யில் வரும் ஹாலிவுட்டின் ஜோ பெஸ்ஸியேதான். அப்படியே குள்ளம் வேறு. உற்சாகமான நடிப்பால் மனதை கொள்ளை கொண்ட இவர் யார் என்று தேடினால் பிரான்ஸில் புகழ்பெற்ற நடிகர் போல. முஸ்லீம். ஆனால் புத்திசாலித்தனமாக இப்போதே அமெரிக்க குடியுரிமை வாங்கியுள்ள விபரம் டோனால்ட் ட்ரம்புக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

பிரான்ஸில் குடியேறிய ஆப்ரிக்க அராபிய குடும்ப இளைஞர்களுக்கும் போலீஸுக்கும் உள்ள பிரச்னை என்பதால் இப்போதுதான் வந்த படம் என்று நினைக்க வேண்டாம். 1995ல் வந்த படம். இருபது ஆண்டுகளில் ப்ரான்ஸ் ஒரு சுற்று சுற்றி மீண்டும் பழைய இடத்துக்கே தற்பொழுது வந்து நிற்கிறது.

‘வெள்ளையர்களின் சுமை’ என்று காலனியாதிக்கத்தை ருட்யார்ட் கிப்ளிங் வர்ணித்து நூறு ஆண்டுகள் கழிந்து விட்ட தற்பொழுதுதான் அந்தச் சுமையின் உண்மையான வலியை மேற்கத்திய நாடுகள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. அவர்களுக்கும் இது so far so good...தாம்
.
சொல்ல மறந்து விட்டேன். இது கறுப்பு வெள்ளைபடம். எனக்கும் படம் முடியும் வரை அது தட்டுப்படவேயில்லை. ஆமாம், நல்ல திரைப்படங்களுக்கு எதற்கு வர்ணம்?

Friday, 18 December 2015

ஹமோன் (ஈரான்) 1990


ஹாமோன், ஈரானிய படங்களிலேயே சிறந்த படம் என்று பாராட்டப்படும் படம். ஹை டெபினிஷன் தரத்தில் படங்களைப் பார்த்த பிறகு 1990ல் இயக்கப்பட்ட இப்படத்தை சாதாரண தரத்தில் பார்ப்பது இன்னமும் பழைய படத்தைப் பார்ப்பது போல இருந்தது.

புத்தகங்களை விரும்பும் நடுத்தர வர்க்க இளைஞனாகிய ஹமீத் ஹமோனை வலிய காதலித்து மணக்கும் பணக்கார பெண்ணாகிய மாஷித்’ பின்னர் அவனது போக்கு பிடிக்காமல் அவனிடமிருந்து விவாகரத்து கோருவதும், அதனால் அவர்களுக்கிடையில் எழும் போராட்டமும்தான் கதை. பொருந்தாத திருமண வாழ்க்கையின் அழுத்தத்தில் இருவருமே மனச்சிக்கலுக்கு ஆட்படுவதும், தனது வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய முயன்று ஹமோன் தோற்பதுமாக நான் லீனியராக திரைக்கதை சொல்லப்படுகிறது.

பொதுவாக நான் பார்த்த இரானியப் படங்கள் சிக்கலோ குழப்பமோ இல்லாமல் ஏதோ நல்ல சிறுகதையைப் பார்ப்பது போல இருக்கும். இதே இயக்குஞரின் படமான லீலா உட்பட. ஆனால் இந்தப் படம் அப்படியல்ல. ஹமோனுக்கு ஏற்ப்படும் மனப்பிறழ்வுகளும் கனவுகளும் நம் தலையையும் சுற்ற வைக்கிறது.

முக்கியமாக நான் சொல்ல வந்தது, வழக்குகாக நீதிமன்றத்திற்குள் செல்லும் ஹமோனை காவலர் லேசாக தடவிப் பார்த்து உடல் பரிசோதனை செய்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்த்திருந்தால், வெள்ளிக்கிழமை சென்னை நீதிமன்றம் சென்ற பொழுது என்னை சி ஐ எஸ் எஃப் காவலர் பரிசோதனை செய்த போது அப்படி சங்கோஜப்பட்டிருந்திருக்க மாட்டேன்.

ஆனாலும் எனது அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்த காவலர் ‘தாங்க் யூ’ என்று சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ஒரு செய்தி : மதுரைக்கு இப்போதைக்கு சி ஐ எஸ் எஃப் இல்லையாம்...

Sunday, 29 November 2015

எபிசோடா யு சிவோத்து பெராக்கா ஜெலேயா (போஸ்னியா)

பார்க்கும் எவரையும், அவர் மனதின் ஏதாவது ஒரு மூலையில் கொஞ்சமேனும் மனிதாபிமானம் ஒட்டியிருப்பின் போதும், கவரும் சிறந்த ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க என்ன தேவை?

சிக்கலான கதை. அசத்தலான க்ளைமாக்ஸ்? ‘ம்ஹூம் ஒரு சம்பவம் போதும்’

மாஸ் நடிகர்கள்? ‘எதற்கு சம்பவத்தில் பங்கு கொண்ட சாதரணர்கள் போதும்’

விலையுயர்ந்த காமிராக்கள்? ‘ஏன், 2.5லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் கானன் 5Dக்கு என்ன குறைச்சல்’

இசை? ‘அதுதான் ஓடும் காரிலும், குழந்தைகளின் கூச்சலிலும்தான் இசையிருக்கே. தனியாக ஏன் இசையமைக்க வேண்டும்’

என்று கேட்பது போல Epizoda u zivotu beraca zeljeza (2013) என்ற போஸ்னிய படத்தை எடுத்து விருதுகளை அள்ளிக்குவித்துள்ளர் அதன் இயக்குஞர் டானிஸ் டனோவிச். இப்படி படம் எடுத்துள்ளார் என்றவுடன் ஏதோ கடைநிலை இயக்குஞர் என்று நினைத்துவிட வேண்டாம். பலரும் நன்கு அறிந்த ‘நோ மேன்ஸ் லாண்ட்’ மற்றும் நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டுள்ள ‘ட்ரையேஜ்’ ஆகிய படங்களை இயக்கிய உலகப் புகழ் பெற்ற இயக்குஞர்.

துரதிஷ்டம் பிடித்த ரோமா, ஜிப்ஸிஸ் என்றால் அனைவருக்கும் தெரிந்த இனத்தைச் சேர்ந்த நஸீபும் அவன் மனைவி செனாடாவும் அவர்கள் இரு பெண் குழந்தைகளோடு வசிப்பது போஸ்னியாவின் புறநகரில். பழைய இரும்புகளை பொறுக்கி விற்பதுதான் அவன் தினப்படி வருமானம். ‘ஏதாவது நோய் வந்து அவன் படுத்து விட்டால் அந்த குடும்பம் என்ன செய்யும்’ என்று நினைத்து முடிக்க வில்லை, செனாடாவுக்கு வயிற்று வலி. உதிரப்போக்கு.

நகர்புற மருத்துவமனைக்குச் சென்றால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை இறந்து போனதாகவும், மேலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட வேண்டுமென்கிறார்கள். அவனிடம் பணமுமில்லை. அவளுக்கு மருத்துவ காப்பும் இல்லை. இரண்டு முறை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கஷ்டப்பட்டு சென்றாலும் பலனில்லை. பின்னர் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்து அழைத்தாலும், சோர்விலும் வெறுப்பிலும் செனாடா அவர்களுடன் செல்ல மறுத்து விடுகிறாள். இறுதியில் அவளது தம்பி மனைவியின் காப்பீட்டைக் காண்பித்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினால், கரண்டு பில் கட்டாததால் வீட்டில் மின்சாரம் கட்!


நஸீப் அவனது பழைய காரை உடைத்து அதை விற்ற பணத்தில் மனைவிக்கு மருந்தும், கரண்ட் பில்லும் கட்ட மீண்டும் வீட்டில் உற்சாகம் பொங்குவதோடு படம் முடிகிறது.

உதிரப் போக்கோடு மருத்துவத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் காட்சிகள் இல்லையென்றால், நடக்கும் சம்பவங்களை அப்படியே படம் பிடிக்கிறார்கள் என்றுதான் நினைத்திருப்பேன். போருக்குப் பின்னதான போஸ்னியாவில், ரோம இன மக்கள் உதாசீனப்படுத்தப்படுவதை உலகின் பார்வைக்கு மீண்டும் கொண்டு செல்வதற்காக நஸீப்-செனாடா தம்பதியினரின் அனுபவத்தை அப்படியே திரைப்படத்திற்கான எவ்வித அழகியலும் இன்றி, நாமும் அவர்களின் குடும்பத்தின் ஒருவராக நின்று நடப்பவைகளை பார்ப்பது போல இயக்கப்பட்டுள்ளது.

அதுவும் படம் முழுவதும் அந்த இரட்டைப் பெண் குழந்தைகளின் குதியாட்டமும், கொண்டாட்டமும், கூச்சலும்; சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

பிற திரைப்படங்களின் போஸ்டரைக் கூட காப்பியடிக்கும் அளவிற்கு அறிவு வறட்சியில் தவிக்கும் நம்மவர்கள்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு, இப்படியெல்லாம் கூடவா திரைப்படங்களை இயக்க முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

Monday, 23 November 2015

ஸோசைட் சீச்சி நி நாரு (ஜப்பான்) 2014

“நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது அப்பாதான் பட்டம் செய்வார். மூங்கில் குச்சிகளை வெட்டி, அவற்றை கயிற்றால் கட்டி அதன் மீது காகிதத்தை ஒட்டுவார். செய்தித்தாளின் காகிதத்தைத்தான் வெட்டி வாலாக வைப்பார். அந்தப் பட்டங்களை பறக்க விடுவதே சிரமம். இப்போது பட்டங்கள் அப்படியே கிடைக்கிறது. உடனடியாக பறக்கவும் செய்கிறது”

நேற்றுப் பார்த்த ஸோசைட் சீச்சி நி நாரு (Like Father, Like Son) என்ற ஜப்பானியப் படத்தில் இயல்பாக நடக்கும் இந்த உரையாடல், சின்ன வயதில் அண்ணன் செய்த பட்டங்களைப் பற்றி நானே பேசியது போல இருந்தது. ஏதோ தேர்ந்த சர்ஜன் போல அண்ணன் கையை நீட்டும் போதெல்லாம் அதில் கோந்தும் கயிறும் பிளேடும் வைப்பது மட்டும்தான் என் வேலை என்பதால், பட்டம் செய்யும் நுணுக்கம் தெரியாமலே போய் விட்டது.

இன்னமும் இரு நாட்கள் தங்கிப் போக முடியாதா? என்று கேட்கும் மகளிடம், “இங்கு இருப்பது ஏதோ ஹோட்டலில் இருப்பது போல இருக்கிறது” என்று நகரின் முக்கியப் பகுதியில் அமைந்த மருமகனின் நவீன ப்ளாட்’ பற்றி மாமியார் கூறுவதும் சென்னையில் தங்க நேரிடும் உறவினரின் குடியிருப்பைப் பற்றி நான் கூறியது போலவே இருந்தது.

மற்றபடி படம், தங்களது மகன்கள் பிறந்தவுடன் மருத்துவமனையில் மாறிப் போனது, ஆறு வருடங்கள் கழித்து தெரியவரும் இரு பெற்றோர்களைப் பற்றியது. பெர்பக்ஷனுக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்களின் மருத்துவமனையில் குழந்தைகள் மாறிப் போவதா, என்றால் இறுதியில் நீதிமன்றத்தில் மருத்துவமனை செவிலி தனது கணவருடனான சண்டையின் வெறுப்பில் குழந்தைகளை வேண்டுமென்றே மாற்றி வைத்து விட்டதாக சாட்சி சொல்வதும் நடக்கிறது.

பாடல்கள் இல்லை, மெல்ல நகரும் கதை என்பதை தவிர்த்து விட்டால் மணிரத்தினம், வஸந்த் படம் பார்ப்பது போல இருக்கலாம். வணிகச் சமாச்சாரங்களைத் எடிட் செய்து ‘விருது’க்காக தனியே ஒரு வெர்ஷன் தயாரிக்க முனைந்திருந்தால் மகேந்திரன், பாலுமகேந்திராவிலிருந்து தொண்ணூறுகளின் மற்ற சில தமிழ்ப்பட இயக்குஞர்கள் உலக அளவில் பெயர் வாங்கியிருக்கலாம்.

விருதுகளால் பலன் என்னவா, இந்தப் படத்தைப் பார்த்த ஸ்பீல்பெர்க்கின் பரிந்துரையில் ட்ரீம்வொர்க்ஸ் இதன் ஹாலிவுட் உருமாற்ற உரிமைகளை வாங்கியுள்ளது.

Sunday, 15 November 2015

வாவியன் (துருக்கி) 2009

ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். ‘ரோட் டு அனடோலியா’ என்ற படம் பார்த்த பிறகு திரைப்படங்கள் மீதான காதலை ஈரானிலிருந்து துருக்கிக்கு மாற்றிக் கொண்டேன். இரானிய இயக்குஞர்களுக்கு இல்லாத சுதந்திரம் துருக்கியில் இருப்பதால், அவர்களது படங்களில், காட்சிகளில் அவ்வளவு இல்லையென்றாலும் கதையில் சற்றுத் துணிச்சல் இருக்கும்.

‘வாவியன்’ என்றால் மின் விளக்கு விசிறி போன்றவற்றை இரு சுவிட்சுகளால் இயக்கும் வசதி’ என்கிறான் கதைநாயகன்/வில்லன் என்கிய்ன் குனாதின். கதைக்கும் நாயகன் அவர்தாம். ஆம். கதாசிரியரும் அவர்தாம்.

மனைவியின் பணத்துக்காக ஆசைப்பட்டு அவளை கொலை செய்ய முயலும் த்ரில்லிங்'கான கதையை எழுதியதால் பாக்யராஜ் அவரே நடிக்கவில்லையா, அது போல ஒரு கதையை எழுதி விட்டு இவரும் தானே நடிக்கவில்லை என்றால் எப்படி?

படத்தின் தொடக்கத்தில் அவனது காரில், ஓட்டுநர் சுவிட்ச் போட்டால் பக்கவாட்டில் தானாகவே திறந்து மூடும் கதவை பொருத்துகிறான். எனக்கு கூட ‘அட இப்படி ஆட்டோமேட்டிக் கதவு உள்ள கார்கள் ஏன் இங்கு இல்லை’ என்று தோன்றியது. படத்தைப் பார்த்ததும்தான் ஏன் இல்லை என்று புரிந்தது.

கதாநாயகன் எப்படியாவது மனைவியை தீர்த்துக் கட்ட வழி பார்த்து அதை நிறைவேற்றினாலும், மனைவி இரண்டு நாட்களில் தப்பித்து வருகிறார் என்றாலும் அநியாயத்துக்கு எண்பதுகளின் தமிழ்ப்பட கதாநாயகிகளைப் போல கணவன் மேல் பாசமோ பாசமாக பொறுத்துப் போகிறார். ஒரு கட்டத்தில் நாமே திரைக்குள் போய் அவனை நாலு சாத்து சாத்தி விட்டு வரலாமா என்றிருக்கிறது.

இதற்கு தமிழ்ப்படமே பார்க்கலாமே என்றால், பார்க்கலாம்தான். ஆனால், தமிழ்ப்படங்களில் இத்தனை கொடுமைகள் செய்யும் கணவன் ‘தடா’லென திருந்தி விடுவான் அல்லது செத்து விடுவான். அப்படியில்லாமல், கணவனது பொருளாதார பிரச்னைகள் மனைவி மூலமாகத் தீர்கையில், எவ்வித மன்னிப்புமின்றி கண்ணீருமின்றி அன்பான தந்தையாகவும் சற்று அனுசரணையான கணவனாகவும் இயல்பாக குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான்.

இயக்குஞர்கள் இருவர், சகோதரர்கள். ஹாலிவுட்டின் கோயன் சகோதரர்கள் போன்று துருக்கியில் டேலான் சகோதரர்களாம். (ப்ளாக்) காமெடி ரகப் படமென்றாலும், கோயர் சகோதரர்களின் படம் போன்றே ஏதோ சில்லிட வைக்கும் அமானுஷ்யமான பய உணர்வை படம் நெடுக இவர்களாலும் ஊட்ட முடிகிறது.

தமிழ்ப்படங்கள் பிடிக்கும் எவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்...

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....