‘நாளைக்கு காலைல உன்னை தூக்குல போடப் போறாங்கன்னாக் கூட கவலப்படக் கூடாது’ன்னு சொல்லிட்டு அடுத்து அப்பா சொன்ன காரணம் வித்தியாசமானது. ‘ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து ஒருவேளை உன்னோடு மொத்தமா எல்லோரும் செத்துரலாம்’ என்றார்.
தூத்துக்குடியில் எழுபதுகளில் குடியேறிய தொழிலாளர்களை ‘புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார்கள்’ என்று அதை இடித்துத் தள்ளினால்தான் ஆயிற்று என்று கலெக்டர் கச்சை கட்டிக்கொண்டு இறங்கிய வழக்கில் வாதாடும் போது ஏனோ அப்பா சொன்னது நினைவுக்கு வந்து, ‘இன்று ராத்திரியே பெரிய பூகம்பம் வந்து இந்த வீடுகள் எல்லாம் இடிந்து போனால், நாம் பார்த்துக் கொண்டிருப்போமா. இடிக்கப் போறோம்னு சொல்ற இதே அரசு வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும். சுனாமியின் பொழுது அதுதானே நடந்தது’ என்றதை நீதிபதிகள் இறுக்கமான முகத்துடன் கேட்டுக் கொண்டனர்.
நேற்று ராத்திரி பார்த்த ‘லெ ஹெய்னி’ (Hate) என்ற பிரஞ்சுப் படத்தில் ஹுயூபர்ட் ‘Heard about the guy who fell off a skyscraper? On his way down past each floor, he kept saying to reassure himself: So far so good... so far so good... so far so good. How you fall doesn't matter. It's how you land! என்று தனது நண்பர்களிடம் பேசுவதைக் கேட்கையில் அப்பா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.
வெறுப்பு வெறுப்பு வெறுப்பு என்று வெறுப்பு சூழ்ந்த உலகில் வசிப்பவர்களுக்கு ‘இது வரை ஏதும் இல்லை’ என்ற நம்பிக்கை மட்டுமே ஒரே ஆறுதல்.
பிரான்ஸ் தேசத்தில் குடியேறியவர்களுக்கான வசிப்பிடத்தில் வசிக்கும் யூத, கறுப்பு, அராபிய இனத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்களின் பரபரப்பான ஒரு நாள் வாழ்வுதான் படம். பரபரப்பு என்றதும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் என்பதல்ல. இங்கும் அங்கும் சுற்றுகிறார்கள். வேகவேகமாக பேசுகிறார்கள். நியோ நாஜிக்களிடம் சண்டையிடுகிறார்கள். போலீஸைப் பற்றி கோபத்தைக் கக்குகிறார்கள். திருடுகிறார்கள். தப்பியோடுகிறார்கள். போதாதற்கு போதை மருந்து வேறு.
முந்தைய நாள் நடந்த கலவரத்தில் அவர்களது மற்றொரு நண்பன் போலீஸாரால் தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறான். மூவரில் கொஞ்சம் அமைதியான ஹுபர்ட் ஆப்ரிகன். கலவரத்தின் அவனது உடர்பயிற்சியகம் எரிந்து போயிருக்கிறது. அமைதியானவன். எப்படியாவது அந்தச் சூழலிலிருந்து தப்பி வேறு எங்காவது சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும் எப்படி என்று தெரியாமலிருப்பவன்.
யூதன் கலவரத்தில் போலீஸ் தவற விட்ட துப்பாக்கியை வைத்துக் கொண்டு கோமாவில் இருக்கும் நண்பன் செத்தால், ஒரு போலீஸையாவது பழிக்கு கொல்ல வேண்டும் என்று எப்போதும் கோபத்தோடு திரிபவன்.
அராபியனாக நடித்துள்ள சையத் தக்மாய், படம் முழுக்க பேசுகிறான் பேசுகிறான் அவ்வளவு பேசுகிறான். கவிஞனாம். ‘மை கசின் வின்னி’யில் வரும் ஹாலிவுட்டின் ஜோ பெஸ்ஸியேதான். அப்படியே குள்ளம் வேறு. உற்சாகமான நடிப்பால் மனதை கொள்ளை கொண்ட இவர் யார் என்று தேடினால் பிரான்ஸில் புகழ்பெற்ற நடிகர் போல. முஸ்லீம். ஆனால் புத்திசாலித்தனமாக இப்போதே அமெரிக்க குடியுரிமை வாங்கியுள்ள விபரம் டோனால்ட் ட்ரம்புக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
பிரான்ஸில் குடியேறிய ஆப்ரிக்க அராபிய குடும்ப இளைஞர்களுக்கும் போலீஸுக்கும் உள்ள பிரச்னை என்பதால் இப்போதுதான் வந்த படம் என்று நினைக்க வேண்டாம். 1995ல் வந்த படம். இருபது ஆண்டுகளில் ப்ரான்ஸ் ஒரு சுற்று சுற்றி மீண்டும் பழைய இடத்துக்கே தற்பொழுது வந்து நிற்கிறது.
‘வெள்ளையர்களின் சுமை’ என்று காலனியாதிக்கத்தை ருட்யார்ட் கிப்ளிங் வர்ணித்து நூறு ஆண்டுகள் கழிந்து விட்ட தற்பொழுதுதான் அந்தச் சுமையின் உண்மையான வலியை மேற்கத்திய நாடுகள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. அவர்களுக்கும் இது so far so good...தாம்
.
சொல்ல மறந்து விட்டேன். இது கறுப்பு வெள்ளைபடம். எனக்கும் படம் முடியும் வரை அது தட்டுப்படவேயில்லை. ஆமாம், நல்ல திரைப்படங்களுக்கு எதற்கு வர்ணம்?
Subscribe to:
Post Comments (Atom)
PROOF OF WILLS ADMITTED BY TESTATOR
INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....

-
நண்பரின் மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம். “என்னடா, ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுறீங்க” கோவில் மண்டபத்தில் கல்யாணம் முடித்து வைத்த திரு...
-
Luden was a fisherman. The Government has enrolled Luden under a Group Insurance Scheme through National Federation of Fishermen Co-ope...
-
‘இறந்து போகும் ஒவ்வொரு உறவினரும் நான் வாழ்வதற்கான காரணங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டே போகிறார்கள்’ சமீபத்தில் இறந்து போன சித்தப்பாவைப்...
No comments:
Post a Comment