ரேவதியின் தந்தைக்கு குழப்பம். அவரது தகுதிக்கும், ரேவதியின் அழகுக்கும் உரிய கணவனாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில். பேசாமல் பிரம்மாவிடமே கேட்டு விடுவோம் என்று மகளை அழைத்துக் கொண்டு பிரம்மலோகம் சென்றார். அவர்கள் சென்ற நேரம் அருமையான இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இசை முடியும் வரை காத்திருந்தவர், பின்னர் பிரம்மா சந்தித்து, ரேவதியை மணமுடிக்க மனுச்செய்த மாப்பிள்ளைகளின் பட்டியலிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.
பிரம்மன் பெரிதாகச் சிரித்தார், ‘பிரம்மலோக இசையில் மயங்கி நீ காத்திருந்த சிறிது நேரத்தில் பூமியில் பல யுகங்கள் கழிந்திருக்குமே. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே திருமணமாகி செத்துப் போய் அவர்களது சந்ததிகளும் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்து மறைந்திருப்பார்கள் என்றார்.
ரேவதியின் தந்தைக்கு கிலி பிடித்தது. பிரம்மா அவரைத் தேற்றி, ‘பூமியில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணாவும் அவரது சகோதரர் பலராமரும் இருப்பார்கள். அவர்களில் பலராமருக்கு இவளை மணமுடி’ என்று அனுப்பி வைத்தார்.
பூமிக்குத் திரும்பியவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி. அனைத்தும் மாறிப் போயிருந்தது. முக்கியமாக பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் சிறிய அளவில் மாறியிருந்தார்கள். பலராமர் வேறு வழியில்லாமல் தன் கையில் இருந்த கதையால் ரேவதியின் தலையில் அடிக்க அவள் பலராமர் உயரத்துக்கு குறுகி பின் அவரை மணமுடித்தாள்….
நேற்றுப் பார்த்த இண்டர்ஸ்டெல்லார் படக்கதை பாகவத புராணத்திலிருந்து திருடியதா தழுவியதா என்று யாரும் வழக்குப் போடவில்லையா?
II பேதுரு 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்
சங்கீதம் 90:4
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது
குரான் 22:47
அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்
உண்மையச் சொல்லுங்க ஐன்ஸ்டைன், உங்க ஜெனரல் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி’’யை கண்டுபிடிச்சது யார்?
என்ன ஐன்ஸ்டைன் செத்துப் போய் பல வருசமாச்சா, அதனாலென்ன, பிளாக் ஹோல் ஈவண்ட் ஹொரைசனுக்குள்ள வண்டிய உட்டா அவரைப் புடிச்சுறலாம்….
நான் எங்க இருக்கேன்?
Madurai
24/11/14


No comments:
Post a Comment