Monday, 1 February 2016

பாதசாரி


தனிப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நேற்று செங்கல்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. விடிகாலை சென்றதால் தங்க நேரிட்ட விடுதியிலிருந்து நீதிமன்றம் எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டேன். இரண்டு கிலோ மீட்டருக்குள் என்றார்கள். வெயில் இல்லை. பருவநிலையும் இதமாக இருக்கவே, ‘ஊரையும் பார்த்த மாதிரி இருக்கும்’ என்று நடந்தே போனேன். முதலில் எந்த ஊரையும் போலவே தூசியாக இருந்தாலும் பின்னர் நீதிமன்றம் இருந்த சாலை ரம்மியமாகவே இருந்ததில் நடந்ததில் மெத்த திருப்தி.

ஆனால் மாலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த சமரச பேச்சுக்கு விரும்பியிருந்தாலும் நான் நடந்திருக்க முடியாது. கடற்கரை சாலையில் ராணி மேரி கல்லூரியிலிருந்து என்று நினைக்கிறேன், சென்னை பல்கலைக்கழகம் வரை முதலமைச்சரின் உருவம் தாங்கிய கட்-அவுட்களும் அலங்கார தட்டுகளும் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி நடைபாதையின் குறுக்காக, முழுக்கவும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

நடைபாதையை பயன்படுத்த வேண்டிய அனைவரும் பிரதான சாலையோரமாக சென்று கொண்டிருந்தார்கள்.

சாலை வசதி என்பது முதலில் நடப்பவர்களுக்கு, பின்னர் மிதிவண்டி அதற்கும் மிஞ்சியதுதான் மோட்டார் வண்டிகளுக்கு என்பதை நாம் உணர்வதே இல்லை.

வேண்டுமானால் கட்-அவுட்களை இனி பிரதான சாலையில் வைக்கட்டும். நடைபாதையில் வைத்து, ஏற்கனவே அபாயகரமான முறையில் நடந்து செல்பவர்களை மேலும் அபாயத்தில் தள்ளுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

இந்த கட்-அவுட்களுக்கு முறையாக விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் வாதிடலாம். அவர்களைப் பார்த்து உயர்நீதிமன்றம் கேட்க வேண்டிய கேள்வி, ‘அவ்வாறாக கட்-அவுட் வைக்க வழங்கப்படும் உரிமம் பாதசாரிகளின் ‘வாழ்வதற்கான உரிமை’ என்ற அடிப்படை உரிமையை பாதித்தால் இரண்டில் ‘எந்த உரிமையை நாம் விட்டுக் கொடுப்பது?’ என்பதுதான்.

சொல் வேட்டை

“நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஆரஞ்சு உறித்து ஒவ்வொரு சுளையாக தின்று கொண்டிருக்கிறேன்.

பளிச் பளிச்சென்று புளித்தினிக்கிறது”

விஜய் பாஸ்கர்விஜய் இளைஞர். ஆனாலும் நவீன தமிழ் இலக்கியங்களில் அதிகம் பரிச்சயமுள்ளவர் போல. தனது தினசரி குடும்ப வாழ்வில், நாம் யாவருக்கும் ஏற்ப்படும் அனுபவங்கள்தாம், தனது முகநூல் பக்கத்தில் சுவராசியமான கதைகளாக எழுதுகிறார். சில நிமிடங்களுக்கு முன்னர் அவரது மேற்கண்ட வரிகளைப் படித்ததும் ‘புளித்தினிக்கிறது’ என்ற வார்த்தை என்னைக் கட்டிப் போட்டு விட்டது.

தமிழில் புதிய வார்த்தைகளை உருவாக்குவதும், மறைந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடித்தலையும் பற்றி யோசித்துக் கொண்டே எழுந்தால் என்ன ஒரு தற்செயல்! (coincidence)

அவ்வாறு நினைத்துக் கொண்டே எழுந்ததற்குக் நேற்று வெளியிடப்பட்ட நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களின் புத்தகமான ‘சொல் வேட்டை’யை படித்துக் கொண்டே தூங்கியதுதான் காரணம்.

தினமணி படிக்காதலால் அவரது வாராந்திர ‘சொல்வேட்டை’ பற்றி அறிந்திலேன். அட்லாண்டிக் என்ற பத்திரிக்கையில் பார்பரா வால்ராஃப் என்ற பெண்மணி வாசகர்களுடன் இணைந்து கூட்டாக புதிய வார்த்தைகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய ஊக்கத்தில் (inspiration?) இத்தொடரில் நம்மிடம் புழங்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை வாசகர்களிடம் இருந்து கோரி, அவற்றில் பொருத்தமான ஒரு வார்த்தையை, ஏறக்குறைய ஒரு நீதிபதியின் பணியைப் போலவே ‘இதுதான் சரியான வார்த்தையாக இருக்கலாம்’ என்று முடித்து வைக்கிறார்.

தமிழில் வார்த்தைத் தேடலை முடித்து வைத்தால், குறைந்தது பத்து பேர் ‘அது எப்படி?’ என்று கிளம்பி வருவார்கள். இராமசுப்பிரமணியம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருப்பதால், இதுவரை ஏதும் பிரச்னையில்லை என்று நினைக்கிறேன்.

கம்பியூட்டருக்கு முன்பு சுஜாதா முன்னிலையில் கணிப்பொறி, கணிப்பி என்று ஆரம்பித்து இறுதியில் கணணி (அல்லது கணிணியா) என்று வந்து நிற்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இணையத்தில் நான் தமிழ் பழகிய பொழுது நமது பதிவுகளுக்கு மற்றவர்களின் கமெண்ட்ஸுக்கு என்ன சொல்வது என்று பல ஆலோசனைகளுக்குப் பிறகு எதிர்வினை என்று முடிவாயிற்று. இராமகி ஜெபி ஐயா அவர்களிடம் இருந்து பல வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். கமெண்ட்ஸுக்கு முன்னிகை, ஸீரியஸாக என்பதற்கு சேரியமாக என்பதெல்லாம் புதுமையாக இருந்தது.

முதன் முதலில் நான் மரத்தடி இணையகுழுவிற்கு எழுதிய தமிழ் மடல் என்னிடம் இன்றும் உள்ளது. பண்பலை வானொலி ஆர்ஜே பேசுவதை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதியது போல இருக்கும். இப்போது நான் எழுதுவதைக் காட்டினால், உறவினர்கள் சிலர் ‘இது என்ன புரியவே இல்லையே என்கிறார்கள்’. அவர்களது தமிழை நான் கொல்கிறேன் போல.

‘பண்ணித்தமிழை’ அழிப்பதென்றால் அது இணையத்தால்தான் முடியும் என்று நினைத்திருந்தேன். மருத்துவர் ப்ரூனோ’விலிருந்து பலரைக் குறிப்பிட வேண்டும். நேற்று நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி இராமசுப்பிரமணியம் மூலமாக தினமணி அந்தப் பணியை தன்னளவில் தொடக்கி வைத்தது என்பதை அதன் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் அழுத்தமான அறிமுக உரைவீச்சிலிருந்து அறிந்து கொண்டேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் தனது வழக்கமான பாணியில் சுவையான கதை சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் வாசகர்களின் பங்களிப்போடு ‘சரி இதுதான்’ என்று நிறுத்துவது சற்று ஏமாற்றமாக இருந்தது. பத்திரிக்கையின் இட நெருக்கடி. அவருக்குள்ள வேலை நெருக்கடி என்று நினைக்கிறேன்.

புதிய ஆங்கில வார்த்தை ஒன்றிற்கு தமிழில் வார்த்தை இல்லாத பொழுது, அந்த ஆங்கில வார்த்தை சரியாகக் குறிப்பிடும் விளக்கத்தை அப்படியே தமிழ் வார்த்தையாக தேர்ந்தெடுப்பது காஃபியை ‘கொட்டை வடிநீர்’ என்று தமிழ்ப்படுத்துவது போலாகாதா? ஃப்ளாம்பாயண்ட் கவர்திறன் சரி, பாராஃபெர்னேலியா அடையாளச் சின்னம் என்னமோ மாதிரியிருக்கிறது.

ஆங்கிலத்தில் நிச கற்பனை பாத்திரங்களின் குணநலன்களை ஒத்த செயலுக்கு அவர்களின் பெயரை வைத்தே வார்த்தைகள் உள்ளன. சேடிஸ்ட், லின்ச், ட்ராகோனியன் போன்ற வார்த்தைகள் நிச மனிதர்களின் பெயர்களிலிருந்து உருவானவை. க்விக்சாட்டிக் கற்பனைப் பாத்திரம். டான் க்விக்சாட் குணநலனை வைத்து அந்த வார்த்தையை ‘இலக்கியல் ஆர்வக்கோளாறு’ எனறு முடித்து வைத்த நீதிபதியின் தீர்ப்பு எனது சிற்றறிவுக்குப்பட்ட அளவில் சரியல்ல என்பதை சொல்ல நினைத்தாலும், யாராவது ‘ஐயா, கண்டெம்ட் அவனை விடாதீங்க’ என்று போட்டுக் கொடுக்கும் சாத்தியக்கூறு இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்.

கணிதத்தில் எண்களோடு விளையாடுவது போல மொழியியலில் வார்த்தைகளோடு விளையாடுவது சுகமான அனுபவம். பாரதி ஆரம்பித்து வைத்தவர் என்று வைத்தியநாதன் கூறினாலும் சுஜாதாதான் தமிழில் வார்த்தை விளையாட்டை ஜனரஞ்சகமாக்கினார். அவரது ‘க்ளிக்’கினானை யார் மறக்க முடியும்?

நீதிபதி ஐம்பது வாரங்களுக்கு சொற்களை வேட்டையாடியுள்ளார். அல்லது அவருக்காக மற்றவர்கள் வேட்டையாடியதை மேற்ப்பார்வை பார்த்துள்ளார். தற்பொழுது மற்றவர்கள் தொடர்வதாக தினமணி ஆசிரியர் கூறினார். இராமசுப்பிரமணியம் கடுமையான உழைப்பாளி. 24 மணி நேரம் என்பது அவரது அன்றாட பணிகளுக்கு போதுமானது இல்லை என்பதை வழக்குரைஞர்கள் அறிவார்கள். அவற்றிற்கிடையிலேயும் அவர் நேரம் ஒதுக்கி வேட்டையாடியுள்ள வார்த்தைகள் நிலைக்க வேண்டுமென்றால், இணையத்தில் இந்த தொகுதி பரவலாக்கப்பட வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, இணையம் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்வேட்டையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. வேட்டையாடுவதோடு இல்லாமல், வேட்டைப் பொருட்கள் மறை பொருட்களாக்கப்படாமல் பகிரப்படுவதால் நிலைத்தும் நிற்கின்றன. மற்ற ஊடகங்களுக்கெதிரான இணையத்தின் வெற்றி என்றே அதைக் கூறலாம்.

நீதிபதி இராமசுப்பிரமணியம் ஓய்வு பெற்றவுடன் நீதிமன்றத்தில் நடைபெறும் செயல்கள் புழங்கும் சொற்களுக்கான தமிழ் சொல் வேட்டையை இணையத்தில் ஆரம்பிக்க வேண்டுகோள் வைக்கலாம்.

சரி, இவ்வளவு அருமையான புத்தகம் ஏனோ அச்சிடப்பட்ட தன்மை திருப்தியளிக்கவில்லை. காகிதத்தின் தரமோ அதன் நிறமோ எழுத்துகளோ (ஃபோண்ட்) ஏதோ ஒன்று இலகுவாக வாசிக்க இடறலாக உள்ளது. ஆனால் அழகான கடின அட்டை. விலையும் 125 ரூபாய் என்பது மிக மலிவுதான்.

சொல்வேட்டை. நல்வேட்டை!

ரஜினிமுருகன்


நேற்று சுகப்ரியா’வில் ரஜினி முருகன். ஐநாக்ஸ் போல வெளியும் உள்ளும் டாம்பீகமாக இல்லை என்றாலும் ஒலி ஒளி தரம் பிரமாதமாகவே இருந்தது. ஆனாலும் படம் ஆரம்பித்ததும் ஏசியை நிறுத்தும் அல்ல குறைக்கும் பழைய சில்லறைத்தனம் போக மாட்டேன் என்கிறது போல...

ஏசியைக் கூட போடாவிட்டால் பரவாயில்லை. படத்தை முடிக்க விடாம அந்த பாட்டுகளைப் போடாமல் இருந்தால் என்னைப் போன்றவர்கள் தமிழ்படங்களை பார்க்க தைரியம் கொள்வோம். ராத்திரி வீட்டுக்குள் நுழைந்து மணியைப் பார்த்தால் அடுத்த நாள் காலை இரண்டு!

‘தன்னுடைய அப்பத்தா கொடிக்குளம் பேச்சி, ராஜ்கிரணின் வைப்பாட்டி’ என்று சொத்தில் பங்கு கேட்டு வரும் சமுத்திரகனி அதுக்கு ஆதாரமாக ஒரு போட்டோவையும், கொடிக்குளம் பேச்சிக்கு அவள் வெள்ளாமை பண்ணும் நிலத்தை எழுதிக் கொடுத்த செப்புப்பட்டயத்தையும் காண்பிக்கிறார்’

அப்படியே ‘கொடிக்குளம் பேச்சி செத்துப் போய் ஐம்பது வருசமாச்சு’ன்னு சொல்லும் சமுத்திரகனியை மடக்க சிவகார்த்திகேயன் அவள் முந்தைய வாரம்தான் இறந்ததாகச் சொல்லவும், சமுத்திரகனி சமாளித்துக் கொண்டு அவரது அப்பத்தா மேலூரில் இருக்கும் கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்.

அதுக்கு ரஜினி முருகனான சிவகார்த்திகேயனின் வருங்கால மாமனாரான வக்கீல் திருநீலகண்டன் ஏன் முழிக்கணும்? செப்புப்பட்டயத்தில் நிலம் இருக்குமிடத்தை வைத்து அது மேலூரில் உள்ள கொடிக்குளம் இல்லை என்று சொல்லியிருக்கலாமே.

அதுதான் வக்கீலாயிருப்பதன் அவஸ்தை...

ஆர்குமெண்டை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தப்புறம் ‘அந்தக் கேள்விக்கு அப்படி பதில் சொல்லியிருக்கலாமே. இதைச் சொல்லியிருந்தா வேற மாதிரியாயிருக்குமே’ என்று மண்டைக்குள் ஏற்ப்படும் குடைச்சல் ராத்திரி தூங்கப்போகும் போதும் கூட என்றில்லை, சில சமயங்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வது, நாம வாங்கி வந்த சாபம்!

Sunday, 24 January 2016

சீட்டிங் கார்ட்!



‘சார் நீங்க வக்கீலா சார், சரி உங்க சீட்டிங் கார்ட கொடுங்க’

‘……………………….’

‘அதாங் சார்…உங்க கார்டு, அதக் கொடுங்க’

மாமியார் அட்மிட் ஆகியிருக்கும் ஆஸ்பத்திரி வாயிலில் எதேச்சையாக பார்த்த நபர் வக்கீலென்று தெரிந்ததும், மாமியாரின் சொத்தினை எப்படியாவது எழுதி வாங்கி விட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் வடிவேலு’வின் க்ளாசிக் வசனம்.

தமிழக மாஸ் கதாநாயகர்கள் சில படங்களில் பல காட்சிகளில் சொல்ல நினைத்ததை, வடிவேலு மிகச் சாதாரணமாக ஒரு வரியில் சொல்லிப் போன காட்சி அது.

திரைப்படங்களில் தங்கள் மீதான கிண்டல்களை அவ்வப்போது எதிர்த்து வந்தாலும், வழக்குரைஞர்கள் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளும் கதைகள் சுவராசியமானவை

தொழில் தொடங்கிய சில வாரங்களில், மற்றொரு வக்கீல் என்னைப் பற்றி விசாரித்தார். ‘கல்யாணம் எல்லாம் இப்ப எதுக்கு?’ என்றேன்.

‘தம்பி, இப்பவே பண்ணிக்கிட்டீங்கன்னா, பாக்க வர்ரவங்க சின்னப்பையன் நல்ல துடிப்பா இருக்காரு. சீக்கிரம் மேல வந்துருவாரு’ம்பாங்க. அதுவே கொஞ்ச வருசம் போச்சுன்னா ‘இன்னும் ஜூனியராவேவா இருக்காருன்னுருவாங்க’ என்று கிலியேற்றினார்.

அதுக்கு ஏற்ற மாதிரி நான் அங்கு கேள்விப்பட்ட ஒரு சம்பவம். இளம் வக்கீல் ஒருவருக்கு திருமணம். மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் ‘திமு திமு’ வென்று நாலைந்து நபர்கள் உள்ளே நுழைந்து நேராக மாப்பிள்ளையிடம் போய், ‘ஐயா நம்ம ஆளுங்களை போலீஸ் புடிச்சுட்டு போயிட்டாங்க. நீங்கதான் இப்ப வந்து எப்படியாவது காப்பாத்தணும்’னு அழுததும் மாமனாரின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்ததாம்.

எல்லாம் அவரோட ‘செட்டப்’புன்னு சொல்லிச் சிரிச்சாலும், கேட்ட நான் அதையும் நம்பவில்லை. சம்பவத்தையும் நம்பவில்லை.

இது கொஞ்சம் மைல்ட். குறும்புத்தனமானது (mischievous) மற்றது கொஞ்சம் தீவிரமானது என்றாலும் நடந்திருக்கலாம் என்று நம்பினேன். Wicked வகை.

அந்தக் காலத்தில் பின்னால் சாயக்கூடிய குஷன் வைத்த பெரிய சைஸ் சுழல் நாற்காலி அவரிடம்தான் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்தாலே எனக்கு ஏனோ பயமாக இருக்கும் என்றாலும், எங்கு எப்போது பார்த்தாலும் வாய் நிறைய ‘வாங்க தம்பி’ என்று பாசத்துடன் அழைப்பார். கிரிமினல் வக்கீல் என்றாலும் அவரின் மேலான வேறு பல குணங்களுக்காக பெரிதும் அறியப்பட்டிருந்தார்.

அதற்கென்றே ஒரு ஆளை வைத்திருந்தாராம். மாலை நேரங்களில் கட்சிக்காரர்கள் இருக்கும் போது ‘டிப் டாப்’பாக உடை அணிந்து தோரணையாக அலுவலகம் செல்ல வேண்டுமாம். டிப்டாப் ஆசாமியை வாயிலில் பார்த்தவுடனே, நம்ம வக்கீல் ‘வாங்க எஸ் பி சார்’ என்று எல்லோருக்கும் கேட்கும்படி வரவேற்று உள்ளே வீட்டிற்குள் அழைத்துச் சென்று கொஞ்ச நேரம் உபசரித்து பின் அனுப்பிய கையோடு, ‘நம்ம பயதான்’ என்று நாற்காலியில் உட்கார்ந்தால் கட்சிக்காரன் மரியாதையில் தன்னால எழுந்து விடுவானாம்.

அது கூட பரவாயில்லை. எமர்ஜண்ட் சூட் போடணும்னு யாராவது கட்சிக்காரர் தெரியாம மாட்டுனார்னா, பிராது எழுதுன கையோட குமாஸ்தாவிடம் ‘அப்படியே அந்த முன்சீப்புக்கு போன போடுறா. நாளைக்கு அவன் கோர்ட்டுல எமர்ஜண்ட் கேஸ் போடறேன்னு சொல்லு’ன்னு சொல்வாராம்.

ஆனால் மும்பையில் கேள்விப்பட்டதுதான் ஆக மோசம். மலீஸியஸ் வகை.

‘வாங்க போய் ஜட்ஜைப் பார்த்து கொடுத்துட்டு வந்துருவோம்னு சொல்லி சூட்கேஸுடன் க்ளையண்டையும் கூட்டிக் கொண்டு போவாரம். சூட்கேஸோட இவர் மட்டும் நீதிபதி அறைக்குள் சென்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு வெளியே வரும் போது சூட்கேஸ் மிஸ்ஸிங் ஆகியிருக்கும். ‘சரி எல்லாம் முடிஞ்சிருச்சி’ன்னு கட்சிக்காரரை அனுப்பி விட்டு மீண்டும் உள்ளே போய், ‘ஐயா பெட்டியை மறந்து வச்சிட்டுப் போயிட்டேன்னு’ பவ்மயமா பெட்டியோட வெளியே வந்துருவாராம்.



நான் நம்பவில்லை. ஆனால் அமெரிக்க மீடியாக்களில் வக்கீல்களை அந்தக் கலாய் கலாய்க்கிறார்கள். ரொம்பத்தான் பயமோ?

Wednesday, 20 January 2016

ஷாகித் (ஹிந்தி) 2012

கடந்த வார சாலைப்பயணத்தில் ஏற்ப்பட்ட கோபத்தில், ‘ஏதாவது இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையோ மாநகராட்சியோ அனைத்து சாலை ஒப்பந்தங்களைப் பற்றிய முழு விபரமும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நினைத்தேன். அப்படி வெளியிட்டால், எங்கெல்லாம் சாலைகள் தரமில்லாமல் உடைகிறதோ, அங்கெங்ல்லாம் ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட துறையை வலியுறுத்த கோர்ட்டுக்கு செல்ல முடியும் என்ற யோசனை எனக்கே நன்றாக இருந்தது.

திடீரென ஒரு பயம்!

‘பாதிக்கப்படும் காண்டிராக்டர் கடுப்பில் ஆளை வைத்து போட்டுத் தள்ளிவிட்டால்?’ உடனடியாக இயக்க வேலைகளை நிறுத்தி விட்டு அடுத்த நாள் கேசுக்கு படிக்க ஆரம்பித்து விட்டேன்.

ஆனால், ஷாகித் ஆஸ்மி பயப்படவில்லை. இத்தனைக்கும், அவனது அச்சம் உண்மையானது. ஆபத்து நெருங்கிக் கொண்டேயிருந்ததையும் அவன் அறிந்துதானிருந்தான்.  அதானால்தான் அவனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்ட அவனது அண்ணனிடம் கூட ‘ அதனால் என்ன, ஒரு ஷாகீத் (தியாகி) ஆக மரித்துவிட்டுப் போகிறேன்’ என்று சமாதானம் கூறினான்.

ஷாகீத்’ பாதுகாப்பு தேடி காவல்துறையிடமும் செல்ல விரும்பவில்லை; அதில் பலனில்லை என்பதால். இறுதியில் அவனது அலுவலகத்திலேயே வைத்து சுடப்பட்டு இறந்து போன போது ஷாகித் வயது வெறும் 32.

அதற்குள் அவனுக்கும்தான் என்ன மாதிரியான வாழ்க்கை அனுபவங்கள்?

மும்பை கலவரத்தில் 14 வயது சிறுவனாக கைது செய்யப்பட்ட ஷாகித், தான் கண்ட கோரக் காட்சிகளால் சென்று சேர்ந்த இடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் முகாம். அங்கே இன்னமும் கொடூரத்தை கண்ட வெறுப்பில் மும்பை திரும்பி வந்த ஷாகித் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறை வாழ்க்கைக்குப் பின்னர் நிரபராதி என்று விடுதலை. சிறை வாழ்க்கை அவனை மாற்றியிருந்தது. கல்வி ஒன்றே தான் உயர வழி என்று அறிந்த ஷாகித் சிறையில் பட்டப்படிப்பை முடித்து, விடுதலையானதும் தொடர்ந்தது படித்தது சட்டம்.

பட்டம் வாங்கி வழக்குரைஞராகப் பணியாற்றியது ஏழே ஆண்டுகள்தாம். பணத்தை தேடி ஓடவில்லை. மாறாக, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்காக, இஸ்லாமிய தொண்டு நிறுவனம் மூலம் பெரும்பாலும் இலவசமாகவே வழக்கு நடத்தியதில் மும்பையை குலுக்கிய வெவ்வேறு வழக்குகளில் 17 அப்பாவிகள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 2008 மும்பை தாக்குதலில் கைது செய்யப்பட்டு ஷாகித் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யபப்ட்ட ஃபாஹிம் அன்சாரி உட்பட.


‘Shahid is the only lawyer who had the maximum cases showing that the police were fabricating evidence’ என்று சீனியர் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறியது கொஞ்சமும் மிகையல்ல. ஏனெனில், குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களில் கைது செய்யப்படுபவர் நிரபராதி என்று நீதிபதிகள் தெளிவாக நம்பினாலும், அவருக்கு விடுதலை என்பது எவ்வளவு கடினம் என்பதை இம்மாதிரியான வழக்குகளோடு சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்கள். எனவே 17 விடுதலை என்பது, பெரிய சாதனைதான்.

‘காங்க்ஸ் ஆஃப் வாஸேபூர்’ இயக்குஞர் அனுராக் கஷ்யப், நமக்குத் தெரிந்தவர்தாம். மும்பை குண்டு வெடிப்பைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இவரது ‘ப்ளாக் ஃப்ரைடே’ படத்தைப் பார்த்தால் போதும். உண்மைச் சம்பவத்தை அவ்வளவு விறுவிறுப்பாக ஹாலிவுட்டில்தாம் இயக்குவார்கள். அந்தப் படம் வெளிவருவதில் பிரச்னை வந்த பொழுது, அதற்காக வழக்கு நடத்தியது ஷாகித். அனுராக் கஷ்யப் நினைத்திருக்க மாட்டார், ஷாகித் வாழ்க்கையையும் அவர் படமாக்கும் காலம் வரப் போகிறது என்று.

தயாரிப்பாளர்தான் அனுராக் கஷ்யப். இயக்குஞர் ஹன்சாய் மேத்தா.

பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த படத்தைப் பற்றி வழக்குரைஞர் என்று சொல்லிக் கொள்ளும் நான் இரு வருடங்களாக அறியாமல் இருந்தது சற்று வெட்கமாக இருக்கிறது.

நிஜ மனிதர்கள் திரைப்படமாகும் பொழுது, நடிகர்கள் அழகாக இருப்பார்கள். விதிவிலக்கு தி ஃப்யூட்டிபுல் மைண்ட் கதாநாயகன் ரஸ்ஸல் க்ரோவை விட ஜான் நாஷ் அழகாக இருப்பார். ஷாகித் ஆஸ்மியும்தான்.

ஏழே வருடங்கள்! முப்பத்தி இரண்டே வயது! ஒரு வழக்குரைஞராக சாதிப்பதற்கு போதும் என்கிறான் என்னை விட 12 வருடம் இளையவனாகிய ஷாகித் ஆஸ்மி!

Sunday, 10 January 2016

கிறிஸ்தவ விளக்கு!

இழுத்து இழுத்து வட அமெரிக்கர்கள் பேசும் ஆங்கிலத்தை இங்கிலாந்துக்காரர்கள் கிண்டலடித்துக் கொண்டே இருந்தார்களாம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்கர்கள், ‘நாங்கள் பேசுவது ஆங்கிலம் என்று யார் சொன்னது. இது அமெரிக்கன், போங்கடா’ என்று சொல்லி விட்டார்களாம்.

அது மாதிரி ‘இது என்ன குத்து விளக்கா’ என்று யாராவது கேட்டால், கேரள கிறிஸ்தவர்கள் ‘இது கிறிஸ்தவ விளக்காக்கும்’ என்று சொல்லிவிடுவார்கள். இஸ்லாமியர்களுக்குத்தான் பாவம், குத்து விளக்கு ஏற்றுவது ஹராமா, ஹலாலா என்று மம்முட்டியை வைத்துக் கொண்டு இன்னமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்

கிறிஸ்தவ சந்நியாசி ஜீவிதத்தில் (அப்படித்தான் மலையாளத்தில் பேசினார்கள்) ஐம்பது ஆண்டுகள் நிறைவு செய்த உறவுக்கார பெண்மணிக்கு மற்றவர்கள் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தினார்கள்.

கேரளா என்றதும் மனமும் உடலும் உடனடியாக ஒத்துழைக்க ஒரே நாளில் போய்த் திரும்பினாலும், திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் சாலை அவ்வளவு மோசம். திரும்பும் போது செம்பட்டி வழியாக வந்து விடலாம் என்றால் அதுவும் மோசம். போதாதற்கு எச்சரிக்கையே இல்லாமல் ‘ஸ்பீட் பிரேக்கர்’ என்ற பெயரில் ‘போன் பிரேக்கர்ஸ்’.

ஒட்டன்சத்திரம் மேம்பாலம் கட்டி இரு வருடங்கள்தாம் இருக்கும். அதிலுள்ள சாலை முழுக்கவும் உடைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர்களை, ‘ஏன் இப்படி சாலை உடைந்து போகிறது?’ என்று கேட்க மாட்டார்களா? தமிழகத்தில் கிராமங்கள் வரை சாலைகள் போடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், தரம்தான் வர வர குறைந்து வருகிறது.

கிராமங்கள் ஏன், மதுரை நகருக்குள் உள்ள எந்த சாலையும் உருப்படியாக இல்லை. மக்களாகத் திரண்டு மாநகராட்சியை பிடித்து உலுக்கினால்தான் உண்டு. திருச்சூர் நகரம் மதுரையில் கால்வாசி கூட கிடையாது. ஆனால் சாலைகள் அவ்வளவு சுத்தம். பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ‘அட்வோகேட் ராமகிருஷ்ணன் தொடர்ந்து 25 ஆண்டுகளாக திருச்சூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார் என்றது எனக்கு வியப்பாக இல்லை.

திமுக’வோ அதிமுக’வோ நாட்டின் உள்கட்டமைப்பை ஊழலால் சீர் குலைப்பது மாறும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

Saturday, 2 January 2016

உறைந்து போகும் சிந்தனைகள்!

எழுத்தாளர் சமஸ் ‘தமிழ் இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டிய சில புள்ளி விபரங்கள் குறித்து நமது உயர்நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழ்க்கு தொடர்ந்து, அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் அளவுக்கு பெரிதாக அப்படி ஒன்றும் அந்தக் கட்டுரையில் எழுதப்பட வில்லை என்று முன்பு பதிவு ஒன்று எழுதியிருந்தேன். பின்னர் கவிஞர் வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பொழுதும், சமஸ் மீதான வழக்கையும் நினைவுறுத்தி இவ்வாறான வழக்குகள் அவமதிப்பு சட்டத்தை நீதிமன்றங்கள் கைக்கொள்வதின் நம்பகத் தன்மையை குலைக்க ஏதுவாகலாம் என்ற எனது அச்சத்தைத் தெரிவித்திருந்தேன்.

முக்கியமாக, எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்கள் மீதான இவ்விதமான சட்டரீதியிலான தாக்குதல்கள், நம் முகத்தை நாம் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் கண்ணாடியை உடைப்பதற்கு ஏதுவான செயல்கள் என்ற எனது கருத்தை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

கடந்த வாரம் சமஸ் அவர்கள் ‘தமிழ் இந்து’ நாளிதழில் ‘சாமிக்கு ட்ரஸ்கோட் உண்டா சாமீ?’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையைப் படித்தால் எனது அச்சம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது புரியும்.

கட்டுரை ஹிந்து திருக்கோவில்களுக்கு வருபவர்களுக்கான உடைக்கட்டுப்பாடு குறித்தது. உடைக்கட்டுப்பாட்டை விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் ஒரு இடத்தில் கூட இந்தக் கட்டுப்பாட்டுக்கு காரணம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ற வார்த்தை இல்லை. உத்தரவு பற்றி என்ன, உயர்நீதிமன்றம் என்ற வார்த்தையே எங்கும் இல்லை. ஏதோ ஹிந்து அறநிலையத் துறை தன்னிச்சையாக பிறப்பித்த கட்டுப்பாடு என்ற ரீதியில் அரசை குறை கூறி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கட்டுரையைப் படிக்கும் யாருக்கும், அரசின் இந்த சுற்றறிக்கையானது, உயர்நீதிமன்றம் உடைக்கட்டுப்பாடு கூறிய தீர்ப்பினை செயலுறுத்தும் வண்ணம் அனுப்பப்பட்டது என்பதும், எந்த எந்த உடைகள் திருக்கோவிலுக்கு பொருத்தமானது என்பது கூட நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவையே என்று தெரியவே தெரியப் போவதில்லை.

நீதிமன்ற நெருக்குதலில் ஏற்ப்பட்ட அச்சத்தால், சமூகத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டிய எழுத்தாளர் ஒருவர் தெரிந்தே பிரச்னைக்கான ஆரம்பப்புள்ளியை முழுக்கவும் மறைத்து ஒரு கட்டுரை எழுதுகிறார். தமிழகத்தின் முக்கியமான நாளிதழும் அதனை பிரசுரிக்கிறது.

ஒருவேளை எழுத்தாளர் சமஸுக்கோ அல்லது தமிழ் இந்து ஆசிரியருக்கோ நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி தெரியாது என்றால், இவ்வாறு சமகால பிரச்னைகள் பற்றி பத்தி எழுத இவர் லாயக்கற்றவர். அவர் ஆசிரியருக்கான குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர் என்றுதான் எடுத்துக் கொள்ள இயலும்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள ‘மான நஷ்ட’ குற்றம் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு சுப்ரமணியன் சுவாமி மீண்டும் மீண்டும் கூறும் காரணம், ‘அந்தப் பிரிவு சமூக சிந்தனைகளை உறைய வைத்து விடும் என்பதுதான் (Chilling Effect). சமஸ் விஷயத்தில் உயர்நீதிமன்றத்தின் முந்தைய நடவடிக்கை பாவம், சமஸின் சிந்தனைப் போக்கை உறைய வைத்து விட்டது.


இறுதியில் நஷ்டம், அரைகுறையாக ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்ட ‘தமிழ் இந்து’ வாசகனுக்குத்தான்…

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....