கடந்த ஞாயிறு ‘தி ஹிந்து’வில் ‘எ கே ப்ளான் தட் லெட் டு அண்ணாதுரை’ஸ் டிஃபீட்’ என்ற தலைப்பிலான செய்தியை பலர் கவனிக்கத் தவறியிருக்கலாம்.
1957ம் ஆண்டு திமுக முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்று அண்ணாதுரை, கருணாநிதி உட்பட பதினைந்து பேர் சட்டசபைக்கு செல்கிறார்கள். பதினைந்து பேர்தான். ஆனால் அவர்கள் கொடுத்த கடுமையான குடைச்சலில் கடுப்பான காமராஜர் அடுத்த தேர்தலில் அந்தப் பதினைந்து பேரும் மீண்டும் சட்டசபைக்கு வந்து விடக்கூடாது என்று வகுத்த வியூகம்தான் கே ப்ளான் எனப்படுவது.
போக்குவரத்து முதலாளி, தொழிலதிபர் என்று பணபலம் மிகுந்த வேட்பாளர்கள் அந்த பதினைந்து பேர்களை எதிர்த்து நிற்க வைக்கப்பட்டதோடு, அந்த தொகுதிகளில் காங்கிரஸ் முழுக்கவனத்தோடு பிரச்சாரம் செய்தது.
பலன், கருணாநிதி தவிர மற்றவரக்ள், அண்ணாதுரை உட்பட தோல்வியடைகிறார்கள். காமராஜ் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது பலர் அறிவோம். அண்ணா தோற்கடிக்கப்பட்டது அவ்வளவாக அறியப்படாதது.
தேர்தலில் பணம் விளையாடுவது எல்லாம் இப்போதுதான்; அதெல்லாம் அந்தக் காலத்தில் இல்லை என்று இன்னமும் சாதிப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
‘ஓட் கொடுக்கும் சுதந்திரத்தைப் பூண்டிலகும் பிரஜைகளே! தற்காலம் தங்களிடம் வந்து அபேட்சகர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் செய்யும் ஜால்ஜூல்களுக்கும், பணம், பலகாரம்…………..முதலியவற்றிற்கும் மகிழ்ந்து உங்கள் ஓட்டுரிமைச் சீரைத் தீய வழியில் செலுத்தாதீர்கள்’
இப்படி வாக்காளர்களை வேண்டுவது ஆனந்த விகடன், வருடம் 1926.
‘தேர்தல் என்றால் என்ன? பொய் சொல்லுதலில் தேர்தல், லஞ்சங் கொடுத்தலில் தேர்தல், தேனொழுகப் பேசுவதில் தேர்தல், செய்ய முடியாத காரியங்களையெல்லாம் செய்கிறேனென்று வாக்குறுதி கொடுப்பதில் தேர்தல் முதலிய எல்லாம் அந்தந்த விஷயம் சம்பந்தப்பட்டவரையில் தேர்தல்தான். இவ்வளவு விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்தலிலும் வெற்றி பெறுவார்களென்பதில் சந்தேகமில்லை’
‘தேர்தல் நாடகத்தில் கோர ரஸம் என்றொரு அம்சமுண்டு.............................ஒருவரையே இரண்டு மூன்று தடவைகள் வோட் செய்யச் சொல்வதும்.......................................வாக்காளர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டு இப்பால் இறந்து போனவருக்குப் பதிலாக எவரை விட்டேனும் வோட் செய்யச் சொல்வதும் சில திருவிளையாடல்களாகும்’
1930ம் ஆண்டு வெளிவந்த ஆனந்த விகடனிலிருந்து.
1926 பின் நான்கு வருடங்கள் கழிந்து 1930ம் ஆண்டு என்று எவ்வித வித்தியாசமுமின்றி தொடர்ந்த பிரச்சார உத்திகள் இன்று வரை மாறவில்லை. கள்ள ஓட்டு தவிர...
ஆனந்த விகடன் தொடங்கப்பட்ட 1926ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான இதழ்களிலிருந்து சுவையான பகுதிகளை தொகுத்து ‘காலப் பெட்டகம்’ என்ற பெயரில் 200 ரூபாய்க்கு 368 பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
முன்பு எல்லாம் பள்ளி நண்பர்கள் வீட்டுக்கு அதுவும் கலியாண வயதில் பெண்கள் இருக்கும் வீட்டுக்குப் போனால் கண்டிப்பாக பைண்டு செய்யப்பட்ட தொடர்கதைகள் இருக்கும். எனக்கு கதையைப் படிப்பதை விட அங்கங்கு கிடைக்கும் துணுக்குகளைப் படிக்கப் பிடிக்கும்.
அந்த அனுபவத்தை திகட்டத் திகட்டத் தருகிறது ஆனந்த விகடனின் ‘காலப் பெட்டகம்’

No comments:
Post a Comment