Sunday, 17 July 2016

அவருக்கு பிறந்தநாள்!

தூத்துக்குடிக்கு மாறுதலான பின்னர் ஒருநாள் எங்கள் ஐவரையும் அப்பா வீட்டிற்கு அருகிலேயே இருந்த பள்ளிக்கு அழைத்துச் சென்றார். ஆம். ஐவருக்கும் ஒரே பள்ளிதான்!

தங்கை சேர வேண்டிய தொடக்கப் பள்ளியும் அதே வளாகத்தில் இருந்தது என்பதை விடவும் அக்காவும் எங்களுடன் அதே பள்ளியில் படிக்கப் போகிறாள் என்பதுதான் மிகுந்த ஆச்சரியமாகவும், கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. உயர்நிலைப் பள்ளிகளில் கோ-எட் என்பது பாளையங்கோட்டையில் கேள்விப்படாதது.

பள்ளி தலைமை ஆசிரியரின் அறைக்கு வெளியே அப்பாவுடன் நின்ற அந்த தினம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனது பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் அந்த ஒரு நாள்தான், பள்ளியில் அப்பாவை நான் பார்த்த ஒரே தருணம்.

முதலில் அக்கா. அடுத்து அண்ணன்கள். இறுதியாக நான் என்று அரை மணி நேரத்திற்குள்ளாக அட்மிஷன் போடப்பட்டு ஒவ்வொருவராக எங்களது வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டோம். நான் ஏழாம் வகுப்பு.

பின்னர் அப்பா தங்கையை சேர்க்க தொடக்கப் பள்ளிக்கு சென்றதாக அறிந்தேன்.

வருடம் 1976.

-oOo-

ஏன் தாத்தா, அப்பா ஸ்கூல் முடிச்ச பிறகு காலேஜுக்கு போகல?’

அவன் படிக்கிறதுக்கு நாசரேத் தாத்தாதான் பீஸ் கட்டுவார். அத வாங்குறதுக்கு அவன் போற போது நிக்க வச்சு எப்படிப் படிக்கிற எவ்வளவு மார்க் வாங்கியிருக்கன்னு அவர் கேப்பாரு. அது அவனுக்கு பிடிக்கல போல

தனது இயலாமையை அந்தப் பதிலுக்குள் தாத்தா மறைத்துக் கொண்டாலும், ஸ்கூல் பீஸுக்காக தனது மாமாவின் முன் அப்பா நிற்கும் காட்சி என் மனதில் தோன்றுவதை தடுக்க என்னால் முடியவில்லை. தனது மதிப்பெண்களை அவர் கூறிய ஏதோ ஒரு நாளில் அங்கிருந்திருக்கும் மாமா பெண்கள் ஒருவேளை சிரித்திருக்கலாம்.

அப்பா தன் படிப்பை நிறுத்திக் கொண்ட ஆண்டு 1951

-oOo-

அதான், இலவசக் தொடக்கக் கல்வின்னு பிரிட்டிஷ்காரன் 1920ம் ஆண்டே சட்டம் போட்டிருக்கானே. பிறகும் பீஸ் வாங்குனா, புள்ளைங்களை எப்படி படிக்க வைப்பாங்க?’

ஐயா, அது நகரத்திலிருக்கும் பள்ளிகளுக்குத்தான். அதுலயும் அரசாங்கப் பணம் கொடுக்க முடியாம திரும்பவும் பீஸ் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க

சரி, அப்படின்னா அரசாங்கமே பள்ளிகளை ஆரம்பிச்சு நடத்த வேண்டியதுதானே

அதுக்கு தேவையான கட்டிடங்கள் இல்லை. இனி திட்டம் போட்டு இடம் பாத்து கட்டுறதும் உடனடியாக சாத்தியம் இல்லை.’

அப்ப ஒன்னு பண்ணுங்க. புதுசா கட்டிடம் கட்டித்தானே ஆரம்பிக்க முடியாது. இருக்குற தனியார் பள்ளிக்கூடத்துல உள்ள டீச்சர் சம்பளத்தை அப்படியே நாம கொடுத்துருவோம். மாணவர்களிடம் பீஸ் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க

பள்ளிக்கூடம் நடத்துறதுன்னா, க்ளார்க், ப்யூன்னு மத்தவங்களும் இருப்பாங்க

அதையும் கொடுப்போம்

அது மட்டும் போதுமா. பள்ளியை பராமரிக்கிற செலவுக்கு எங்க போறதுன்னு கேட்கிறாங்க

அதுவும்தான். பிரிட்டிஷ்காரன் எவ்வளவு கொடுக்குறதா சொன்னான்?’

டீச்சர் சம்பளத்துல 20 பர்சண்ட்

அதே கொடுப்போம்

வருடம் அப்பா பள்ளிப்படிப்பை முடித்து எட்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 1959.

-oOo-

எங்கள் அதிஷ்டம். அரை மணி நேரத்தில் எங்கள் ஐவரை அப்பா பள்ளியில் சேர்த்த ஆண்டிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பள்ளி பராமரிப்பு மான்யம் 6 சதவீதம்தான். இரண்டு வருடங்களில், 1979ல் 4 சதவீதமாக குறைக்கப்பட்டது.

2000ல் பராமரிப்பு மான்யம் 2 சதவீதமாக மேலும் குறைய, தாக்குப் பிடிக்க முடியாத பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால், ‘டீச்சர் சம்பளம் மிகவும் உயர்ந்து விட்டதால் இப்போதய 2 சதவீதம் என்பது முன்பு கொடுத்த 6 சதவீதத்தை விடக் கூடுதலாக வரும். அதுவும் கல்வி மான்யம் எல்லாம் அரசிடம் உள்ள நிதி ஆதாரத்தை பொறுத்தே அளிக்கப்படும்என்று தீர்ப்பும் கூறப்பட்டது 2007 (1) CTC 30.

தாத்தா சொன்ன போது கூட எனக்கு முழுமையாகப் புரியவில்லை. ஏதோ வழக்கிற்காக இந்த தீர்ப்பைப் படித்த போதுதான்அப்பா ஏன் படிப்பை நிறுத்திக் கொண்டார். ஆனால் நாங்கள் ஐவரும் எப்படி ஒரே பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தோம் என்பதும் புரிந்தது

நமக்கே இப்படி இருக்கே, இரண்டு மூணு புள்ளைங்க வச்சுருக்கிறவங்க எல்லாம் எப்படி பீஸ் கட்டுறாங்க'. வருடம் 2016.

சக்கரம் முழுதாக ஒரு சுற்றுச் சுற்றி இங்கிலீஷ்காரன் சட்டம் போட்ட 1920க்கு மீண்டும் இப்போது வந்து விட்ட மாதிரி இருக்கிறது.


ஆமாம், அவருக்கு இன்று பிறந்த நாளாமே!

Thursday, 14 July 2016

டாக்டர் ஜாகிர் நாயக்?

தான், தன் குடும்பம் குழந்தைகளின் கல்வி, வேலை என்ற அளவோடு கூடிய வரையில் பிற சமூகத்தவரோடு இசைந்து வாழ்ந்து வந்த சாதாரண நடுத்தர இஸ்லாமியர்களை திடீரென மிகப் பெரிய அவநம்பிக்கைக்குள் ஆழ்த்திய நிகழ்வு ஒன்று உண்டென்றால் அது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு.

பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு அளவிற்கு இல்லை என்றாலும் அதற்கு நிகரான அளவிற்கு இஸ்லாமியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆபத்துடைம்ஸ் நவ்அர்னாப்பின் தினப்படி கூச்சல்களை ஏதோ இந்தியாவின் ஒட்டு மொத்த குரல் என்று நம்பி, இஸ்லாமிய மத போதகரான டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்திய அரசு தடை செய்யும் முயற்சியில் இருக்கிறது.

இஸ்லாமிய நண்பர் ஒருவர் அனுப்பி வைத்ததாகடாக்டர் ஜாகிர் நாயக்கின் டிவிடிக்கள் எனக்கு இரு நாட்களுக்கு முன் வந்தது. ‘ஒரு நாளுமில்லாத வழக்கமாக, இது என்னஎன்று அவரைத் தொடர்பு கொண்டதில், ‘இல்லை. நீங்கள் இவரது பேச்சைக் கேளுங்கள். எங்கள் மதத்தைப் பற்றி பேசுவதற்குக் கூடவா, உரிமையில்லைஎன்றார்.

படித்த மிதவாத எண்ணம் கொண்ட சாதாரண இஸ்லாமியர்களின் பொதுவான பதட்டத்தை என்னால் தொலைபேசியிலேயே உணர முடிந்தது.

அந்த டிவிடிக்களை தொடக்கூட எனக்கு நேரமோ, பொறுமையோ இல்லை என்றாலும், போரடித்துப் போன பின்னிரவு நேரங்களில்கூட்டத்தினரின் கேள்விகளுக்கு ஜாகிர் நாயக்பதில் கூறுவதைக் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். சங்கடமான கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் கூறி அவர் முடிக்கும் கடைசி வாக்கியம் தொடங்கும் முன்னரே மொத்த கூட்டமும் கை தட்டினாலும் கேள்வி கேட்டவர் அவர் இஸ்லாமியர் அல்லாதவர் எனில்திருப்தியின்மை முகத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிய அசட்டுப் புன்னகையோடு நின்று கொண்டிருப்பார்.

பிற மதங்களை இஸ்லாத்திற்கு எதிராக மட்டுப்படுத்துவதில் கூட சில சமயங்களில் நான் கேட்க நேரிட்ட பெந்தேகொஸ்தே பாஸ்டர்களின் பேச்சுக்களில் அதிக ஆபத்தை உணர்ந்திருக்கிறேன்.

பெந்தேகொஸ்தே என்ன மற்ற சில கிறிஸ்தவ போதகர்கள் கூட விலக்கல்ல.

செய்தித் தாளிகளில் வரும் பெரிய விபத்துச் செய்திகளைப் பாருங்கள். எல்லாம் இந்துப் பெயர்களாக இருக்கும். கிறிஸ்தவப் பெயரே இருக்காது. கர்த்தருக்கு ஸ்தோத்ரம். அல்லேலூயாஎன்று எளிதாகக் கூறிப் போனார் ஒரு போதகர்.
வீட்டுக்கு வந்ததும் அம்மாஅவர் கரெக்டா சொன்னார் பாத்தியாஎன்றார் பெருமையாக. ‘போம்மா, அமெரிக்காவுல ஆக்ஸிடெண்ட் நடந்தா அவ்வளவும் கிறிஸ்தவப் பெயராக இருக்கும்என்றேன்.

கிறிஸ்தவர்களை தர்மசங்கடத்தில் நெளிய வைத்துக் கொண்டிருக்கும் உமாசங்கர் அரசு ஊழியராக இருந்து கொண்டே பிற மதங்களை வெளுத்துக் கட்டுவதைக் கூட சகித்துக் கொள்ளும் அளவிற்கு பேச்சுரிமையை வளர்த்துக் கொண்டுள்ள நாம் ஓரளவிற்கு அதை தன்மையாகவே கையாளும் ஜாகிர் நாயக்கை துரத்துவோம் என்றால், அதை எப்படிச் சொல்வது, இஸ்லாம்ஃபோபியா என்றா?

இதுதான் இவரது குற்றச்செயல் என்று ஏதும் குறிப்பிடாமலேயே, ‘கைது செய்’ ‘தடை செய்’ ‘முடக்குஎன்று சில ஊடகங்கள் கூக்குரலிடுவதின் காரணமும் அதுதான் இருக்க முடியும்.

தூய்மைவாதம் என்பது அனைத்து மதங்களிலும் ஏன், சித்தாந்தங்களிலும் தோன்றுவதுதான். வன்முறையை, அழுத்தத்தை நம்மீது திணிக்காதவரை அதற்கான உரிமையை நாம் மறுப்பது பேச்சுரிமைக்கான அவர்களது அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.

கொடூர பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் இவரது பேச்சுக்களால் வசீகரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. மகாத்மா காந்தியின் பேச்சால் வசீகரிக்கப்பட்ட காங்கிரஸ்காரர்களில் சிலர் கூட ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறையில் ஈடுபட்டார்கள்.

டாக்டரைப் போல கல்லூரிக்குப் போய் ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டு கோட்டும் சூட்டும் போட்டு மேடைகளில் பேச வேண்டும், அவரைப் போல புகழடைய வேண்டும் என்றும் வசீகரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்களை மறந்து விடுகிறோம்.

இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரையும் அப்துல் கலாமோ, ஆமிர் கானோ வசீகரிக்க முடியுமானால் எனக்கு மகிழ்வே. ஆனால் மதத்தால் கட்டுண்ட நிலையில் பெருவாரியான இளைஞர்கள்/ யுவதிகள் நிற்கும் நிலையில் அவர்கள் முன் இருப்பது இரு தேர்வுகள்; ஒரு பக்கம் கல்வியால் தன்னை முன் நிறுத்தும் டாக்டர் ஜாகிர் நாயக். மறுபக்கம் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காமல் துப்பாக்கியைத் தூக்கி முக அழகால் தன்னை முன்னிறுத்தும் பர்ஹான் வானி.


டாக்டர் ஜாகிர் நாயக்களை அனுமதிப்பது புத்திசாலித்தனம்

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....