Monday, 12 December 2016

தேசியக் கொடி...

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதோடு, திரையிலும் தேசியக் கொடியின் படம் காண்பிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் வேண்டுமானால் திரையில் தேசியக் கொடி என்பது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் எழுபதுகளின் சிறுவர்களாகிய எனக்கும் எனது நண்பனுக்கும் மூவர்ணக் கொடி படம் ஏற்படுத்திய உள்ளக் கிளர்ச்சியை சொல்லிப் புரிய வைக்க இயலாது.

பின்ன, தேசியக் கொடி பிலிம் அவ்வளவு ஈஸியா கிடைக்காது.

பிலிம்?

ஆமாம், நாற்பது வருடங்களுக்கு முன்னால் ‘ஹோம் தியேட்டர்’ என்றால் வீட்டு ஜன்னலை எல்லாம் மூடி அறையை இருட்டாக்கி, கதவை மட்டும் கொஞ்சமாக திறந்து அந்த இடுக்கு வழியாக வெளியே வெயிலில் நிறுத்தி வைத்த கண்ணாடியிலிருந்து வரும் ஒளியை சுவற்றில் அடிப்பதுதான்.

ஓளிக்கீற்றில் இரண்டு ஒளிப்பெருக்கிகளை வைத்து இடையில் ஒரு பிலிம்’மை பிடித்தால் திரையில் தோன்றும் பிம்பங்கள் அன்று தந்த மகிழ்ச்சியும் வியப்பும் இன்று எந்த ஒரு ஐமேக்ஸ் திரையும் தரும் உணர்வுகளுக்கு நிகரானது.

அதற்கான சிரமங்கள் அப்படிப் பட்டது.

வெளியே நிறுத்தி வைத்த கண்ணாடி விழுந்து விடும். அல்லது வெயில் போய் விடும். சில சமயம் மூடிய ஜன்னலை யாராவது சேட்டைக்கார பையன்கள் திறந்து விடுவார்கள். அவர்களைக் கூட சமாளித்து விடலாம். இந்த லென்ஸுகளையும் பிலிமையும் சீராகப் பிடிப்பதற்குள், சம்பந்தப்பட்டவர்களுக்குள் ஏற்ப்படும் சண்டைகள்தாம் பல சமயங்களில் வசனங்களாக இருக்கும்.

பிலிம் என்பது தியேட்டர்களில் அறுந்து போன பிலிம் ரோலில் இருந்து ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு மூன்று மூன்றாக வைத்துக் கட்டி கடைகளில் விற்கப்படுவது. துரதிஷ்டமாக வந்த படமே திரும்பவும் கிடைக்கும். அதை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

எழுத்து பிலிம் என்றால் டைட்டில் கார்ட். அது சில சமயம் கிடைக்கும் என்றாலும் அரிதிலும் அரிதாக ‘வணக்கம்’ ஒற்றைச் சொல் சிலரிடம் மட்டுமே இருக்கும். வெயிலுக்கு பதில் மின்சார பல்ப், சுவற்றுக்கு பதிலாக வெள்ளை வேட்டி என்று ‘ஹ டெக்’காக சில புத்திசாலிகள் மற்ற சிறுவர்களிடம் காசு வசூலித்து அறைக்குள் அனுமதிப்பார்கள்.

நானும் ஒரு முறை காசு கொடுத்துப் பார்த்து இருக்கிறேன். காரணம், அவனிடம் தேசியக் கொடி பிலிம் இருப்பதாகவும் கடைசியில் அது காட்டப்படும் என்று சொன்னதாலும்தான். ஏனெனில் கடைகளில் திரைப்பட பெயர்களில்தாம் பிலிம்கள் கிடைக்கும். தேசியக் கொடி பிலிம் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. நானும் என்னைக் கூட்டிப் போன நண்பனும் முதலிலேயே பிலிமை வாங்கி ஆச்சரியமாகப் பார்த்த பின்னர்தாம் காசு கொடுத்தோம்.

வழக்கமாக சினிமா தியேட்டர்களில் ‘ஜன கன மன’ என்ற பாடலோடு தேசியக் கொடி பறக்கும் போது அது ஏதோ படம் முடிந்து விட்டது, கிளம்புங்கள் என்ற சமிக்ஞை என்பது போல தட்டுத் தடுமாறி வெளியேறுவது போல அல்லாமல் அன்று திரையில் தோன்றிய மூவர்ண தேசியக் கொடியைப் பார்த்தவுடன் உணர்ச்சி வெள்ளத்தில் கைகளைத் தட்டினோம்.


-oOo-


‘என் பர்த் டே’வுக்கு என்ன கிஃப்ட்?’

‘ஏன் எதுனாலும் வாங்கித் தாரேன்’

‘ம்ம்ம்ம்… ஒரு புரஜெக்டர்’

‘புரஜெக்டரா? அது எதுக்கு?’

‘சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை. அதான்’

‘வாங்கிக்கோங்க, சரி எவ்ளோ விலை?’

நான் சொன்ன விலையை கேட்டு எனக்கு மட்டும் அதிர்ச்சியாயிருந்தது.

அதுக்கென்ன என்று லேசாக வீட்டில் சொல்லி விட்டாலும் எனக்கு வாங்கும் வரை பயம்தான், இது தேவையா என்று. ஆனால், கண்ணாடி வெளிச்சத்தில் காட்டிய படம் தொடங்கி நான் அண்ணன் எல்லாம் சேர்ந்து மொத்தமாக பணம் போட்டு சேவியர்ஸ் ஸ்கூல் டிராயிங் வாத்தியாரிடம் பத்து ரூபாய்க்கு வாங்கிய அந்த லைட் வச்ச கார்ட் போர்ட் பாக்ஸ் புரஜக்டரில் பாத்த பிலிம் படங்கள், பின்னர் எப்போதும் ‘பேசும் படம்’ புத்தக விளம்பத்தில் பார்த்து மட்டுமே ஏங்கிய அந்தக் குட்டி புரஜக்டர், அமெரிக்காவிலிருந்து வந்த உறவினர் தனது தோளில் தாங்கிக் கொண்டிருந்த 8 எம் எம் மூவி கேமரா எல்லாம் மனதில் வேகமாக ஓடி மறைய கண்ணை மூடிக் கொண்டு வாங்கி விட்டேன்.


இப்ப கேமரா, புரெஜக்டர், ஸ்க்ரீன், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கு. தேசியக் கொடியும் பாடலும்தான் இல்லை…

Thursday, 8 December 2016

திங்கிங் ஆன் மை ஃபீட் (சாருஹாசன்)

கமல்ஹாசனை இப்போது எனக்கு ரொம்ப பிடிக்கிறது. அவரது திரைப்படங்களுக்காக என்றால் மறுபடியும் ஏமாந்து போவீர்கள்.

நேற்று படித்து முடித்த புத்தகம்!

அவர் ஒரு வழக்குரைஞர் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அவரிருந்த ஊரை வைத்து ஏதோ ‘ஸ்மால் டைம்’ வக்கீலாக இருந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரோ அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமான வக்கீலாக இருந்திருக்கிறார். அதை விட அப்போதைய ஆளும் கட்சியில் மாவட்ட அளவில் நிர்வாகிகளை தீர்மானிக்கக் கூடிய அபரிதமான அதிகாரம் அவரிடமிருந்திருக்கிறது.

வைணவர். ஆனால் அவர் தனது குருவாக கருதியது அவருடன் அரசியல் கைதியாக சிறையில் இருந்த யாகூப் ஹாசன் என்ற இஸ்லாமியர்.  அந்த அபிமானத்தில் தனது மகன்களுக்கு அவர் வைத்த பெயர்கள் சந்திரஹாசன், சாருஹாசன் மற்றும் கமலஹாசன்.

ஸ்ரீனிவாசன் ஐயங்கார்!

சொல்லிக் கொள்வதற்கு எவ்வளவோ இருப்பினும், கமல்ஹாசன் தனது தந்தையைப் பற்றி பேட்டிகளில் அதிகம் பெருமையடித்துப் பார்த்ததில்லை. நான் கமலஹாசன் பள்ளிக்கே செல்லாததை வைத்து ஏதோ ஏழ்மை அல்லது அசாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்று நினைத்து வந்தேன்.

நண்பர் ஒருவர் கொடுத்தனுப்பிய சாருஹாசனின் ‘திங்கிங் ஆன் மை ஃபீட்’ என்ற ஆங்கில புத்தகத்தை படிக்காமலிருந்தால், சாருஹாசன் கூட ஏதோ தம்பியின் அடைக்கலத்தில் காலத்தை ஓட்டிய மோசமான நடிகர் என்றே கருதிக் கொண்டிருந்திருப்பேன்.

சாருஹாசன் ஐம்பதுகளிலிருந்து முப்பது வருடங்களாக சிறந்த ஒரு குற்றவியல் அதுவும் ராமநாதபுரம் மதுரையில் டிரையல் வழக்குரைஞராக இருந்திருக்கிறார் என்பது நான் அறியாதது.

‘டிரையல் கோர்ட் வக்கீல் தொழிலில் உள்ள சுவராசியம் ஹைகோர்ட்டில் இருக்காது’ என்று எனது அனுபவக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டேன். சாருஹாசனின் இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அது எவ்வளவு உண்மை என்று புரியும்.

சாருஹாசனின் வக்கீல் தொழில் அனுபவங்களில்தாம் எவ்வளவு சுவராசியங்கள். இம்மானுவேல் சேகரனுக்கும் வழக்கு நடத்தியிருக்கிறார். அவரைக் கொலை செய்த வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கும் பெயில் தாக்கல் செய்திருக்கிறார். அதுவும் நக்கலான தனது பதில்களால் குறுக்கு விசாரணை செய்த வக்கீலையும் அவரோடு சேர்த்து கோர்ட்டையும் முட்டாளாக்கியதற்காக இம்மானுவேல் சேகரன் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிக்கை கொடுக்கப்பட்டதும் அதை சாருஹாசன் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்ததும் படித்து அனுபவிக்க வேண்டும்.

மதுரை இராமநாதபுர மாவட்ட வழக்குரைஞர்கள் எப்படி இந்தப் புத்தகத்தை தவற விட்டார்கள் என்று தெரியவில்லை. டிரையல் வழக்குகளில் உள்ள நுணுக்கங்கள், சூழ்ச்சிகள். ஏமாற்றங்கள், களிப்புகள் என்று சாருஹாசனின் அனுபவங்களில் ஒவ்வொரு டிரையல் வழக்குரைஞர்களும் தங்களது கதைகளை உணர்வார்கள்.

உண்மையில் புத்தகத்துக்கு தலைப்பு ‘ஆர்ட் ஆஃப் கிராஸ் எக்ஸாமினேஷன்’ என்று வைத்திருக்க வேண்டும். பல்வேறு சட்டக் கருத்துகளோடு ஒவ்வொரு வழக்கிலும் தனது குறுக்கு விசாரணை பற்றி போகிற போக்கில் சொல்வது போல பேசுமொழியில் சாருஹாசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் அனைத்து இளம் வழக்குரைஞர்களும் ஜாலியான பாடமாக இருக்கும். ஆங்கில நடைதான் கொஞ்சம் தட்டையாக இருக்கிறது.

வழக்குரைஞர்கள் எழுதியது என்றால் பொதுவாக உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பற்றி மேட்டிமைத் தனத்தோடு இருக்கும் சூழலில் கீழமை நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய தனித்தன்மையோடு இருக்கும் இந்தப் புத்தகம் எழுத்தாளர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டு தமிழில் எழுதப்பட்டிருந்தால் பெருவாரியான வழக்குரைஞர்களையும் வாசகர்களையும் சென்றடைந்திருக்கும்.


ஆயினும் இப்போதைய வடிவிலேயே இப்புத்தகத்தைப் படிப்பதான அனுபவம் வக்கீல்களுக்கு உற்சாகமாயிருக்கும். மற்றவர்களுக்கு பொறாமையாயிருக்கும்….

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....