Monday, 5 December 2016

இயங்காமல் நின்ற இரவு

“சார், எனக்குச் சொல்லியிருக்க வேண்டியதுதானே. நான் கொடுத்து அனுப்புகிறேன்” வெள்ளிக்கிழமை காலை ஃபோனில் பேசிய க்ளையண்ட் மாலையில் மீண்டும் பேசினார்.

“சாரி சார். நான் வரமுடியவில்லை. இன்னொருத்தரை அனுப்பியுள்ளேன். உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கிறார்” என்றார்.

“இல்லை. பேங்கிலேயே கொடுப்பதாகச் சொன்னார்கள்’ என்றாலும் கேட்கவில்லை.

வெளியே சென்றால், இருட்டிலிருந்து ஒருவர், “சார் கொடுத்து விட்டாங்க. வரமுடியலயாம்” என்று நூறு ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை நீட்டினார்.

ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தால், அவர்களது வேலையில் கவனமாயிருந்த க்ளார்க்கும், டைபிஸ்டும் கண்ணில் பட்டார்கள். மனதில் எதோ உணர்வு பொங்க, “செலவு பண்றதுக்கு பணம் வச்சுருக்கீங்களா, வேணும்னா கேட்டு வாங்கீங்க” என்றேன்.


-oOo-


“ஐம்பதாயிரம் பீஸ் வாங்கியிருந்தாக் கூட அப்படி இருந்திருக்காது. அந்தப் பத்தாயிரத்தை கையில் வாங்கும் போது ஏதோ குற்றம் செய்யறது மாதிரி அன் ஈஸியா இருந்தது” சனிக்கிழமை காலை வங்கிக்கு செல்லும் வழியில் மனைவியிடம் கூறினேன்.

வங்கி அலுவலகத்திற்குள் இன்னொரு ஆள் உள்ளே போக முடியாத அளவிற்குக் கூட்டம்.

அக்கவுண்ட் ஹோல்டர் என்ற ஹோதாவில் உடனடியாகக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு காரை கிளப்பிய போது, “இதுல ஒரு யூஸ். போர் வந்தால் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பயிற்சி மாதிரி இருக்கிறது. வார்-டிரில்” என்று சொல்லிவாறே வங்கியிலேயே விட்டு விட்டு வந்த கூட்டத்தை பார்த்த போது மீண்டும் ஒரு வித குற்ற உணர்வு.


-oOo-


‘என்னத்தை கேஸ் படிக்கிறது’ சனிக்கிழமை மாலை எழுந்த வெறுப்புணர்வில் எங்காவது வெளியே ஒரு ரவுண்ட் போய் வரலாம் என்று குடும்பத்தோடு கிளம்பி மில்லேனியம் மாலுக்குள் புகுந்தால், ஒரு ஈ, காக்கை இல்லை.

அங்கிருந்த ஒரே வக்கீல் நண்பரும், ‘ஐநூறு வாங்க மாட்டேன்னு சொல்றாங்க சார், பில்லுதான் போடறீங்களேன்னு கேட்டாலும், அபிஷியல் பாலிஸியாம்” என்றார் கையிலிருந்த பாப்கார்னை கொறித்தபடி.

அவர் சொல்லியதற்காகவே ஏதோ ஒரு வெறியில் அந்தக் கடையில் நுழைந்து சில மாதங்களாகவே வாங்க வேண்டுமென்று தள்ளிப் போய்க் கொண்டிருந்த செருப்பு ஒன்றுக்கு இரண்டு ஜோடியாக வாங்கிக் கொண்டு, கவுண்டரில் நூறு ரூபாய்களாக கொடுத்த போது, அந்தப் பணியாளரின் முகத்தில் தோன்றியது வியப்பா, அதிர்ச்சியா அல்லது அது என் பிரமையா என்றிருந்தது.

“பாப் கார்ன் வாங்கிக் கொடுங்க” என்ற மனைவிக்கக பாப் கார்ன் சொல்லி விட்டு திரும்பினால் கடை சிப்பந்தி டை அணிந்த அவரது மேலாளரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார், “அங்க பார், நம்மளைப் பத்திதான் பேசுறாங்க போல. போலீஸுக்கு சொல்லப் போறாங்களோ”

நகைச்சுவையாகச் சொன்னாலும், நிசமாகவே இனம் புரியாமல் நிறைந்திருந்த அச்ச உணர்வைக் கண்டுதான் எனக்கு சிரிப்பாக இருந்தது.


செருப்பு டப்பாவை போட்டுக் கொடுத்த பையுடன் மால் படிகளில் இறங்கிய போது, வெறிச்சோடிக் கிடந்த சாலை முழுவதும் ஆயிரம் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வில் என் உலகம் நேற்று இரவு இயங்காமல் நின்று போயிருந்தது…

(13/11/16 அன்று எழுதப்பட்டது)

Sunday, 4 December 2016

புதிய இந்தியா, புதிய கருப்பு பணம்

“சிவாஜியை விடு படிச்சவர். பிச்சைக்காரனுக்குக் கூட தெரிஞ்சிருக்கு. இந்த ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு இவ்வளவு நாள் தெரியலையே, கறுப்பு பணத்தை இவ்வளவு ஈசியா ஒழிக்க முடியுமுன்னு”

“அதானே, இதுல வேற நோபல் பரிசு வாங்கின அமர்த்ய சென், வாங்கியிருப்பேன்னு சொன்ன சுப்பிரமணியன் சுவாமி எல்லாம் இங்க இருக்காங்க”

“ரெண்டு பேரும் இங்கே வாங்க” மகள்களை அழைத்தேன்.

“அந்தா ரோட்டுல காய்கறிய போட்டு விக்கிறாங்கல்ல. அந்தம்மாகிட்ட இருபதாயிரம் ரூபாய் இருக்குன்னு வச்சுக்குவோம்”

“சரி”

“இனிமே அவங்க பேங்க அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல அதப் போடனும்”

“ஆமாம். அது அக்கவுண்ட்ல வந்த பணமாயிடும்”

“சரிதான், அப்புறம் அந்தம்மா ஜனவரியில் அதிலிருந்து பதினைந்தாயிரம் எடுத்து கமிஷன் வியாபாரிகிட்ட காய்கறி வாங்கி அதை இருபதாயிரத்துக்கு வித்தா, அவங்க வருமானம் ஐந்தாயிரம்”

“அவங்க வருமானம் வரிவிலக்கு லிமிட்டுக்குள்ளத்தான இருக்கும், அப்புறம் எப்படி அது கறுப்பு பணமாகும்?”

“கறுப்பு பணம் இல்லை என்றாலும். அது அக்கவுண்டில் வராத பணம்”

“அதனால?”

“அதுல நூறு ரூபாய் அந்தம்மா காய் விக்கிற ரோட்டில் காவலுக்கு நிக்கிற போலீசுக்கு மாமூம் கொடுத்தால், அந்தப் போலீஸ்காரர் கையில் நூறு ரூபாய் அக்கவுண்டில் இல்லாத பணம். இப்படியே அந்தப் போலீஸ்காரர் நிறையப் பேரிடம் வாங்கினால், அது கறுப்புப் பணமாக மாறி விடும்”

“போலீஸ்காரர் மகன் புதிய இந்தியாவில் வெளியாக இருக்கும் ரஜினி படத்துக்கு நூறு ரூபாய் டிக்கட் ஐநூறு ரூபாய்க்கு வாங்கினால் போலீஸ்காரரின் கறுப்பு பணம் தியேட்டர் முதலாளி கையில் நானூறு ரூபாய் அக்கவுண்ட் இல்லாத பணமாகப் போய் அதுவும் கறுப்பு பணமாக மாறும்”

“தியேட்டர் முதலாளி கையில் நிறைய கறுப்பு பணம் சேர்ந்து அதை அவர் மகன் கொண்டு போய் க்ரே மார்க்கெட்டில் ஒரு ஐபோன் வாங்கினால் கறுப்பு பணம் கறுப்பு பணமாகவே இருக்கும். மாறாக ஆப்பிள் கடையில் பில் போட்டு வாங்கினால், கடைக்காரர் கையில் அது வெள்ளைப்பணமாகி விடுகிறது”

“சரி, அப்படி என்றால் ஐபோன் பில்லை வைத்து தியேட்டர் முதலாளியின் மகனை பிடித்துவிடலாம் அல்லவா?”

“முடியும்தான். ஆனால் இந்தியாவில் நடக்கும் கோடிக்கணக்கான விற்பனைகளையும் சோதிப்பதற்கான ஆள்பலம் நமது வருமான வரித்துறையிடம் இல்லையே”

“ஒருவேளை, இம்மாதிரியான பொருட்களுக்கான விலை கிரடிட் கார்ட் மூலமே பெறப்பட வேண்டும் என்று உத்தரவிட்டால்?”

“பொருட்கள் வாங்கப்படுவது குறைந்து பொருளாதாரம் பணாலாகி விடும் அபாயம் இருக்கிறது”

“அப்ப, இந்த நடவடிக்கை?”

“ஏற்கனவே எடுத்ததுதான். ஆனால் ஜனதா ஆட்சியில் ஒழித்தது ஆயிரம் ரூபாய் நோட்டு. பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் அதைப் பார்த்ததேயில்லை. ஆனால் இது அதிரடி ஏறக்குறைய நாட்டில் புழங்கும் மொத்தப் பணத்தையும் மாற்றுவதற்கு சமம். அதீத துணிச்சலான முடிவுதான்”

“இது ஆரம்பம்தான் என்கிறார்கள். சிங்கப்பூர் என்றால் சரி இந்தியா மாதிரி நூறு கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அதுவும் அதில் கணிசமானவர்கள் அடிப்படை தேவைகளுக்கே தள்ளாடும் நிலையில் பணப்பரிமாற்றம் முழுவதும் அக்கவுண்டுக்குள் வர வேண்டுமென்றால், குறைந்தது பத்தாண்டுகள் பிடிக்கலாம். ஆனால் அதுவரை அந்த ஆட்சியும் அரசியல் குறிக்கோளும் இருக்க வேண்டுமே?”

“அப்ப இதில் உனக்கு சந்தோஷமில்லையா?”


“முந்தா நேத்து லஞ்சம் வாங்கினவன் இன்னைக்கு என்ன பண்ணுவான்னு நினைச்சா ஜாலியா இருக்கு. ஆனால் அந்த காய்கறி விக்கிற அம்மா மிச்சம் வச்ச அந்த அஞ்சாயிரம் ரூபாய் இனிமே பேங்குக்குத்தான்னு நினைக்கிறப்போ வருத்தமாயும் இருக்கு”

(09/11/16 அன்று முகநூலில் பகிர்ந்தது)

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....