Sunday, 14 February 2016

ஒன்லி காட் பர்கிவ்ஸ் (2013) ஆங்கிலம்

‘மிஸ்டர் பீன்’ஸ் ஹாலிடே’ என்ற படத்தைப் பார்த்திருக்கலாம். அதில் கார்ஸன் க்ளே என்ற இயக்குஞர் ஒரு கதாபாத்திரம். அவர் இயக்கிய ‘ப்ளேபாக் டைம்’ என்ற படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும். படத்தின் மொத்த காட்சியிலும் இயக்குஞர், பின்னணியில் அமானுஷ்ய இசையில் நடந்து வந்து கொண்டேயிருப்பார். விருது வாங்கவென்றே தயாரிக்கப்படும் திரைப்படங்களை கிண்டலடிக்கவே அந்தக் காட்சியிருக்கும்.

கல்லூரியில் படிக்கையில் மலையாள விருதுப் படமான ‘சிதம்பரம்’ பார்க்க சென்றிருந்தோம் மதுரையில் சக்தி தியேட்டர் என நினைக்கிறேன், மெல்ல நகரும் ஒவ்வொரு காட்சியிலும் மதுரை ரசிகர்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர், காலைக் காட்சி வேறு. ஒரு காட்சியில் ஸ்மிதா பாட்டீல் புழக்கடையில் பாத்திரங்களைப் போட்டு கழுவுவார். தியேட்டரே நிசப்தமாக இருக்க இருட்டிலிருந்து ஒரு குரல், ‘நல்ல வேளை கொஞ்சம் பாத்திரங்கதான் இருக்கு. சீக்கிரம் கழுவி முடிச்சுருவா’

‘ப்ளேபாக் டைம்’ ரோவன் அட்கின்ஸனின் கிண்டல் என்றாலும் அதைப் போலவே ஆனால் சீரியஸான படத்தில் ஞாயிறு இரவு மாட்டிக் கொண்டேன். ரியான் கோஸ்லிங், க்றிஸ்டின் ஸ்காட் தாமஸ் என்ற பெயர்களைப் பார்த்து ஏதோ ஹாலிவுட் சண்டைப்படம் என்று நினைத்து விட்டேன்.

போஸ்டரில் கோஸ்லிங் முஷ்டியை மடக்கிக் கொண்டு நிற்கிறாரே என்று பார்க்காதீர்கள், முஷ்டியை உயர்த்துவதோடு சரி, ஒரு அடி கூட அடிக்க முடியாமல், நடுத்தர வயது தாய்லாந்து போலீஸ்காரர் ஒருவரிடம் நாயடி பேயடி பட்டு மூஞ்சியெல்லாம் ரத்தக் களறியாகிவிடுகிறது. அந்தப் போலீஸ்காரர் படம் முழுக்க ஏதும் பேசாமல் மெல்ல நடந்தபடியே வருகிறார். பட்டாக்கத்தியை உருவி பார்ப்பவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுகிறார். படத்தைப் பார்க்கிறேன் என்று கிளம்பி யாரும் அவரிடம் சிக்கி விட வேண்டாம் என்று எச்சரிக்கவே இப்பதிவு.

பார்த்துதான் தீர வேண்டுமென்றால், படத்தை அணைத்து விட்டு பின்னணி இசையை மட்டும் தரமான ஹெட்ஃபோனில் கேட்கவும்.

சமீபத்தில் தாய்லாந்துக்கு குடும்பத்துடன் போய் வந்த வக்கீல் நண்பர் ஒருவர், ‘சார், தாய்லாந்து ஃபேமிலியோட போற ஊர் சார்’ என்றார். அப்புறம் ஏன் படங்களில், இப்படியே காண்பிக்கிறார்கள்?

மதுரை
11/02/15

ஜெயமோகனுக்கு கிடைக்காத பிரியாணி

சனிக்கிழமை காலை.

காப்பிக் கோப்பையை மெல்ல பக்கத்தில் வைத்து செய்தித்தாளைப் பிரித்ததும், தொலைபேசி அழைத்தது.

‘கடையநல்லூரிலிருந்து பேசுகிறேன்’

‘ஆங், பாய் இன்னைக்கு வரச் சொல்லியிருந்தேன் இல்ல. சரி, வாங்க’

‘சரி, நாங்க வந்துவிடுகிறோம். அப்புறம்…உங்களுக்கு சாப்பாடும் கொண்டு வருகிறோம்’

‘ஐயோ, அது எதுக்கு? அதுவும் சனிக்கிழமை ஜூனியர்ஸ் ஆபீஸில் எல்லோருக்கும் இங்க வீட்டில்தான் சமைப்பாங்க. அவங்க எல்லாமே இங்கதான் சாப்பிடுவாங்க’

‘சார், சமைக்க வேண்டாம்னு சொல்லுங்க. எல்லோருக்கும்தான் எடுத்துட்டு வருகிறோம்’

கடைக்குச் செல்ல தயாராக நின்று கொண்டிருந்த மனைவியிடம், ‘உனக்கு இன்னைக்கு ஃப்ரீ் டே! பிரியாணி வருது' என்றேன்.

சாப்பிடும் போது மனைவி கேட்டார், ‘நானா எங்கப்பா வந்து ரொம்ப நாளாச்சே!’

நானா மேலப்பாளையத்தில் உள்ள கல்வத் நாயகம் தைக்காவைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களுக்கும் முன், இதே மாதிரிதான், ‘சார் இந்த கிறிஸ்மஸுக்கு உங்களுக்கு பிரியாணி தைக்காவிலிருந்து அனுப்பணும்னு வாப்பா சொல்லியிருக்காங்க’ என்று ஆரம்பித்தார்.

‘இல்ல நானா, நம்ம வீட்டுல ஒவ்வொரு கிறிஸ்மஸுக்கும் எல்லா நண்பர்களையும் அழைப்போம். அதனால நிறைய பேர் இருப்பாங்க, வாணாம்’ என்றேன்.

‘நீங்க சும்மா இருங்க சார். ஒரு ஐநூறு பேர் வருவாங்களா?’

‘ஐயோ, அவ்வளவு இருக்காது நானா. ஒரு நூறுக்குள்ள வருவாங்க’

கிறிஸ்துமஸ் அன்று மேலப்பாளையத்திலிருந்தே சமையல் பொருட்கள், ஆட்கள் சகிதம் மதுரை வந்து பிரியாணி சமைத்து, அடுத்த நாளும் வைத்து சாப்பிட்டோம்.

என் மனைவிக்கும் நானா கொண்டு வந்த பிரியாணி நினைவுக்கு வந்திருக்க வேண்டும். அவராகவே, ‘நானா பிரியாணி ஹைதராபாத் பிரியாணி. இது நம்மூரு சீரக சம்பா பிரியாணி’ என்றார்.

நான் ஏதோ நினைப்பில் ‘நானா ஷிர்க். இவங்க தவ்ஹீத்’ என்று எனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டு வீட்டில் சமைத்த பாயாசத்துடன் கணணி முன் உட்கார்ந்தால்,
இந்து- முஸ்லீம் மதஒற்றுமை எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய் நெடுநாட்களாகின்றன. கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்?
என்று ஜெயமோகன் தனது தளத்தில் எழுதியதை மையப்படுத்தி முகநூல் கொதித்துக் கொண்டிருந்தது.

நான் மட்டும் ஒரு இறைமறுப்பாளனாக இல்லாமலிருந்தால், அந்த நேரத்தில் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்பியிருப்பேன்.

மதுரை
09/02/16

பெங்களூர் நாட்கள்

மூஞ்சிப் புத்தகம் முழுக்க ‘விசாரணை’யின் வெப்பத்தில் எரிந்து கொண்டிருக்க, நான் நேற்று 'பெங்களூர் நாட்க’ளைப் பார்த்தேன் என்பதை சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டுதான் இதுவரை சொல்லவில்லை.

இரண்டு நாட்களாக மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கும் தீவிர சினிமா ரசிகர்கள் ‘அற்பப் பதரே’ என்று என்னை ஒதுக்கி வைத்து விடுவாரகளோ என்று வேறு பயமாக இருக்கிறது.

அலுவலகத்தில் இரவு மணி ஒன்பதைத் தாண்டி ஒன்பதரையை நெருங்கவும், ‘போதும் இன்றைக்கு’ என்ற அசதியில், படத்துக்குப் போனால் என்ன என்று இணையத்தில் தேடினால் ‘விசாரணை’க்கு டிக்கட் இருந்தது.

‘படத்துக்குப் போலாமா?

‘ஓ’ அம்மா, மகள் இருவர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்ப்; வீட்டுத் தியேட்டரில் அப்படி என்னத்தான் இல்லையோ?

‘சரி, கிளம்புங்க’

‘என்ன படம்?’ மகள், அவளுக்கு பொறி தட்டி விட்டது; அவ்வளவு நம்பிக்கை!

ஏற்கனவே பார்த்து விட்ட பசங்க2 மூலம் அவளது இந்த வார ‘கோட்டா’ முடிந்து போன தைரியத்தில், ‘உனக்குத் தெரியாது. உலகப்படம் மாதிரி இருக்கும்’ என்றேன். முகம் சுருங்கி விட்டது.

திரும்பி அலுவலக அறைக்கு வந்து இணையத்தில் புகுந்தால் விசாரணை ஸ்டில்களில் சட்டையில்லாத உடம்புகள் பயமுறுத்தின. சக ஊடகவியலாளர்களிடம் படம் ஏற்ப்படுத்தியிருந்த அதிர்வலைகள் வேறு ‘சோளகர் தொட்டி’யை நினைவுபடுத்தியது.

ஒன்றுக்கு மூன்று தடவை புக் பண்ணுவதற்கு இறுதி வரை போனாலும் மகளுடைய முகமே மானிட்டரில் தெரிய, ஜாலியாக என்ன இருக்கும் என்று மறுபடியும் பார்த்ததில், ‘பெங்களூர் நாட்க’ளுக்கு கண்ணை மூடிக் கொண்டு ‘க்ளிக்’கியாகி விட்டது.

கிளம்ப மனமில்லாமல் ‘உர்’ரென்று இருந்த மகளை ஓங்கி அதட்டியதில் தியேட்டர் வரும் வரை காரின் பின் சீட்டில் விசும்பல் கேட்டுக் கொண்டிருந்தது.

‘அடடா, இது என்ன வேறு படத்துக்கு டிக்கட் எடுத்து விட்டோம்’ என்று தியேட்டருக்குள் நுழையும் போது நான் காட்டிய ஆச்சரியத்திலிருந்த பொய்’யை கண்டு பிடித்து விட்டாள். சிவந்திருந்த கண்களில் இன்னமும் கோபம் மிச்சமிருந்தது.

பெங்களூரை கடந்து எவ்வளவு தடவை போயிருக்கிறேன். தூசியும் டிராபிக் ஜாமும்தான் நினைவுக்கு வரும். கல்லூரிக் காலத்தில் போன போதுதான், படத்தில் வருவது போல அழகாயிருந்தது. அல்லது படத்தில் வருவது வேறு பெங்களூரா ஒருவேளை எனக்கு வயதாகியிருக்கலாம்...

‘படம் எப்படி?’

அது யாருக்கு வேணும்; திரும்பி வரும் போது இரவு ஒன்றரையை கடந்து விட்டிருந்தாலும், ‘அப்பா உன்னை ஏமாத்தியிருக்காங்கடா’ என்ற கிண்டலிலும் சிரிப்பிலும், கார் ஓட்டுவதே சுகமாக இருந்தது.

‘சனிக்கிழமை இரவுக்கு இது போதும். உங்க விசாரணையை எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாமே, மிஸ்டர் வெற்றி மாறன்’ என்று நினைத்துக் கொண்டேன்.

மதுரை
07/02/16

Friday, 5 February 2016

வயலட்டா வென்ட் டு ஹெவன் (சீலே) 2011

மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களால் கொண்டாடப்பட்ட முதல் பொங்கல் விழா என்று நினைக்கிறேன். லா சேம்பர் புல்வெளியில் கலை நிகழ்ச்சிளும் பரிசளிப்பு விழாவும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘தப்பாட்டம் இருக்கு. நல்ல பெரிய ட்ரூப்’ என்று நண்பர் சொல்லியிருந்தார். தப்பாட்டம் பார்த்தது எனக்கும் அதுதான் முதன்முறை. வழக்குரைஞர்கள் சிலரும் அவர்களது தாளத்திற்கு ஏற்ப ஆடினர்.

அதற்குள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த நீதிபதிகள் ஒவ்வொருவராக வர, நீதிமன்ற பதிவாளர் தனது அதீத உற்சாகத்தில் அந்தக் குழுவினரை லா சேம்பர் வாசலுக்கு கூட்டிச் சென்று நீதிபதிகளின் இருமருங்கிலும் இருந்தவாறு தப்பை அடித்தவாறு விழா நடந்த புல்வெளிக்கு அழைத்து வரச் செய்தார். நண்பருக்கு வந்ததே கோபம்...

பதிவாளராவது பரவாயில்லை. வரலாறு அறியாதவர். பிரபல தவில் வித்துவான் கூடவா, அவரது மூத்த கலைஞர்கள் கடந்து வந்த பாதையை மறந்து போவார்?

பல ஆண்டுகளுக்கு முன்னர் கானாடுகாத்தான் என்ற ஊரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நாதஸ்வரம் வாசிக்க அழைக்கப்பட்டிருந்த சிவக்கொழுந்து என்ற புகழ்வாய்ந்த கலைஞர், வியர்வையை துடைக்க வைத்திருந்த சிறு துணியானது தோளில் போடும் துண்டு என்று குற்றம்சாட்டப்பட்டு நாதஸ்வரம் வாசிக்க விடாமல் தடுக்கப்பட்டார். அந்தக் கச்சேரிக்கு சென்றிருந்த ‘உண்மையான’ அஞ்சா நெஞ்சன் அழகிரி(சாமி) மாப்பிள்ளை ஊர்வலத்தை அங்கேயே நிறுத்தி வைத்து ‘சிவக்கொழுந்து இங்கேயே உட்கார்ந்து வாசியுங்கள். நான் இருக்கிறேன்’ என்று சவால் விட பின்னர் சிவக்கொழுந்து 'துண்டு'டன் நாதஸ்வரம் வாசிக்க அனுமதிக்கப்பட்டார். கச்சேரி முடியும் வரை அழகிரிசாமி அவருக்கு விசிறிக் கொண்டே துணைக்கு நின்றாராம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. கடந்த மாதம் கலை இரவு ஒன்றில் கச்சேரி நடத்த அழைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற தவில் கலைஞர் ஒருவர், விளம்பரத்தில் அவரது படத்துடன் தப்புக்கலைஞர்களின் படத்தையும் பார்த்ததும், கோபத்தில் கச்சேரியை ரத்து செய்து விட்டாராம்.

இங்கு என்று இல்லை. உலகம் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்களின் நிலை அதுதான் போல.

சீலே நாட்டின் இரண்டாவது தேசிய கீதம் என்று போற்றப்படும் ‘க்ராஸியஸ் எ லா விடா’ (வாழ்க்கைக்கு நன்றி) என்ற பாடலை இயற்றிப் பாடிய ‘வயலட்டா பரா’ என்ற பெண்மணியின் வாழ்க்கைச் சரிதப்படமான ‘விண்ணுக்குச் சென்ற வயலட்டா’ (Violeta se fue a los cielos 2011) பார்க்கையில் எனக்கு அப்படித்தான் தோன்றியது. இசைக்குடும்பத்தில் பிறந்தவர். சிறுமியாய் இருக்கையிலேயே தந்தையை இழந்து அவர் விட்டுச் சென்ற கிடாரை மற்றும் வைத்துக் கொண்டு குடும்பத்தை தாங்கியவர். ஆனாலும் சீலே நாடு முழுவதும் அலைந்து நாட்டுப்புற பாடல்களை சேகரித்து அவற்றை இசைவடிவமாக்கித் தந்ததால்தான் சீலேவின் புதிய பாடல்கள் என்ற பெயரில் அதன் நாட்டுப்புறப் பாடல்கள் அழியாமல் மறுவடிவம் பெற்றன என்று கூறப்படுகிறது.

அநேக பாடல்களையும் ஒன்றிரண்டு புத்தகங்களையும் தந்திருந்தாலும், ஓவியம், எம்ப்ராயிட்டரி அடுத்து மண்பாண்டக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். அவரது கலைப்படைப்புகள் ஐரோப்பா சென்றிந்த பொழுது பாரீஸில்ன் புகழ்பெற்ற கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இருந்த போதிலும் ஐரோப்பாவில் செல்வந்தர்கள் கூடிய கூட்டம் ஒன்றில் பாட அழைக்கப்படும் வயலட்டா, பாடி முடித்ததும் நிகழ்ச்சி நடத்துபவர் அங்கிருப்பவர்களை உணவுக்காக விருந்து அறைக்கு செல்லும்படி வேண்டிய பின்னர் வயலட்டாவிடம், அவளுக்கு தனியே சமயலறையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறியதும் வெகுண்டு எழுந்து அவரை ஒன்று இல்லை என்று கேட்டு விட்டு கூடியிருக்கும் ஒவ்வோரு முகத்திற்கு முன்பும் ‘செவிடு’ ‘செவிடு’ என்று கோபத்தில் உறுமிக் கொண்டு செல்லும் காட்சியைத்தான் சொன்னேன்.

சீலேவில் சர்க்கஸ் கூடாரம் போன்று தனது இருப்பிடத்தைக் கட்டி அதை அனைத்து நாட்டுப்புற இசைக்கலைஞர்களும் இசைக்கும் கலைக்கூடமாக உருவாக்கினாலும் தொடர்ந்து வறுமையும் வெறுமையும் துரத்த ‘எனக்கு எவ்வளவோ அள்ளித்தந்த வாழ்க்கைக்கு நன்றி’ என்று பாடிய வயலட்டா 1967ம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் அதே கூடாரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

படத்தை இயக்கியவர் ஆந்த்ரே உட். சீலே நாட்டு சோஷலிஸ ஆட்சியாளரான அலெந்தே காலத்து நிகழ்வுகளின் பின்னணியில் ‘மச்சுக்கா 2004’ என்ற படத்தை இயக்கி நம்மில் பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தாம். இந்தப் படம் ஆஸ்கருக்கு சீலே நாட்டிலிருந்து பரிந்துரைக்கப்பட்டது. பரிசு பெறவில்லை.

வயலட்டாவின் பாடல்கள் இன்றும் பல்வேறு வடிவங்களில், பல இசைக்கலைஞர்கள் மூலமாக புதுப்புது வடிவங்களில் உயிர்த்திருக்கின்றன...

Monday, 1 February 2016

பாதசாரி


தனிப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நேற்று செங்கல்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. விடிகாலை சென்றதால் தங்க நேரிட்ட விடுதியிலிருந்து நீதிமன்றம் எவ்வளவு தூரம் இருக்கும் என்று கேட்டேன். இரண்டு கிலோ மீட்டருக்குள் என்றார்கள். வெயில் இல்லை. பருவநிலையும் இதமாக இருக்கவே, ‘ஊரையும் பார்த்த மாதிரி இருக்கும்’ என்று நடந்தே போனேன். முதலில் எந்த ஊரையும் போலவே தூசியாக இருந்தாலும் பின்னர் நீதிமன்றம் இருந்த சாலை ரம்மியமாகவே இருந்ததில் நடந்ததில் மெத்த திருப்தி.

ஆனால் மாலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த சமரச பேச்சுக்கு விரும்பியிருந்தாலும் நான் நடந்திருக்க முடியாது. கடற்கரை சாலையில் ராணி மேரி கல்லூரியிலிருந்து என்று நினைக்கிறேன், சென்னை பல்கலைக்கழகம் வரை முதலமைச்சரின் உருவம் தாங்கிய கட்-அவுட்களும் அலங்கார தட்டுகளும் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி நடைபாதையின் குறுக்காக, முழுக்கவும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

நடைபாதையை பயன்படுத்த வேண்டிய அனைவரும் பிரதான சாலையோரமாக சென்று கொண்டிருந்தார்கள்.

சாலை வசதி என்பது முதலில் நடப்பவர்களுக்கு, பின்னர் மிதிவண்டி அதற்கும் மிஞ்சியதுதான் மோட்டார் வண்டிகளுக்கு என்பதை நாம் உணர்வதே இல்லை.

வேண்டுமானால் கட்-அவுட்களை இனி பிரதான சாலையில் வைக்கட்டும். நடைபாதையில் வைத்து, ஏற்கனவே அபாயகரமான முறையில் நடந்து செல்பவர்களை மேலும் அபாயத்தில் தள்ளுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

இந்த கட்-அவுட்களுக்கு முறையாக விண்ணப்பித்து கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் வாதிடலாம். அவர்களைப் பார்த்து உயர்நீதிமன்றம் கேட்க வேண்டிய கேள்வி, ‘அவ்வாறாக கட்-அவுட் வைக்க வழங்கப்படும் உரிமம் பாதசாரிகளின் ‘வாழ்வதற்கான உரிமை’ என்ற அடிப்படை உரிமையை பாதித்தால் இரண்டில் ‘எந்த உரிமையை நாம் விட்டுக் கொடுப்பது?’ என்பதுதான்.

சொல் வேட்டை

“நள்ளிரவு ஒன்றரை மணிக்கு ஆரஞ்சு உறித்து ஒவ்வொரு சுளையாக தின்று கொண்டிருக்கிறேன்.

பளிச் பளிச்சென்று புளித்தினிக்கிறது”

விஜய் பாஸ்கர்விஜய் இளைஞர். ஆனாலும் நவீன தமிழ் இலக்கியங்களில் அதிகம் பரிச்சயமுள்ளவர் போல. தனது தினசரி குடும்ப வாழ்வில், நாம் யாவருக்கும் ஏற்ப்படும் அனுபவங்கள்தாம், தனது முகநூல் பக்கத்தில் சுவராசியமான கதைகளாக எழுதுகிறார். சில நிமிடங்களுக்கு முன்னர் அவரது மேற்கண்ட வரிகளைப் படித்ததும் ‘புளித்தினிக்கிறது’ என்ற வார்த்தை என்னைக் கட்டிப் போட்டு விட்டது.

தமிழில் புதிய வார்த்தைகளை உருவாக்குவதும், மறைந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடித்தலையும் பற்றி யோசித்துக் கொண்டே எழுந்தால் என்ன ஒரு தற்செயல்! (coincidence)

அவ்வாறு நினைத்துக் கொண்டே எழுந்ததற்குக் நேற்று வெளியிடப்பட்ட நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களின் புத்தகமான ‘சொல் வேட்டை’யை படித்துக் கொண்டே தூங்கியதுதான் காரணம்.

தினமணி படிக்காதலால் அவரது வாராந்திர ‘சொல்வேட்டை’ பற்றி அறிந்திலேன். அட்லாண்டிக் என்ற பத்திரிக்கையில் பார்பரா வால்ராஃப் என்ற பெண்மணி வாசகர்களுடன் இணைந்து கூட்டாக புதிய வார்த்தைகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய ஊக்கத்தில் (inspiration?) இத்தொடரில் நம்மிடம் புழங்கும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை வாசகர்களிடம் இருந்து கோரி, அவற்றில் பொருத்தமான ஒரு வார்த்தையை, ஏறக்குறைய ஒரு நீதிபதியின் பணியைப் போலவே ‘இதுதான் சரியான வார்த்தையாக இருக்கலாம்’ என்று முடித்து வைக்கிறார்.

தமிழில் வார்த்தைத் தேடலை முடித்து வைத்தால், குறைந்தது பத்து பேர் ‘அது எப்படி?’ என்று கிளம்பி வருவார்கள். இராமசுப்பிரமணியம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியிலிருப்பதால், இதுவரை ஏதும் பிரச்னையில்லை என்று நினைக்கிறேன்.

கம்பியூட்டருக்கு முன்பு சுஜாதா முன்னிலையில் கணிப்பொறி, கணிப்பி என்று ஆரம்பித்து இறுதியில் கணணி (அல்லது கணிணியா) என்று வந்து நிற்பதற்குள் போதும் போதும் என்று ஆனது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இணையத்தில் நான் தமிழ் பழகிய பொழுது நமது பதிவுகளுக்கு மற்றவர்களின் கமெண்ட்ஸுக்கு என்ன சொல்வது என்று பல ஆலோசனைகளுக்குப் பிறகு எதிர்வினை என்று முடிவாயிற்று. இராமகி ஜெபி ஐயா அவர்களிடம் இருந்து பல வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். கமெண்ட்ஸுக்கு முன்னிகை, ஸீரியஸாக என்பதற்கு சேரியமாக என்பதெல்லாம் புதுமையாக இருந்தது.

முதன் முதலில் நான் மரத்தடி இணையகுழுவிற்கு எழுதிய தமிழ் மடல் என்னிடம் இன்றும் உள்ளது. பண்பலை வானொலி ஆர்ஜே பேசுவதை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதியது போல இருக்கும். இப்போது நான் எழுதுவதைக் காட்டினால், உறவினர்கள் சிலர் ‘இது என்ன புரியவே இல்லையே என்கிறார்கள்’. அவர்களது தமிழை நான் கொல்கிறேன் போல.

‘பண்ணித்தமிழை’ அழிப்பதென்றால் அது இணையத்தால்தான் முடியும் என்று நினைத்திருந்தேன். மருத்துவர் ப்ரூனோ’விலிருந்து பலரைக் குறிப்பிட வேண்டும். நேற்று நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி இராமசுப்பிரமணியம் மூலமாக தினமணி அந்தப் பணியை தன்னளவில் தொடக்கி வைத்தது என்பதை அதன் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் அழுத்தமான அறிமுக உரைவீச்சிலிருந்து அறிந்து கொண்டேன்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னால் தனது வழக்கமான பாணியில் சுவையான கதை சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் வாசகர்களின் பங்களிப்போடு ‘சரி இதுதான்’ என்று நிறுத்துவது சற்று ஏமாற்றமாக இருந்தது. பத்திரிக்கையின் இட நெருக்கடி. அவருக்குள்ள வேலை நெருக்கடி என்று நினைக்கிறேன்.

புதிய ஆங்கில வார்த்தை ஒன்றிற்கு தமிழில் வார்த்தை இல்லாத பொழுது, அந்த ஆங்கில வார்த்தை சரியாகக் குறிப்பிடும் விளக்கத்தை அப்படியே தமிழ் வார்த்தையாக தேர்ந்தெடுப்பது காஃபியை ‘கொட்டை வடிநீர்’ என்று தமிழ்ப்படுத்துவது போலாகாதா? ஃப்ளாம்பாயண்ட் கவர்திறன் சரி, பாராஃபெர்னேலியா அடையாளச் சின்னம் என்னமோ மாதிரியிருக்கிறது.

ஆங்கிலத்தில் நிச கற்பனை பாத்திரங்களின் குணநலன்களை ஒத்த செயலுக்கு அவர்களின் பெயரை வைத்தே வார்த்தைகள் உள்ளன. சேடிஸ்ட், லின்ச், ட்ராகோனியன் போன்ற வார்த்தைகள் நிச மனிதர்களின் பெயர்களிலிருந்து உருவானவை. க்விக்சாட்டிக் கற்பனைப் பாத்திரம். டான் க்விக்சாட் குணநலனை வைத்து அந்த வார்த்தையை ‘இலக்கியல் ஆர்வக்கோளாறு’ எனறு முடித்து வைத்த நீதிபதியின் தீர்ப்பு எனது சிற்றறிவுக்குப்பட்ட அளவில் சரியல்ல என்பதை சொல்ல நினைத்தாலும், யாராவது ‘ஐயா, கண்டெம்ட் அவனை விடாதீங்க’ என்று போட்டுக் கொடுக்கும் சாத்தியக்கூறு இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்.

கணிதத்தில் எண்களோடு விளையாடுவது போல மொழியியலில் வார்த்தைகளோடு விளையாடுவது சுகமான அனுபவம். பாரதி ஆரம்பித்து வைத்தவர் என்று வைத்தியநாதன் கூறினாலும் சுஜாதாதான் தமிழில் வார்த்தை விளையாட்டை ஜனரஞ்சகமாக்கினார். அவரது ‘க்ளிக்’கினானை யார் மறக்க முடியும்?

நீதிபதி ஐம்பது வாரங்களுக்கு சொற்களை வேட்டையாடியுள்ளார். அல்லது அவருக்காக மற்றவர்கள் வேட்டையாடியதை மேற்ப்பார்வை பார்த்துள்ளார். தற்பொழுது மற்றவர்கள் தொடர்வதாக தினமணி ஆசிரியர் கூறினார். இராமசுப்பிரமணியம் கடுமையான உழைப்பாளி. 24 மணி நேரம் என்பது அவரது அன்றாட பணிகளுக்கு போதுமானது இல்லை என்பதை வழக்குரைஞர்கள் அறிவார்கள். அவற்றிற்கிடையிலேயும் அவர் நேரம் ஒதுக்கி வேட்டையாடியுள்ள வார்த்தைகள் நிலைக்க வேண்டுமென்றால், இணையத்தில் இந்த தொகுதி பரவலாக்கப்பட வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, இணையம் கடந்த இருபது ஆண்டுகளாக சொல்வேட்டையை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. வேட்டையாடுவதோடு இல்லாமல், வேட்டைப் பொருட்கள் மறை பொருட்களாக்கப்படாமல் பகிரப்படுவதால் நிலைத்தும் நிற்கின்றன. மற்ற ஊடகங்களுக்கெதிரான இணையத்தின் வெற்றி என்றே அதைக் கூறலாம்.

நீதிபதி இராமசுப்பிரமணியம் ஓய்வு பெற்றவுடன் நீதிமன்றத்தில் நடைபெறும் செயல்கள் புழங்கும் சொற்களுக்கான தமிழ் சொல் வேட்டையை இணையத்தில் ஆரம்பிக்க வேண்டுகோள் வைக்கலாம்.

சரி, இவ்வளவு அருமையான புத்தகம் ஏனோ அச்சிடப்பட்ட தன்மை திருப்தியளிக்கவில்லை. காகிதத்தின் தரமோ அதன் நிறமோ எழுத்துகளோ (ஃபோண்ட்) ஏதோ ஒன்று இலகுவாக வாசிக்க இடறலாக உள்ளது. ஆனால் அழகான கடின அட்டை. விலையும் 125 ரூபாய் என்பது மிக மலிவுதான்.

சொல்வேட்டை. நல்வேட்டை!

ரஜினிமுருகன்


நேற்று சுகப்ரியா’வில் ரஜினி முருகன். ஐநாக்ஸ் போல வெளியும் உள்ளும் டாம்பீகமாக இல்லை என்றாலும் ஒலி ஒளி தரம் பிரமாதமாகவே இருந்தது. ஆனாலும் படம் ஆரம்பித்ததும் ஏசியை நிறுத்தும் அல்ல குறைக்கும் பழைய சில்லறைத்தனம் போக மாட்டேன் என்கிறது போல...

ஏசியைக் கூட போடாவிட்டால் பரவாயில்லை. படத்தை முடிக்க விடாம அந்த பாட்டுகளைப் போடாமல் இருந்தால் என்னைப் போன்றவர்கள் தமிழ்படங்களை பார்க்க தைரியம் கொள்வோம். ராத்திரி வீட்டுக்குள் நுழைந்து மணியைப் பார்த்தால் அடுத்த நாள் காலை இரண்டு!

‘தன்னுடைய அப்பத்தா கொடிக்குளம் பேச்சி, ராஜ்கிரணின் வைப்பாட்டி’ என்று சொத்தில் பங்கு கேட்டு வரும் சமுத்திரகனி அதுக்கு ஆதாரமாக ஒரு போட்டோவையும், கொடிக்குளம் பேச்சிக்கு அவள் வெள்ளாமை பண்ணும் நிலத்தை எழுதிக் கொடுத்த செப்புப்பட்டயத்தையும் காண்பிக்கிறார்’

அப்படியே ‘கொடிக்குளம் பேச்சி செத்துப் போய் ஐம்பது வருசமாச்சு’ன்னு சொல்லும் சமுத்திரகனியை மடக்க சிவகார்த்திகேயன் அவள் முந்தைய வாரம்தான் இறந்ததாகச் சொல்லவும், சமுத்திரகனி சமாளித்துக் கொண்டு அவரது அப்பத்தா மேலூரில் இருக்கும் கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்.

அதுக்கு ரஜினி முருகனான சிவகார்த்திகேயனின் வருங்கால மாமனாரான வக்கீல் திருநீலகண்டன் ஏன் முழிக்கணும்? செப்புப்பட்டயத்தில் நிலம் இருக்குமிடத்தை வைத்து அது மேலூரில் உள்ள கொடிக்குளம் இல்லை என்று சொல்லியிருக்கலாமே.

அதுதான் வக்கீலாயிருப்பதன் அவஸ்தை...

ஆர்குமெண்டை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தப்புறம் ‘அந்தக் கேள்விக்கு அப்படி பதில் சொல்லியிருக்கலாமே. இதைச் சொல்லியிருந்தா வேற மாதிரியாயிருக்குமே’ என்று மண்டைக்குள் ஏற்ப்படும் குடைச்சல் ராத்திரி தூங்கப்போகும் போதும் கூட என்றில்லை, சில சமயங்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வது, நாம வாங்கி வந்த சாபம்!

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....